2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக், பாராலிம்பிக் படகோட்டம் மற்றும் கேனோ வேகப் பந்தயங்கள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில ராக்ஹாம்ப்டனில் உள்ள ஃபிட்ஸ்ராய் ஆற்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. சுமார் 500 முதலைகள் வாழும் இந்த ஆற்றில் நீரோட்டம், வெள்ள அபாயம், வானிலை மாற்றங்கள் குறித்து விரிவான தொழில்நுட்ப ஆய்வு செய்யப்பட்டாலும், வனவிலங்கு பாதுகாப்பு அபாயம் ஆய்வில் முழுமையாக சேர்க்கப்படாதது கேள்வி எழுப்புகிறது. செய்தியாளர் - ராஜ்குமார்.ர ஆஸ்திரேலியா என்றாலே... கங்காரு, கோலா கரடி, உலகின் மிகப்பெரிய பவளப்பாறை எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு ஆறு, உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது. காரணம்... முதலைகள் வாழும் இந்த ஆற்றில்தான் 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளின் படகோட்டம் மற்றும் கேனோ வேகப் பந்தயங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தின் ராக்ஹாம்ப்டன் நகரம் வழியாகச் செல்லும் ஃபிட்ஸ்ராய் ஆறுதான் அது. பொதுவாக உள்ளூர் மற்றும் பள்ளி அளவிலான படகோட்டப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் நடைபெறும் இந்த ஆறு, இன்னும் சில ஆண்டுகளில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிக்கான களமாக மாற உள்ளது. ஆனால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல்வேறு கேள்விகளும் விவாதங்களும் எழுந்தன. காரணம்... ஃபிட்ஸ்ராய் ஆறு என்பது முதலைகள் வாழும் பகுதியாகும். இந்த ஆற்றுப் பகுதியில் சுமார் 500 முதலைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், ஃபிட்ஸ்ராய் ஆற்றில் நீரோட்டம், நீர்மட்டம், வெள்ள அபாயம் மற்றும் வானிலை போன்ற இயற்கை காரணிகளும் முக்கியமான சவால்களாக பார்க்கப்பட்டன. இந்த நிலையில், ராக்ஹாம்ப்டனில் உள்ள ஃபிட்ஸ்ராய் ஆற்றின் போட்டிப் பாதையின் தகுதி குறித்து விரிவான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான சுயாதீன ஆணையமும், வாட்டர்புரூஃப் மரைன் கன்சல்டன்சி அண்ட் சர்வீசஸ் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், ஆற்றின் நீரோட்டம், நீர்மட்டம், காற்று மற்றும் அலை நிலைமைகள், வானிலை மாற்றங்கள் மற்றும் வெள்ள அபாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலகட்டத்திலும் அதற்கு முன்பான காலத்திலும் பல்வேறு சூழ்நிலைகளில் போட்டிப் பாதை எவ்வாறு செயல்படும் என்பதும் கணினி மாதிரிகள் மூலம் மதிப்பிடப்பட்டது. இதன் முடிவுகளை உலக படகோட்டி அமைப்பும், சர்வதேச துடுப்புப் படகு விளையாட்டு அமைப்பும் ஆய்வு செய்தன. அதன்பிறகு, ஃபிட்ஸ்ராய் ஆற்றில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் படகோட்டம் மற்றும் கேனோ வேகப் பந்தயங்களை நடத்துவதற்குத் தேவையான பாதுகாப்பான, சீரான மற்றும் நியாயமான போட்டிச் சூழலை வழங்க முடியும் என்று அந்த சர்வதேச விளையாட்டு அமைப்புகள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் குழுவும் ராக்ஹாம்ப்டன் போட்டி நடைபெறும் இடத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த தொழில்நுட்ப ஆய்வின் முக்கிய நோக்கம், போட்டி நடைபெறும் நீர்ப்பரப்பின் தொழில்நுட்பத் தகுதி, போட்டியின் நியாயத்தன்மை மற்றும் இயற்கைச் சூழ்நிலைகளில் அதன் செயல்திறனை மதிப்பிடுவதுதான். வெளியான தகவல்களின்படி, முதலைகளால் ஏற்படக்கூடிய வனவிலங்கு பாதுகாப்பு அபாயம் அந்த ஆய்வின் முக்கிய வரம்புக்குள் இடம்பெறவில்லை. இதனால், “முதலைகள் இருக்கும்போது போட்டி எப்படி நடத்தப்படும்?” என்ற கேள்வி தொடர்ந்து விவாதமாகியுள்ளது. அதே நேரத்தில், ஃபிட்ஸ்ராய் ஆற்றில் தற்போது குயின்ஸ்லாந்து பள்ளிகள் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட படகோட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படகோட்டப் போட்டிகளுக்கான பாதுகாப்பு திட்டங்களில், முதலை தென்பட்டால் போட்டியை உடனடியாக நிறுத்தி, வீரர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே பாதுகாப்பு நடைமுறையே ஒல்லிபிக் போட்டியிலும் நடைபெறுமா அல்லது மாற்று ஏற்பாடுகள் நடைபெறுமா அல்லது போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
500 முதலைகள், வெள்ள அபாயம்! பேராபத்துகளுக்கிடையே ஒலிம்பிக் போட்டி! கேள்விக்குறியாகும் பாதுகாப்பு?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk