தவெகவின் ரெய்டுக்கு திமுக தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி... மு.க. ஸ்டாலின். - படம்: எக்ஸ். தமிழக வெற்றிக் கழகத்தின் ரெய்டுக்கு திமுக தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி மதிப்பிலான பணி நியமன முறைகேடு, ஒப்பந்த முறைகோடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேருவின் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (அக்.29) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள வீடு உள்பட சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் நாமக்கல்லில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம் வீட்டிலும், வேலூர் மாவட்ட திமுக செயலரும் அணைக்கட்டு முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமாரின் காட்பாடி காந்திநகரில் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திமுக நிர்வாகிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப சாலைவலம் நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதல்வர் மேடையில் பஞ்ச் டயலாக் என்ற பெயரில் பல மாடுலேஷனில் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது! சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த தவெக ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!” எனப் பதிவிட்டுள்ளர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
‘தவெகவின் ரெய்டுக்கு திமுக தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗