சகல சௌபாக்கியங்களும் அருளும் லலிதா சஹஸ்ரநாமத்தின் மகிமை பற்றி இக்கட்டுரையில்... திருமீயச்சூர் அருள்மிகு ஸ்ரீ லலிதாம்பிகை ஒரு பெண்ணின் வாழ்வில் சௌபாக்கியம் என்பது மங்களத்தின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. அது திருமண வாழ்வு, மகிழ்ச்சியான குடும்ப உறவுகள், செல்வ வளம், புத்திர பாக்கியம், ஆன்மிக வளர்ச்சி எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. இத்தகைய நற்பேறுகள் நிறைந்த வாழ்வை விரும்பும் நமக்கு, நமது ஆன்மிக மரபுகள் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன. குடும்பத்தில் அமைதி, அன்பு, ஒற்றுமை ஆகியவை நிலவவும், வாழ்வில் மங்களம் பெருகவும் இறைவனைப் போற்றும் ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் மற்றும் ஸஹஸ்ர நாமங்களைப் பாராயணம் செய்வது நமது வழிபாட்டு மரபில் சிறப்பிடம் பெற்றுள்ளது. சிவபெருமான், மகாவிஷ்ணு, அன்னை பராசக்தி, விநாயகர், முருகர் எனப் பல்வேறு தெய்வங்களைப் போற்றும் துதிகள், ஒவ்வொன்றும் தனித்துவமான ஆன்மிகப் பொருளையும் தத்துவச் சிறப்பையும் கொண்டுள்ளன. அவற்றுள், மங்கள வாழ்விற்கும் அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அன்னை பராசக்தி, கருணையின் வடிவமாகவும், ஞானத்தின் இருப்பிடமாகவும், பிரபஞ்சத்தை இயக்கும் ஆதிசக்தியாகவும் போற்றப்படுகிறாள். அவளுடைய திருநாமங்களைப் பக்தியுடன் உச்சரிப்பது மனத்தில் பக்தியையும் நம்பிக்கையையும் வளர்க்கும். நமது இதிகாச, புராண மரபுகளில் ஸஹஸ்ரநாம வழிபாடு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. மகாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில், அம்புப் படுக்கையிலிருந்த பீஷ்மர், தர்மருக்கு மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமம். மகாவிஷ்ணுவின் பெருமை, தர்மத்தின் உயர்வு, இறைவனிடம் சரணடைவதன் சிறப்பு ஆகியவற்றை உணர்த்தும் இந்தத் துதி, இன்றளவும் பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறது. அதேபோல், பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெறும் லலிதா ஸஹஸ்ரநாமம், ஹயக்ரீவர் அகஸ்திய முனிவருக்கு அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் ஆயிரம் திருநாமங்களை உபதேசித்தார். இந்தத் தெய்வீக நாமங்களை வெளிப்படுத்தியவர்களாக வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி ஆகிய எட்டு வாக் தேவதைகள் போற்றப்படுகின்றனர். இவர்கள் அன்னையின் ஞான சக்தியையும், வாக்கின் புனிதத்தையும், மந்திர மகிமையையும் உணர்த்துகின்றனர். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஸ்லோகங்கள் அன்னையின் திருவுருவத்தை மனத்தில் நிலைநிறுத்த உதவுகின்றன. ஒவ்வொரு திருநாமமும் அன்னையின் அழகு, ஞானம், கருணை, வீரியம், படைப்பாற்றல், அருள் ஆகியவற்றின் தனித்துவமான பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றை உணர்ந்து சரியாகப் பாராயணம் செய்வது பக்தியை ஆழப்படுத்தி, இறைநிலையின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. இவற்றின் முக்கிய சிறப்பு, இந்த சஹஸ்ரநாமத்தில் எந்தவொரு திருநாமமும் மீண்டும் மீண்டும் வராது. அம்பிகையின் அருளைப் போற்றும் லலிதா ஸஹஸ்ரநாமம், சக்தி வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றது. இதில் ஸ்ரீ சக்கர வழிபாட்டின் நுட்பங்களும், ஆன்மிக / ஜோதிடத்துடன் தொடர்புப்படுத்திப் புரிந்துகொள்ளப்படும். இவற்றை ஆராய்வது அன்னையின் மகிமையையும் சக்தி தத்துவத்தின் ஆழத்தையும் அறிய உதவுகிறது. நட்சத்திரங்களுக்கு ஏற்பப் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் நமது ஜோதிட மரபில் உள்ளது. அதேவேளையில், அன்னை லலிதா திரிபுரசுந்தரியைப் போற்றும் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறும் அழகிய திருநாமங்களையும் குழந்தைகளுக்குச் சூட்டலாம். இத்தகைய பெயர்கள் இறைவழிபாட்டின் நினைவாகவும், அன்னையின் அருளை நினைவுகூரும் அடையாளமாகவும் அமையும். ஜோதிடத் தத்துவத்தின்படி, நவக்கிரகங்களின் இயக்கங்களும் அவை வழங்கும் பலன்களும் பிரபஞ்சத்தின் பேரியக்கத்துடன் தொடர்புடையவை. பராசக்தியே இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாக விளங்குகிறாள் என்பது ஆன்மிக மரபின் உயர்ந்த தத்துவமாகும். நவகிரகங்கள் அனைத்தும் அன்னை பராசக்தியின் தத்துவத்திற்குள் அடங்கியுள்ளன என்ற கருத்தை, லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறும் சில திருநாமங்களின் பொருளுடன் இணைத்துக் காண்போம். திரிநயனா (நாமம் 453): முக்கண்களை உடையவள். அன்னையின் மூன்று கண்கள் சூரியன், சந்திரன் மற்றும் அக்கினி (நெருப்பு) ஆகும். இங்குச் சூரியன் சந்திரன் மற்றும் அக்னி என்று சொல்லப்படும் நெருப்பு கிரகமான செவ்வாய்க் கிரகத்தையும் குறிக்கலாம். செவ்வாய் மங்களத்திற்கு அதிபதி. சந்திர வித்யா (நாமம் 239): சந்திரனால் வழிபடப்பட்ட ‘ஸ்ரீவித்யா’ மந்திர வடிவமாகத் திகழ்பவள். இங்கும் சந்திரன் அன்னைக்குள் அடக்கம் என்பதைச் சூட்சுமமாகச் சொல்லப்படுகிறது. இது தவிர, 243 நாமத்தில் - சாரு சந்திர கலாதரா -: தனது திருமுடியில் அழகான இளம்பிறைச் சந்திரனைச் சூடியிருப்பவள். ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களின் காரண கர்த்தா சந்திரன், அவரின் நகர்வைப் பொருத்து ஜோதிடம் உள்ளடக்கியது. இந்த சந்திரனையே தன் தலையில் சூட்டி கொண்டவள் ஒளிர்மிகும் அம்பிக்கை. தாடங்க யுகலீபூத தபனோடுப மண்டலா (நாமம் 22): சூரியனையும் சந்திரனையும் தன் இரு காதுகளிலும் காதணிகளாக அணிந்திருப்பவள். இங்கு ஒளி கிரகமான சூரியனும் சந்திரனும் அவளுள் அடக்கம். சந்திர மண்டல மத்யகா (நாமம் 240): சந்திர மண்டலத்தின் நடுவில் வாசம் செய்பவள். மனித உடலின் உச்சந்தலையில் உள்ள "ஸஹஸ்ரார சக்கரம்" சந்திர மண்டலமாக உருவகப்படுத்தப்படுகிறது. தேவி அங்கு நடுநாயகமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு ஞான அமுதத்தை வழங்குகிறாள். லலிதா ஸஹஸ்ரநாமம், உடலில் உள்ள ஏழு யோகச் சக்கரங்களையும் அவற்றில் உறையும் அம்பிகையின் பராசக்தியையும் விளக்குகிறது. அவை: "மூலாதாரைகநிலயா" - மூலாதாரச் சக்கரத்தில் உறைபவள்; "ஸ்வாதிஷ்டானாம் புஜகதா" - ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் உறைபவள், படைப்பாற்றலைக் குறிக்கிறது. "மணிபூராந்தருதிதா" - மணிபூரகச் சக்கரத்தில் உதிப்பவள், மனவலிமையைக் குறிக்கிறது; "அனாஹதாப்ஜநிலயா" - அனாஹதச் சக்கரத்தில் உறைபவள், அன்பையும் கருணையையும் உணர்த்துகிறாள்; "விசுத்திசக்ரநிலயா" - விசுத்திச் சக்கரத்தில் உறைபவள், பேச்சு, தூய்மை, உண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது; "ஆஜ்ஞாசக்ராந்தராலஸ்தா" - ஆஜ்ஞா சக்கரத்தில் உறைபவள், ஞானத்தையும் உள்ளுணர்வையும் அருள்கிறாள்; "ஸஹஸ்ராராம்புஜாரூடா" - சஹஸ்ராரத் தாமரையில் வீற்றிருப்பவள், ஆன்மிக நிறைவையும் பேரானந்தத்தையும் பரம்பொருள் உணர்வையும் அடைவதைக் குறிக்கிறது. இவ்வாறு, அம்பிகையின் அருள்சக்தி ஆன்மிக விழிப்புணர்வின் வழியாகப் பரம்பொருள் உணர்வை அடைய வழிகாட்டுகிறது. முக சந்திர களங்காப மிருகநாபி விசேஷகா (நாமம் 16): சந்திரனில் இருக்கும் மறுவைப் போல, அன்னையின் சந்திர வதனத்தில் கஸ்தூரி திலகம் அழகாகக் காட்சியளிக்கிறது. சரச்சந்திர நிபானனா (நாமம் 129): இலையுதிர் காலத்திலும் முழு நிலவைப் போன்ற பிரகாசமான முகத்தை உடையவள். சந்திர நிபா (நாமம் 592): சந்திரனைப் போன்ற குளிர்ச்சியையும் ஒளியையும் கொண்டவள். சௌம்யா (நாமம் 910): சந்திரனைப் போல மென்மையானவள், குளிர்ச்சியான அருள் பொழிபவள். தாபத்ரயாக்னி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா (நாமம் 357): உலகியல் துன்பங்கள் என்னும் நெருப்பில் வாடும் பக்தர்களுக்குக் குளிர்ச்சியான நிலவொளி போலத் தோன்றி அமைதியளிப்பவள். எடுத்துக்காட்டாக 610 நாமத்தில் - "ப்ரதிபன் முக்ய ராகாந்த திதி மண்டல பூஜிதா": பிரதமை முதல் பௌர்ணமி வரை உள்ள நித்யா திதி தேவிகள் சூழப்பட்டு வணங்கப்படுபவள். நாமம் 314: ராகேந்து வதனா - பௌர்ணமி நிலவைப் போன்ற முழுமையான, அழகான முகத்தைக் கொண்டவள். நாமம் 15 - "அஷ்டமி சந்திர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா" - அஷ்டமி திதியில் தோன்றும் அரைச் சந்திரனைப் போல ஒளிவீசும் அழகிய நெற்றியை உடையவள். இங்குச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள பாகை கொண்ட திதிகளும் அம்மனுக்குள் அடக்கம் என்பதைப் புரிய வைக்கிறது. வேத ஜோதிடத்தில் 2, 4, 5, 7, 9-ஆம் பாவங்களும், சூரியன் முதல் கேது வரையிலான நவக்கிரகங்களின் நிலைகளும் சௌபாக்கியத்துடன் தொடர்புப்படுத்தப்படுகின்றன. சௌபாக்கியம் என்பது திருமண வாழ்வை மட்டுமல்லாமல், குடும்ப ஒற்றுமை, செல்வ வளம், மன அமைதி, புத்திர பாக்கியம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியது. ஜாதகத்தில் இத்தகைய நற்பலன்கள் குறைவாக இருப்பதாகக் கருதப்படும் சூழல்களிலும், வாழ்க்கையில் சவால்கள் ஏற்படும் காலங்களிலும், அன்னை பராசக்தியைப் பக்தியுடன் வழிபடுவது மன அமைதியையும் நம்பிக்கையையும் அளிக்கும். அன்னையின் அருளால் தடைகள் நீங்கி, வாழ்வில் சுபிட்சமும் மங்களமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக, தினமும் காலையிலோ மாலையிலோ விளக்கேற்றி, அமைதியான சூழலில் ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் திருவுருவத்தை மனதில் நிறுத்தி, லலிதா ஸஹஸ்ரநாமத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்வதோடு, அதன் பொருளையும் சிந்தித்துப் போற்றும்போது, அன்னை பராசக்தியின் பரந்த தெய்வீகத் தன்மையை உணர முடியும். உலகிற்கெல்லாம் தாயாக விளங்குபவள் ஸ்ரீ மாதா! பேரரசியாகவும், தெய்வீக அரசாட்சியின் தலைவியாகவும் விளங்கும் அன்னை லலிதாம்பிகையின் திருநாமங்களைப் போற்றி வழிபடுவதன் மூலம், நம் வாழ்வில் சௌபாக்கியம், மன அமைதி, குடும்ப ஒற்றுமை மற்றும் ஆன்மிக வளர்ச்சி பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். நவக்கிரகங்களின் தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், அன்னையின் திருவருளால் வாழ்வில் நன்மைகள் பெருகவும் மனமுருகிப் பிரார்த்திப்போம். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய செய்ய வீட்டில் அனைத்து சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும். Whats app: 8939115647 Email: vaideeshwra2013@gmail.com தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெருக! லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗