திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபடுவதையொட்டி, அவரது வீட்டு வாசலில் திரளாக காத்திருக்கும் திமுகவினர். படம்: ர. செல்வமுத்துகுமார் சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இதனையொட்டி, அவரது வீட்டு வாசலில் திமுகவினர் திரண்டு காத்திருக்கின்றனர். அங்கு மட்டுமல்லாது சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நேரு சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த செப்.5-ம் தேதி நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அதனால், பேரவை நடக்கும்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியது. இந்நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நவ.16 ஆம் தேதி நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரத்தையும் தாண்டி அவரது குடும்பத்தினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று மற்றொரு திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗