'முரசு' புயல் தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவது குறித்து... தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை - கோப்புப்படம் சென்னை: 'முரசு' புயல் சென்னையிலிருந்து சுமார் 250-260 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கும் உதவிக்கும் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாதவரத்தில் 11 செ.மீ மழையும், எண்ணூர் துறைமுகப் பகுதியில் 10 செ.மீ., நுங்கம்பாக்கத்திலும் 10 செ.மீ அளவுக்குக் கணிசமான மழை பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னைக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆரஞ்சு' எச்சரிக்கை என்பது 11 முதல் 20 செ.மீ வரையிலான "மிக அதிக" மழையைக் குறிக்கிறது. வெள்ள பாதிப்பு ஏதுமில்லை சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதை அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், பெரிய அளவிலான வெள்ள பாதிப்பு ஏதுமில்லை என்றும், சில இடங்களில் "சிறிய அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். "நகரில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், இரண்டில் மட்டும் லேசான நீர் தேக்கம் ஏற்பட்டது; அது உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது" என்றும் அனைத்து சுரங்கப்பாதைகளும் தற்போது போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதற்கு மோட்டார் பம்புகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், கூடுதல் மோட்டார்களுடன் கூடிய களப்பணியாளர் குழுக்களை மாநகராட்சி பணியமர்த்தியுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கடல் சீற்றம் அல்லது கடற்கரையோர வெள்ள அபாயத்தைத் தடுக்கவும் மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். அதீத கனமழை பெய்யவில்லை சென்னையில் உள்ள 28 கண்காணிப்பு நிலையங்களில் கனமழையும், 5 நிலையங்களில் (குறிப்பாக பாரிஸ், மணலி போன்ற வட மண்டலங்களில்) மிக அதிக மழையும் பதிவாகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இருப்பினும், எந்த இடத்திலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதீத கனமழை பெய்யவில்லை. தேங்கியுள்ள தண்ணீரை முழுமையாக அகற்றுவதற்காகக் குழுக்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்படி, மேற்கு-மத்திய மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'முரசு' புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, இது சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 290 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், காவலிக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 310 கி.மீ தொலைவிலும், ஒங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 330 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே 470 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு முதல் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில், நெல்லூர் மற்றும் நரசபூருக்கு இடையே, ஒங்கோலுக்கு அருகில், தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முரசு தீவிரப் புயல் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வட தமிழக கடற்கரையில் சென்னைக்கு கிழக்கே 180.கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. முரசு தீவிரப் புயல் தாக்கத்தால், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வட தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மேகங்கள் சூழ்ந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகரிக்கும் கடல் சீற்றம் முரசு புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கடல் சீற்றம் அதிக்கக் கூடும். 1.4 மீட்டர் முதல் 2,1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேல் எழும்பக்கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து, வேடிக்கைப் பார்க்கவோ, குளிக்கவோ பொதுமக்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள், உயிர்காப்பு பணியாளர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரா விரைந்த பேரிடர் மீட்புக் குழுக்கள் முரசு தீவிர புயல் மீட்புப் பணிக்காக அரக்கோணம் அருகே நாகரிக்குப்பத்தில் உள்ள 4 ஆவது பட்டாலியின் படையில் இருந்து 3 குழுக்கள் ஆந்திரம் சென்றன. தலா 30 வீரர்கள் கொண்ட 3 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களில் மொத்தம் 90 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் 'முரசு' புயல்: தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை