லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு தொடக்கத்திலேயே நடக்கவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகள் உடனும் இணைந்து செயல்பட தயார் என மஜ்லீஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். இது காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு புதிய அரசியல் கணக்கை ஓபன் செய்துள்ளது. உத்தர பிரதேசத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. அங்கு அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டன. மஜ்லீஸ் இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க விரும்பும் கட்சிகள் தங்களுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் மற்ற எதிர்க்கட்சிகள் உடன் இணைந்து செயல்பட தாங்களும் ரெடியாக இருப்பதாக ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பான முடிவை அக்டோபர் 2ஆம் தேதிக்குள் எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், மஜ்லீஸ் உடன் கூட்டணி அமைப்பது குறித்து சில முக்கிய கருத்துகளை குறிப்பிட்டுள்ளார். பாஜகவை தோற்கடிப்பதே முதன்மை நோக்கம் என்றாலும் முஸ்லிம்களால் மட்டும் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி 4 அல்லது 5 இடங்களில் வெற்றி பெறக்கூடும். ஆனால், அவர்கள் வாக்கை பிரிப்பதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் மஜ்லீஸ் கட்சி வென்று என்ன பயன். மேலும், ஹைதராபாத்தின் அரசியல் சூழலையும் உத்தரப் பிரதேசத்தின் அரசியல் சூழலையும் ஒன்றாக பார்க்க முடியாது" என்றும் அவர் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை அங்கு எப்போதுமே முஸ்லிம் வாக்குகள் முக்கியமானதாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சிக்கு எப்போதுமே முஸ்லிம்- யாதவ் சமூக வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சியும் தான் விட்ட இடத்தை ஓரளவுக்காவது பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டன. தற்போது இரண்டும் எதிர்க்கட்சிகளாக இணைந்து செயல்பட்டாலும், 2027 சட்டசபை தேர்தலை இதேபோல சந்திக்கும் என்று சொல்ல முடியாது. இரு தரப்பிற்குமே தங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த சூழலில் மஜ்லீஸ் கட்சி கூட்டணிக்குள் வந்தால், முஸ்லிம் வாக்குகள் ஒருங்கிணைக்கப்படுமா அல்லது ஒவைசிக்கு தனி அரசியல் தளம் உருவாகுமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இப்போது உபி அரசியலில் மஜ்லீஸ் கட்சியின் நிலைப்பாடு முக்கியமானதாக மாறும். தனியாக போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து போகும்.. அது பாஜக சாதகமாக அமையும். அதேநேரம் கூட்டணி அமைத்தாலும் கூட சிறுபான்மை அரசியல் என்று சொல்லி பாஜக அதை வைத்தே அரசியல் செய்யும் என்ற மற்றொரு கவலையும் உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளுக்கு இரண்டு விதமான சிக்கல் உருவாகியுள்ளது. கூட்டணி இல்லையென்றால் வாக்குகள் பிரியலாம்; கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு வேறு வகையான அரசியல் செய்யும்! இதற்கிடையே மஜ்லீஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த சையத் ஆசிம் வக்கார் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார். பாஜகவை எதிர்ப்பதே முக்கியம் என்றும், எதிர்க்கட்சிகள் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதை விட ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். வரும் நாட்களில் மேலும் சில மஜ்லீஸ் தலைவர்கள் காங்கிரஸை நோக்கி படையெடுக்கலாம் என தெரிகிறது. காங்கிரஸ்- மஜ்லீஸ் உறவை பொறுத்தவரை அது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எல்லா மாநிலங்களிலும் ஒரே போல இல்லை. தெலங்கானாவில் மஜ்லீஸ் கட்சி, காங்கிரஸுடன் களத்தில் எதிராகவே இருக்கிறது. இருப்பினும், காங்கிரஸ் முதல்வர் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ஒவைசி சில சந்தர்ப்பங்களில் ஒரே மேடையில் தோன்றியுள்ளார். காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை என்றாலும் ரேவந்த் ரெட்டியை ஆதரிப்பதாக ஓவைசி விளக்கம் அளித்துள்ளார். மறுபுறம் உத்த பிரதேசத்தில் சமாஜ்வாதி ஏற்கனவே முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் தனது இடத்தை வலுப்படுத்த முயல்கிறது. இதனால் ஒவைசியின் கூட்டணி அழைப்பு அங்கு குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லீம் வாக்குகள் யாருக்கு போனாலும் வெல்வது பாஜக தான்.. உபியில் சிக்கலாகும் இஸ்லாமியர் வாக்குகள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk