வாழ்நாள் முழுக்க பக்கவாத பாதிப்பை ஏற்படுத்தும் ஒற்றைத் தவறு - இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அறிகுறிகள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
வாழ்நாள் முழுக்க பக்கவாத பாதிப்பை ஏற்படுத்தும் ஒற்றைத் தவறு - இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images பக்கவாதம் என்பது முதியவர்களை மட்டுமே பாதிக்கும் நோய் என்று பலர் நம்புகின்றனர். இதன் அடிப்படையிலேயே, இளைஞர்களுக்குத் திடீரெனத் தலைசுற்றல், கை அல்லது கால்களில் உணர்வின்மை, பேசுவதில் சிரமம் அல்லது பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை பெரும்பாலும் அலட்சியப்படுத்திவிடுகின்றனர். ஆனால், இத்தகைய அறிகுறிகளைப் புறக்கணிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பக்கவாதம் என்பது முதியவர்களை மட்டுமே பாதிக்கும் நோய் அல்ல என்பதை உலகளாவிய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பக்கவாதம் ஏற்படலாம். இந்த வயதினரிடையே பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை போன்றவை பக்கவாதத்துக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் உடல் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு, பேச்சுத்திறன் பாதிப்பு மற்றும் மனச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம். மிக முக்கியமாக, பக்கவாத அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவச் சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதம் மூளைச் செல்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால்தான், பக்கவாத சிகிச்சையில் "நேரமே மூளை" (Time is Brain) என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். அக்டோபர் 29 அன்று உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, இளைஞர்களிடையே பக்கவாத அபாயம், பலராலும் கவனிக்கப்படாமல் போகும் அதன் ஆரம்ப அறிகுறிகள், உடனடி மருத்துவச் சிகிச்சையின் அவசியம் மற்றும் பக்கவாத அபாயத்தைக் குறைக்க நாம் இன்றிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து அறிந்துகொள்வோம். நமது மூளை சீராகச் செயல்பட, அதற்குத் தொடர்ந்து ஆக்சிஜனும் ஊட்டச்சத்துகளும் தேவைப்படுகின்றன. இவை ரத்தத்தின் மூலம் மூளைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படும்போதோ அல்லது ரத்த நாளம் வெடித்து ரத்தக் கசிவு ஏற்படும்போதோ, மூளையின் ஒரு பகுதிக்குத் தேவையான ரத்த விநியோகம் தடைபடுகிறது. இந்த நிலையை பக்கவாதம் என அழைக்கிறோம். ரத்த விநியோகம் தடைபடுவதால், பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல், சில நிமிடங்களிலேயே மூளைச் செல்கள் சேதமடையத் தொடங்கலாம். இதனால் பேசுதல், பார்வை, நினைவாற்றல், நடப்பது மற்றும் உடல் உறுப்புகளை அசைப்பது போன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். சிலருக்கு நிரந்தர உடல் குறைபாடும் ஏற்படலாம். எனவே, பக்கவாதத்தின் அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுவது அவசியம். பட மூலாதாரம், Getty Images பக்கவாதத்தில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. முதலாவது, இஸ்கிமிக் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ரத்த உறைவு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபடும்போது ஏற்படுவதை இஸ்கிமிக் பக்கவாதம் என அழைக்கின்றோம். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இரண்டாவது, ஹெமரேஜிக் பக்கவாதம்; ரத்த நாளம் வெடித்து, மூளையில் ரத்தப்போக்கு ஏற்படும்போது இது நிகழ்கிறது. இரண்டு வகைப் பக்கவாதங்களுமே தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம். பக்கவாதத்தின் அறிகுறிகள் யாவை? எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும்? இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் பக்கவாதத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், குழந்தைகளிடம் இதன் அறிகுறிகள் மாறுபடலாம். பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகள் பல நேரங்களில் உரிய கவனம் பெறாமல் போவதே இதில் உள்ள முக்கியச் சிக்கலாகும். உடலின் ஒரு பக்கத்தில் திடீரென ஏற்படும் பலவீனம் அல்லது உணர்வின்மை, பேசுவதில் சிரமம் அல்லது பேச்சு குளறுதல், பார்வையில் திடீர் மாற்றங்கள், நடப்பதில் சிரமம் அல்லது சமநிலையை இழத்தல் ஆகியவை பக்கவாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால், சிலர் இவற்றைத் தசை வலி, தசைப்பிடிப்பு அல்லது தற்காலிக உடல்நலக் குறைவு என்று தவறாகக் கருதி அலட்சியப்படுத்திவிடுகின்றனர். இந்த அறிகுறிகள் திடீரெனத் தோன்றினால், அவை தானாகவே சரியாகிவிடும் என்று காத்திருக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அறிகுறிகள் சில நிமிடங்களில் மறைந்துவிட்டாலும் மருத்துவப் பரிசோதனை அவசியம். பக்கவாதத்தின்போது ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது; விரைவான சிகிச்சை மூளைப் பாதிப்பைக் குறைக்க உதவும். பட மூலாதாரம், Getty Images இந்த அறிகுறிகள் எப்போது தீவிரமானவை என்பதை எவ்வாறு கண்டறிவது? இதுகுறித்து விளக்கமளிக்க, மும்பை மஹிமில் உள்ள பி. டி. இந்துஜா மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் நிபுணர் மருத்துவர் தர்ஷன் தோஷியை அணுகினோம். பிபிசியிடம் பேசிய அவர், "தலைச்சுற்றல், நடப்பதில் தடுமாற்றம், நடக்க இயலாமை அல்லது உடல் சமநிலையை இழத்தல் போன்ற அறிகுறிகள் திடீரென ஏற்பட்டாலோ, தீவிரமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அதேபோல், ஒரு கண்ணில் திடீரெனப் பார்வை இழப்பு ஏற்படுவது அல்லது பார்வை மங்குவது போன்ற மாற்றங்கள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும். உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை ஏற்பட்டாலோ அல்லது ஒரு பக்கத்தில் மற்றொரு பக்கத்தைவிட உணர்வுத்திறன் குறைவாக இருப்பதை உணர்ந்தாலோ தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images இந்த மருத்துவ நிலையின் தீவிரத்தன்மையை கண்டறிய 'FAST' பரிசோதனை அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இந்த பரிசோதனையின் முக்கியத்துவத்தைப் பற்றி தர்ஷன் தோஷியிடம் கேட்டோம். இதனை 'BE FAST' என்று குறிப்பிடுவதே சரியான முறை என்று கூறிய அவர், அதைப் பற்றி விளக்கினார்: B – Balance (சமநிலை): திடீரென சமநிலையை இழத்தல். E – Eyes (கண்கள்): ஒன்று அல்லது இரு கண்களிலும் திடீரென பார்வைத்திறன் இழப்பு ஏற்படுதல். F – Face (முகம்): முகம் ஒரு பக்கமாகச் சரிந்து போதல் அல்லது தொங்கிப் போதல். A – Arm (கை/கால்): உடலின் ஒரு பக்கத்தில் உள்ள கை அல்லது காலில் பலவீனம் ஏற்படுதல். S – Speech (பேச்சு): பேச்சு குளறுதல், வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிரமம் அல்லது தெளிவற்ற முறையில் பேசுதல். T – Time (நேரம்): இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால், ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை பெறவேண்டும். பட மூலாதாரம், Getty Images பக்கவாத சிகிச்சையில் 'சிகிச்சைக்கான முக்கியமான காலகட்டம்' (Golden Hour) மிகவும் முக்கியமானது. பக்கவாதத்துக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன், தாமதிக்காமல் அருகிலுள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். இதுகுறித்து மருத்துவர் தர்ஷன் தோஷி கூறுகையில், "பக்கவாதம் ஏற்பட்ட முதல் நான்கரை மணிநேரம் மிகவும் முக்கியமானது. இந்தக் காலகட்டத்துக்குள், தகுதியான நோயாளிகளுக்கு ரத்த உறைவைக் கரைக்கும் மருந்துகளை வழங்க முடியும். இது மூளைப் பாதிப்பைக் குறைத்து, நோயாளி குணமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்க உதவும்" என்று விளக்கினார். இருப்பினும், அறிகுறிகள் தோன்றி நான்கரை மணிநேரம் கடந்துவிட்டால், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை என்று அர்த்தமல்ல. அப்போதும் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். ஏனெனில், அறிகுறிகள் தோன்றிய நேரம், பக்கவாதத்தின் வகை மற்றும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, நான்கரை மணிநேரத்துக்குப் பிறகும் சில பயனுள்ள சிகிச்சைகளை வழங்க முடியும். இளைஞர்களுக்குப் பக்கவாதம் ஏற்படாது என்றும், இது முதியவர்களை மட்டுமே பாதிக்கும் நோய் என்றும் பலர் தவறாகக் கருதுகின்றனர். ஆனால், இது உண்மையல்ல. வயது அதிகரிக்கும்போது பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது என்பது உண்மைதான். இருப்பினும், எந்த வயதினருக்கும் பக்கவாதம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக பக்கவாத அமைப்பின் உலகளாவிய பக்கவாதத் தகவல் அறிக்கை 2025 அறிக்கையின்படி, உலகளவில் புதிதாக ஏற்படும் பக்கவாத பாதிப்புகளில் சுமார் 15 சதவிகிதம், 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களிடையே பதிவாகின்றன. இளம் வயதில் பக்கவாதம் ஏற்படுவது ஒருவரின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த வயதில் பலர் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்கியிருப்பார்கள்; குடும்பப் பொறுப்புகளை ஏற்றிருப்பார்கள் அல்லது எதிர்காலத்துக்கான திட்டங்களை வகுத்துக்கொண்டிருப்பார்கள். இத்தகைய சூழலில், பக்கவாதம் ஒருவரின் வேலை செய்யும் திறனைப் பாதிப்பதுடன், சுயமாகச் செயல்பட்டு வாழும் ஆற்றலையும் குடும்பத்தைப் பராமரிக்கும் திறனையும் திடீரெனக் குறைக்கக்கூடும். இதனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் குடும்பத்தின் எதிர்காலமும் பாதிக்கப்படலாம். எனவே, இளைஞர்களும் தங்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயக் காரணிகளை அறிந்துகொள்வதுடன், அவற்றைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் நரம்பியல் நிபுணரும், நரம்புத்தசைக் கோளாறுகள் மற்றும் பக்கவாத சிகிச்சை நிபுணருமான மருத்துவர் வினயா பண்டாரியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். நமது சந்தேகங்களுக்கு அவர் விரிவான விளக்கங்களை அளித்தார். பட மூலாதாரம், Getty Images கேள்வி: பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, தற்போது 30 மற்றும் 40 வயதுகளில் இருப்பவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளதா? மருத்துவர் வினயா பண்டாரி: உலகளாவிய ஆய்வுகளின்படி, 1990 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாகப் பதிவான பக்கவாத பாதிப்புகளின் எண்ணிக்கை சுமார் 36 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எளிமையாகச் சொல்வதானால், 1990ஆம் ஆண்டில் இந்த வயதுப் பிரிவினரிடையே புதிதாக 100 பக்கவாத பாதிப்புகள் பதிவாகியிருந்தால், 2021ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை சுமார் 136 ஆக உயர்ந்திருக்கும். இவை உலகளாவிய புள்ளிவிவரங்கள். இந்த வயதுப் பிரிவினரிடையே பதிவான மொத்த புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இவை காட்டுகின்றன; தனிநபர் ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 36 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று இதற்குப் பொருள் கொள்ளக்கூடாது. இந்தியாவில் இதே காலகட்டத்தில் நிலைமை எவ்வாறு மாறியுள்ளது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள கூடுதல் தரவுகள் தேவை. இருப்பினும், 30 மற்றும் 40 வயதுகளில் இருப்பவர்களுக்கும் பக்கவாதம் ஏற்படலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உடலின் ஒரு பக்கத்தில் திடீரென பலவீனம் ஏற்படுதல், பேசுவதில் சிரமம் அல்லது திடீரெனப் பார்வை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவற்றைப் புறக்கணிக்காமல் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். பட மூலாதாரம், Getty Images கேள்வி: இளைஞர்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள் யாவை? மருத்துவர் வினயா பண்டாரி: உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து, புகைப்பிடித்தல் மற்றும் இதய நோய்கள் ஆகியவை இளைஞர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் முக்கியக் காரணிகளாகும். இருப்பினும், இளம் வயதினருக்குப் பக்கவாதம் ஏற்படும்போது, இதர காரணங்களையும் ஆராய்வது அவசியம். மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள், சில வகையான இதயக் கோளாறுகள், ரத்தம் உறைவதற்கு வழிவகுக்கும் குறைபாடுகள், மூளையிலிருந்து ரத்தத்தை வெளியேற்றும் சிரைகளில் ரத்த உறைவு ஏற்படுதல் ஆகியவையும் பக்கவாதத்துக்குக் காரணமாக இருக்கலாம். சிலருக்கு, அழற்சி தொடர்பான பாதிப்புகள் அல்லது மரபணுக் காரணங்களாலும் பக்கவாதம் ஏற்படலாம். பெண்களைப் பொறுத்தவரை, கர்ப்ப காலத்திலும் பிரசவத்துக்குப் பிந்தைய காலத்திலும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும். எனவே, இளைஞர்களுக்கு ஏற்படும் பக்கவாதம் வாழ்க்கைமுறை சார்ந்த காரணங்களால் மட்டுமே ஏற்படுகிறது என்று கருதக் கூடாது. பக்கவாதத்துக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். ஏனெனில், நோயாளிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையும் எதிர்காலத்தில் மீண்டும் பக்கவாதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அந்தக் காரணத்தைப் பொறுத்தே அமையும். கேள்வி: கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தம், இளைஞர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது? மருத்துவர் வினயா பண்டாரி: பக்கவாதத்துக்கான கட்டுப்படுத்தக்கூடிய அபாயக் காரணிகளில் உயர் ரத்த அழுத்தம் மிகவும் முக்கியமானது. ஆனால், உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. ஓர் இளைஞர் தாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணர்ந்து, வழக்கம்போல அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டிருக்கலாம். அதே நேரத்தில், அவரது ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கக்கூடும். நீண்ட காலமாகக் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும் உயர் ரத்த அழுத்தம், ரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கோ அல்லது அவை வெடித்து ரத்தக்கசிவு ஏற்படுவதற்கோ வழிவகுக்கும். எனவே, உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் தென்படும் வரை காத்திருக்காமல், அவ்வப்போது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். உங்கள் ரத்த அழுத்த அளவைத் தெரிந்துகொள்வதும், அது அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறுவதும் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் பக்கவாத அபாயத்தைக் குறைப்பதற்கும் மிகவும் அவசியம். பட மூலாதாரம், Getty Images கேள்வி: நீரிழிவு நோயும் உடல் பருமனும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கின்றன? மருத்துவர் வினயா பண்டாரி: நீரிழிவு நோயும் உடல் பருமனும் பக்கவாத அபாயத்தை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, இவற்றுடன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களும் சேர்ந்திருக்கும்போது, இந்த அபாயம் மேலும் அதிகரிக்கலாம். நீரிழிவு நோய், காலப்போக்கில் ரத்த நாளங்களைச் சேதப்படுத்துகிறது. அதேபோல், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதும், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதும், இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடையவை. இவை அனைத்தும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த உடல்நலப் பிரச்னைகள் இளம் வயதிலேயே தொடங்கி, பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாமல் இருக்கலாம். சமச்சீரான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது ஆகியவை பக்கவாத அபாயத்தைக் குறைப்பதற்கான முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாகும். மேலும், நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற தொடர்புடைய பிரச்னைகளுக்கும் உரிய சிகிச்சை பெறுவது அவசியம். பட மூலாதாரம், Getty Images கேள்வி: புகைப்பிடித்தல், மின்னணு சிகரெட் பயன்பாடு (வேப்பிங்), மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை இளைஞர்களிடையே பக்கவாத அபாயத்தை அதிகரிக்கின்றனவா? மருத்துவர் வினயா பண்டாரி: புகைப்பிடித்தல் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அபாயக் காரணிகளில் ஒன்றாகும். இது ரத்த நாளங்களைச் சேதப்படுத்துவதுடன், ரத்தம் உறைவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, குறிப்பாகக் குறுகிய காலத்தில் அதிக அளவு மது அருந்துவது, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். மேலும், இதயத் துடிப்பில் சீரற்ற தன்மையையும் ஏற்படுத்தலாம். கோகோயின், மெத்தாம்பேட்டமைன் போன்ற தூண்டுதல் விளைவுகளைக் கொண்ட போதைப்பொருட்கள் ரத்த அழுத்தத்தைத் திடீரென அதிகரித்து, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உயர்த்தக்கூடும். வேப்பிங் எனப்படும் மின்னணு சிகரெட் பயன்பாட்டுக்கும் பக்கவாதத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆதாரங்கள் இன்னும் வளர்ந்து வருகின்றன. வழக்கமான சிகரெட் புகைப்பதற்கும் பக்கவாதத்துக்கும் இடையிலான தொடர்பு நன்கு நிறுவப்பட்டுள்ள நிலையில், வேப்பிங்கின் நீண்டகால விளைவுகள் குறித்து இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், குறிப்பாக நிகோடின் கலந்த மின்னணு சிகரெட்டுகளைப் பாதுகாப்பானவை என்று கருதக்கூடாது. கேள்வி: மரபணுக் காரணிகளும் இளைஞர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்குமா? மருத்துவர் வினயா பண்டாரி: ஆம். சில மரபணு சார்ந்த நோய்களும் அரிதான ரத்த நாளக் கோளாறுகளும் இளம் வயதினருக்குப் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இவற்றில் சிக்கிள் செல் நோய் மற்றும் மோயா மோயா நோய் ஆகியவை அடங்கும். மோயா மோயா நோய் என்பது மூளைக்குத் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் சில முக்கிய ரத்த நாளங்கள் படிப்படியாகச் சுருங்கும் ஒரு அரிய நோயாகும். இதனால் மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காமல் போகலாம்; சிலருக்கு ரத்த நாளங்கள் தொடர்பான பிற சிக்கல்களும் ஏற்படலாம். எனவே, இளம் வயதிலேயே பக்கவாதம் ஏற்படும்போது, அதற்கான மரபணு மற்றும் பிற அடிப்படைக் காரணங்களையும் மருத்துவர்கள் ஆராய்வது முக்கியம். பட மூலாதாரம், Getty Images பல இளைஞர்கள் வேலை தொடர்பான மன அழுத்தம், நிதி நெருக்கடி, குடும்பப் பொறுப்புகள் மற்றும் போதிய தூக்கமின்மை என பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். நீண்டகால மன அழுத்தம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இது ரத்த அழுத்தம், தூக்க முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் செயல்பாடுகளைப் பாதிக்கலாம். மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் சிலர், புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்களையும் அதிகரித்துக்கொள்ளலாம். மன அழுத்தத்துக்கும் பக்கவாதத்துக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மன அழுத்தம் மட்டுமே ஒவ்வொருவருக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணம் என்று இதற்குப் பொருள் கொள்ளக்கூடாது. உடல் செயல்பாடுகள் குறைவாக இருப்பதும் பக்கவாத அபாயத்தை அதிகரிக்கக்கூடிய மற்றொரு காரணியாகும். பலர் தங்கள் நாளின் பெரும்பகுதியை அலுவலகத்தில் அமர்ந்தபடியோ, பயணம் செய்துகொண்டோ அல்லது கணினியில் வேலை செய்துகொண்டோ செலவிடுகின்றனர். இத்தகைய உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை நீண்ட காலத்தில் உடல் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே, இளைஞர்கள் தங்களின் ரத்த அழுத்தத்தைத் தவறாமல் பரிசோதித்துக்கொள்வதுடன், நீரிழிவு நோய் அல்லது அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது, உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது, சமச்சீரான உணவை உட்கொள்வது மற்றும் போதுமான அளவு தூங்குவது ஆகியவையும் பக்கவாத அபாயத்தைக் குறைக்க உதவும். உணவுப் பழக்கத்தில் பெரிய மாற்றங்களைச் செய்வது, புதிய உடற்பயிற்சித் திட்டத்தைத் தொடங்குவது அல்லது மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றுக்கு முன்பு, மருத்துவர் அல்லது தகுதிபெற்ற நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். உங்கள் உடல்நிலை மற்றும் அறிகுறிகளை மருத்துவ நிபுணரிடம் பரிசோதித்துக்கொண்டு, அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் வாழ்க்கைமுறையில் தேவையான மாற்றங்களைச் செய்வதே சிறந்தது. மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்வதோ, உடல்நலப் பிரச்னைகளுக்குத் தாங்களாகவே சிகிச்சையளிக்க முயற்சிப்பதோ ஆபத்தானதாக அமையலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை