ஹரீஷ், ஜேசன் சாமுவேல் கானத்தூர்: சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் யூடியூபர் ஹரீஷ் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் வழக்கில், மற்றொரு யூடியூபர் ஜேசன் சாமுவேல் விஜயகுமாரை கானத்தூர் போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த விநாயகத்தின் மகன் ஹரீஷ் (27). இவர் ‘ஃபைனான்ஸ் வித் ஹரீஷ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி, நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவரது சேனலை சுமார் 13 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு யூடியூபரான ஜேசன் சாமுவேல் விஜயகுமார் (30), ஹரீஷை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், அவரைப் பற்றி அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால் ஹரீஷின் சமூகவலைதளக் கணக்கு முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மன உளைச்சலில் இருந்த ஹரீஷ் கடந்த 20-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஹரீஷின் தந்தை அளித்த புகாரின்பேரில், கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த ஜேசன் சாமுவேல் விஜயகுமாரை போலீஸார் கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
யூடியூபர் ஹரீஷ் தற்கொலை வழக்கில் ஜேசன் சாமுவேல் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗