Krishnagiri Hosur toll road நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், ஆண்டுதோறும் சுமார் 1.46 கோடி வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துவதைக் கருத்திற்கொண்டு, ஷிவா பில்டெக் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி தண்டனைத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. பயணியின் தொடர் சட்டப் போராட்டம் வெற்றி: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு! கிருஷ்ணகிரி–ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை முறையாகப் பராமரிக்காமல், பல கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்பட்ட புகாரில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமான சிவா பில்ட்டெக் பிரைவேட் லிமிடெட் மீது கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில், சாலையை முறையாகப் பராமரிக்காதது “சேவையில் கடுமையான குறைபாடு” என ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.15,000-மும் வழங்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சிவா பில்ட்டெக் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், சாலை பராமரிப்பு பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக சிவா பில்ட்டெக் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனத்துக்கு ரூ.1 கோடி தண்டனைத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் சட்ட உதவி நிதிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.919.91 கோடி சுங்க வருவாய் இதுகுறித்து தி இந்து நாளிதழில் வெளியான செய்தியின்படி, கிருஷ்ணகிரி–பெங்களூரு இடையே தொடர்ந்து பயணம் செய்து வரும் பி. சுரேஷ் பாபு என்பவர் இந்தப் புகாரைத் தாக்கல் செய்திருந்தார். சுங்கக் கட்டணம் செலுத்தியபோதும், சாலையில் பள்ளங்கள், சேதமடைந்த பகுதிகள் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து எதிர்கொண்டதாக அவர் புகார் தெரிவித்திருந்தார். மேலும், ஓசூரில் உள்ள ஜிஆர்டி மேம்பாலத்தில் தாங்குக் கம்பி (Bearing) பழுதடைந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பும் நீண்ட நேரம் நீடித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை மேற்கோள் காட்டிய புகார்தாரர், 2”021 மார்ச் முதல் 2025 ஏப்ரல் வரை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ.919.91 கோடி சுங்க வருவாய் வசூலிக்கப்பட்டது. இவ்வளவு வருவாய் கிடைத்தபோதும், சாலை வாகனங்கள் செல்லும் வகையில் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. சாலைப் பணிகள் முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்” என்றும் அவர் கோரியிருந்தார். நுகர்வோர் சட்டம் பொருந்துமா? இந்தப் புகாரை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம், “சுங்கக் கட்டணம் என்பது அரசின் சட்டப்பூர்வமான வரி வசூல் நடவடிக்கை என்றும், எனவே சுங்கம் செலுத்தும் நபரை நுகர்வோராகக் கருத முடியாது. மேலும், சாலையில் ஏற்பட்ட குறைபாடுகள் பின்னர் சரிசெய்யப்பட்டுவிட்டது. முந்தைய சலுகை ஒப்பந்த நிறுவனமான எச்.கே. டோல் ரோடு பிரைவேட் லிமிடெட் உடனான நடுவர் மன்ற வழக்கு காரணமாக சில பணிகள் தாமதமானது. ஓசூர் மேம்பாலத்தில் ஏற்பட்ட தாங்குக் கம்பி பழுது எதிர்பாராத நிகழ்வு” என்றும் விளக்கம் அளித்தது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த வாதத்தை நுகர்வோர் ஆணையம் நிராகரித்தது. ”சாலையைப் பயன்படுத்துவதற்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ் “சேவை” எனக் கருதப்படும். எனவே, சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சேவையில் குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர முடியும்” என்றும் ஆணையம் கூறியது. நேரடி ஆய்வில் சாலை குறைபாடுகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்-ஆணையர் ஆர். பிரியா, கிருஷ்ணகிரி–ஓசூர் சாலையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது சாலையில் கடுமையான விரிசல்கள், தரமற்ற ஒட்டுப்பணிகள், தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகள், முறையாகப் பராமரிக்கப்படாத சேவைச் சாலைகள், சாலை வழிகாட்டிக் கோடுகள் இல்லாதது உள்ளிட்ட பல குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சாலையோரத்தில் அதிகமாக வளர்ந்திருந்த செடிகள் காரணமாக வாகன ஓட்டிகளின் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டிருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. இந்த ஆய்வு அறிக்கை, புகார்தாரர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. மேலும், பராமரிப்பு விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக சிவா பில்ட்டெக் நிறுவனத்துக்கு நெடுஞ்சாலை ஆணையம், ஏற்கெனவே ரூ.30 லட்சம் அபராதம் விதித்திருந்ததையும் ஆணையம் சுட்டிக்காட்டியது. 1.46 கோடி வாகனங்கள் பயன்படுத்தும் சாலை கிருஷ்ணகிரி சுங்கச்சாலை வழியாக ஆண்டுக்கு சுமார் 1.46 கோடி வாகனங்கள் பயணிப்பதாக ஆணையம் குறிப்பிட்டது. இதைக் கருத்தில் கொண்டு, சாலைப் பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு தண்டனை நடவடிக்கை அவசியம் எனக் கூறி, சிவா பில்ட்டெக் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனத்துக்கு ரூ.1 கோடி தண்டனைத் தொகையை விதித்தது. இந்தத் தொகை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் சட்ட உதவி நிதிக்குச் (Legal Aid Fund) செலுத்தப்பட வேண்டும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 39(1)(d)-ன் கீழ் இந்த தண்டனைத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்குள் சீரமைக்க உத்தரவு சாலை ஆய்வின்போது கண்டறியப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் 2 மாதங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், போதுமான எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் சாலைப் பாதை ஒழுங்கை விளக்கும் குறியீடுகளை அமைக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் புகார்தாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.பி. சாய் பிரசாந்தி, யு.ஆர். மார்க்சின் பிரபா மற்றும் ஆர். கவுதம் ராஜ் ஆகியோர் ஆஜராகினர். கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ஆர். ராஜா தலைமையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை மோசமான பராமரிப்பு: பயணிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk