1968-ல் நிறுவப்பட்ட 'ரா' அமைப்பு, செப்டம்பர் 21 அன்று தனது 58-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்ட உளவுத்துறை முன்னாள் அதிகாரியான காவ் என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. எழுதியவர்: தீப்திமான் திவாரி 1971 நவம்பர் கடைசி வாரத்தில், இந்தியாவின் வெளியுறவு உளவு அமைப்பிற்கு ஒரு அசாதாரணத் தகவல் கிடைத்தது. பாகிஸ்தான் அரசின் உயர்மட்ட அதிகார மையத்திற்குள் இருந்த கே. சங்கரன் நாயரின் ரகசிய நபர்களில் ஒருவர் இந்தியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள விமானப் படைத் தளங்கள் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது என்ற தகவலை அறிந்தார். நாயர் அந்த எச்சரிக்கை செய்தியை உடனடியாக மேலதிகாரிகளுக்கு அனுப்பினார். இந்திய விமானப்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டது. இறுதியாக, டிசம்பர் 3 அன்று பாகிஸ்தான் தன் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் இந்தியா அதற்கு முழுமையாகத் தயாராக இருந்தது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க பதின்மூன்று நாட்களுக்குப் பிறகு, டாக்கா நகரில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது, வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. இந்த உளவுத் தகவலை வெளியிட்ட அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் முதல் தலைவரான ராமேஷ்வர் நாத் காவ் ஆவார். அப்போது 'ரா' (R&AW) அமைப்பு உருவாக்கப்பட்டு வெறும் மூன்றாண்டுகளே ஆகியிருந்தன. 1968-ல் நிறுவப்பட்ட 'ரா' அமைப்பு, செப்டம்பர் 21 அன்று தனது 58-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்தியாவின் முதல் தனித்துவமான வெளியுறவு உளவு அமைப்பை உருவாக்க அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்ட உளவுத்துறை முன்னாள் அதிகாரியான காவ் என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இவரது சாதனை என்பது வெறும் ஒரு புதிய அமைப்பை நிறுவியது மட்டுமல்ல; தேசிய பாதுகாப்பின் உயர்மட்டத்தில் செயல்படத் தேவையான மனிதர்கள், திறன்கள் மற்றும் நிறுவன கலாச்சாரத்தை அவர் 'ரா' அமைப்பிற்கு வழங்கிய வேகத்தில்தான் இருக்கிறது. முன்னாள் 'ரா' கூடுதல் செயலாளர் பி. ராமன் எழுதிய "கவ்பாய்ஸ் ஆஃப் ரா" (Kaoboys of RAW) என்ற புத்தகத்தின்படி, அமைப்பு உருவான முதல் சில மாதங்களிலேயே காவ் அதிகாரிகளுக்கு இரண்டு முக்கிய பணிகளை வழங்கி முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தான் மற்றும் சீனா பற்றிய உளவு தகவல்களைச் சேகரிக்கும் திறனை வலுப்படுத்துவது மற்றும் கிழக்கு பாகிஸ்தானில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வது. "ஒரு திறமையான ரகசிய நடவடிக்கைக்கான திறனை வளர்த்துக் கொள்ள இரண்டு ஆண்டுகள் என்பது மிகவும் குறுகிய காலமாகும், ஆனால் 'ரா' அதைச் செய்து முடித்தது" என்று ராமன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் யாஹ்யா கானின் தொடர்புகளை காவின் மனிதர்கள் எவ்வாறு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள் என்பதையும் அவர் நினைவு கூறுகிறார். "கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், இந்திரா காந்திக்கும் போரை நடத்தும் பொறுப்பில் இருந்த மற்றவர்களுக்கும், யாஹ்யா கான் மற்றும் பிறர் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள தங்கள் அதிகாரிகளுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் முக்கியப் பகுதிகள் கிடைக்கப் பெற்றன" என்று ராமன் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். இழப்புகள் நிறைந்த சிறு பருவம் இருப்பினும், இந்த அமைப்பின் பின்னணியில் இருந்த நபர் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வராமல் நிழலிலேயே இருந்தார். காவுடன் பணிபுரிந்த முன்னாள் 'ரா' அதிகாரியான வி. பாலசந்திரன், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம் கூறுகையில், "வங்கதேச போரின் பின்னணியில் அன்றைய ராணுவத் தளபதி சாம் மானெக்ஷா மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் ரஸ்டம் ஜியை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் சாதனைகளுக்குத் தேவையான அனைத்து அடித்தளங்களையும் அமைத்துக் கொடுத்தவர் காவ் தான். காவ் தன்னைப் பற்றி பேசப்படுவதை ஒருபோதும் விரும்பியதில்லை. உளவுப் பணிகள் சத்தமில்லாமல் அமைதியாகச் செய்யப்பட வேண்டும் என்று அவர் நம்பினார்" என்றார். காவின் இந்த ரகசியத் தன்மைக்கான காரணம் அவரது தொழில்முறை சார்ந்த பண்பு மட்டுமல்ல. இழப்பும் அவமானமும் நிறைந்த அவரது சிறுவயது வாழ்க்கையிலேயே இதற்கான வேர்கள் இருந்தன. அவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். அவரது தாயார் 25 வயதிலேயே விதவையானார். அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டது. வாரணாசியில் பிறந்த காவுக்கு, வதோதராவில் பள்ளிப்படிப்பு சமூக ரீதியாக கடினமாக இருந்தது. சக மாணவர்கள் அவரது "காவ்" என்ற இயற்பெயரை "கவ்" எனத் தவறாக உச்சரித்து, அவரது உடல் பருமனை வைத்து கேலி செய்தனர். காவின் தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவுகளிலிருந்து எழுதப்பட்ட நிதின் ஏ. கோகலேவின் "ஆர்.என். காவ்: ஜென்டில்மேன் ஸ்பைமாஸ்டர்" (R.N. Kao: Gentleman Spymaster) என்ற வாழ்க்கை வரலாற்று நூலின்படி, 11 அல்லது 12 வயதில் தான் மற்றவர்களால் கவனிக்கப்படுவதை தீவிரமாக உணர்ந்த ஒரு சிறுவனாக காவ் தன்னை நினைவு கூர்ந்தார். வேலைக்காரர் உடன் வராமல் பொதுவெளியில் சாப்பிடக்கூடத் தன்னால் முடியாது என்று அவர் நினைவு கூர்ந்தார். பல தசாப்தங்களுக்கு பிறகும், பொதுவெளியில் சாப்பிடுவதில் இருந்த அந்த அசவுகரியம் தன்னை விட்டு முழுமையாக விலகவே இல்லை என்று அவர் எழுதினார். "நான் எனக்குள்ளேயே ஒடுங்கி கொள்ள முற்பட்டேன்" என்று அந்த ஆண்டுகளை நினைவு கூர்ந்து காவ் எழுதினார். இருப்பினும், காவிடம் மற்றொரு பக்கமும் இருந்தது. அவர் பழங்கால இந்திய வரலாறு, கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். யோகா பயிற்சி செய்தார். மேலும் களிமண், மரம் மற்றும் கற்களை கொண்டு கலைப் பொருட்களை உருவாக்கினார் என்று கோகலேவின் புத்தகம் கூறுகிறது. அலகாபாத்தில் ஆங்கிலத்தில் எம்.ஏ முடிப்பதற்கு முன், லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், வரலாறு மற்றும் பாரசீக மொழியைப் படித்தார். அவர் பூக்கள் மற்றும் விலங்குகள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அவர் 1940-ல் இந்திய காவல்துறையில் சேர்ந்தார் மற்றும் சுதந்திரத்திற்கு பிறகு உளத்துறைக்கு (IB) மாறினார். ஐ.பி தலைவர் பி.என். முல்லிக்கின் கீழ் பணியாற்றிய அவர், பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நேருவுடனான அவரது பயணங்கள், வெளிநாட்டு உளவு தலைவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதுடன், இந்தியாவிற்கு அப்பால் உள்ள உளவு அமைப்புகளின் செயல்பாடுகளையும் அவருக்கு அறிமுகப்படுத்தியது. 1962-ல் சீனாவுடனான போர், 'ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்' (ARC) உருவாகக் காரணமானது. இதற்கு 1963 முதல் 1966 வரை காவ் தலைமை தாங்கினார். ஏ.ஆர்.சி, அமெரிக்காவின் உதவியுடன் வான்வழி உளவுத் திறன்களை உருவாக்கியது. இந்தியாவின் வடக்கு எல்லைகளில் கடினமான நிலப்பரப்பில் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட 'ஸ்பெஷல் ஃப்ரான்டியர் ஃபோர்ஸ்' (SFF) அமைப்பை உருவாக்கவும் காவ் உதவினார். ஸ்பெஷல் ஃப்ரான்டியர் ஃபோர்ஸ் எவ்வாறு தொடங்கியது? 1965-ல் பாகிஸ்தானுடனான போருக்குப் பிறகு, இந்திரா காந்தியும் அவரது முதன்மை ஆலோசகர் பி.என். ஹக்சரும் காவிடம் ஒரு தனி அமைப்பாக வெளியுறவு உளவு அமைப்பை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். புதிய அமைப்பு ஐ.பி-யின் காவல் துறை சார்ந்த கட்டமைப்பிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் செயல்படக்கூடிய பல்வேறு திறமைகளைக் கொண்ட மனிதர்கள் அதற்குத் தேவைப்பட்டனர். காவ் இந்தத் திட்டத்தில் சங்கரன் நாயரைச் சேர்த்தார். பாகிஸ்தான் மற்றும் பரந்த இஸ்லாமிய உலகத்தை பற்றிய ஆழமான புரிதலைக் கொண்ட அனுபவமிக்க அதிகாரியான நாயர், அமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கிய நபராக மாறினார். காவ் வடிவமைத்த அமைப்பை நாயர் தனது "மகத்தான படைப்பாக" கருதினார் என்று கோகலே பதிவு செய்துள்ளார். மத்திய அமைச்சரவைச் செயலகம் இறுதியாக இந்த அமைப்பிற்கு 'ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்' (Research and Analysis Wing) என்று பெயரிட்டது. 1971 போரானது அமைப்பின் உளவு தகவல் சேகரிப்பு, ரகசிய நடவடிக்கை மற்றும் பகுப்பாய்வுத் திறன்களை ஒன்றிணைத்தது. 'ரா' அமைப்பு வங்காள அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்ப்பு குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதுடன் போருக்கான களத்தை ஆயத்தப்படுத்த உதவியது. இந்திய ராணுவத்தின் இறுதி தலையீட்டிற்கு முன்னர், வங்காள எதிர்ப்பின் பல்வேறு கூறுகளை ஒருங்கிணைப்பதும், பாகிஸ்தானியப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை தக்கவைப்பதும் 'ரா' அமைப்பின் பணியாக இருந்தது. சாதாரண நிர்வாக வழிகளுக்கு வெளியே சிறப்பு திறன்களைக் கொண்ட நபர்களை காவ் தேர்ந்தெடுத்ததாக பாலசந்திரன் கூறுகிறார்; அவர்களில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும் அடங்குவார். அவரது பிரிவு டிசம்பர் 3, 1971 அன்று பாகிஸ்தான் திட்டமிட்ட வான்வழித் தாக்குதல் பற்றிய உளவுத் தகவலை முன்பே வழங்கியது. அவரது பங்களிப்பு வெளியே தெரியவில்லை என்பதால் தான் அது மிக முக்கியமானதாக இருந்தது என்று பாலசந்திரன் கூறுகிறார். வங்கதேச உருவாக்கத்திற்கு பிறகும் வெற்றிகள் தொடர்ந்தன. 1975-ல் சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட சம்பவங்களில் 'ரா' முக்கிய பங்கு வகித்தது. ஆனால் தோல்விகளும் இருந்தன. ஆகஸ்ட் 1975-ல், ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும்பாலானோர் டாக்காவில் படுகொலை செய்யப்பட்டனர். 'ரா' அமைப்பு இதை கணிப்பதில் தவறிவிட்டதா? என்ற கேள்விகள் எழுந்தன. பாலசந்திரன் இதை மறுக்கிறார். "1975-ல், காவ் ரகசியமாக வங்கதேசம் சென்று முஜிபூரிடம் ஒரு சதி திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆனால் முஜிபூர் அதை முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த படுகொலைக்குப் பிறகு ஒரு கூட்டத்தின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் 'ரா' என்ன செய்துகொண்டிருந்தது என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு காவ், 'நாங்கள் இதில் ஆச்சரியப்படவில்லை என்று மட்டுமே என்னால் கூற முடியும்' என்றார். தான் நேரில் சென்று முஜிபூரை எச்சரித்ததாக அவர் பெருமை பீற்றிக் கொள்ளவில்லை என்று பாலசந்திரன், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். அவசரநிலை கால மேகங்கள் காவ் தலைவராக இருந்த காலத்தில் 'ரா' அமைப்பு அவசரநிலையின் நிழலின் கீழும் வந்தது. இந்த அமைப்பு அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும் பாலசந்திரன் இதை மறுக்கிறார். "அவசரநிலையின் போது தான் 'ரா' அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒருமுறை குற்றம் சாட்டினார். அது உண்மையல்ல. மக்களைக் கைது செய்தது ஐ.பி தான். 'ரா' அல்ல. சஞ்சய் காந்தி காவைப் பற்றி பெரியதாக உயர்வாக எண்ணவில்லை” என்று பாலசந்திரன் கூறினார். ஜனதா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், அரசாங்கம் இந்த அமைப்பின் மீது சந்தேகம் கொண்டு அதன் வரவுசெலவுத் திட்டம் மற்றும் அதிகாரங்களைக் குறைக்க தொடங்கிய சூழலில், காவ் 1977-ல் முன்கூட்டியே ஓய்வு பெற்றார். ஆனால் ஓய்வு காவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. அந்த ஆண்டில், அன்றைய அணுசக்தி ஆணையத்தின் தலைவரான ஹோமி சேத்னாவை, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு அறிவுறுத்துமாறு ஒப்புக்கொள்ள வைக்க 'ரா' தலைவர் என்.எஃப். சுந்தூக், காவின் உதவியை நாடினார். சேத்னாவிடம் இந்த செய்தியை தெரிவிக்க காவ் தன்னையே தேர்ந்தெடுத்ததாக பாலசந்திரன் கூறுகிறார். 1981-ல் பாகிஸ்தான் ஒரு ரகசிய அணுஆயுதத் திட்டத்தை தொடர்கிறது என்பதை வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு நிரூபிக்க இந்தியா போராடிக் கொண்டிருந்தது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், பி.பி.சி பேனோராமாவுடன் இணைந்து "இஸ்லாமிய வெடிகுண்டு" பற்றி ஆராய்வதை அறிந்த காவ், பாரிஸை தளமாக கொண்ட ஒரு மூத்த பத்திரிகையாளரை அணுகி, அந்த நாளிதழின் குழுவுடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய பாலசந்திரனுக்கு அறிவுறுத்துமாறு சுந்தூக்கிற்கு ஆலோசனை வழங்கினார். உளவுத்துறை தகவல்கள் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்த சர்வதேச ஊடகங்களை ஒரு வழியாகப் பயன்படுத்துவது ஒரு விசித்திரமான நடவடிக்கையாகும். பாலசந்திரனின் கூற்றுப்படி, இந்திரா காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான ஏ.சி.என். நம்பியார், காவை மீண்டும் பணி அமர்த்துமாறு அவருக்குப் பரிந்துரைத்தார். 1981-ல், காவ் கேபினட் செயலகத்தில் மூத்த ஆலோசகரானார். இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பங்கு என்று விவரிக்கப்படும் பணியை அவர் இரண்டு அல்லது மூன்று நபர்களை மட்டுமே கொண்ட ஒரு அலுவலகத்துடன் திறம்பட செய்து வந்தார் என்று பாலசந்திரன் கூறினார். அவரது இரண்டாவது இன்னிங்ஸ் திடீரென்று முடிவுக்கு வந்தது. அக்டோபர் 1984-ல், சீனாவுடனான ஒரு சாத்தியமான உறவை ஆராய்வதற்காக காவ் பெய்ஜிங்கில் இருந்தபோது, அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். சீன அதிகாரிகள் அவர் ஹாங்காங் செல்ல ஏற்பாடு செய்தனர். அங்கிருந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திரா காந்தியின் தகனத்திற்குப் பிறகு, அவர் ராஜீவ் காந்தியை சந்தித்து தன்னை பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்ப பிறகு அவர் மீண்டும் அரசுப் பதவியை வகிக்கவில்லை. அவர் பொதுவெளியிலும் காணப்படவில்லை. அவர் புகைப்படங்களில் அரிதாகவே தோன்றினார் மற்றும் தனது பணிக்காக உரிமையும் கோரவில்லை. இது பாலசந்திரனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், அவர் அறிந்த காவ் ”விளம்பர வெளிச்சத்திற்கு வராத எளிய மனிதர்" ஆவார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
பாகிஸ்தானை அலறவிட்ட இந்திய ஸ்பை மாஸ்டர்: 1971 போரின் மாபெரும் நாயகன்; ’ரா’ வரலாற்றை மாற்றி அமைத்த காவ்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk