ஐக்கிய அரபு அமீரகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக்குப் பிறகு அவரது மனைவியும், மகனும் ஷார்ஜாவை விட்டு வெளியேறி இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபூரைச் சேர்ந்தவர் ஆல்வின் பிரகாஷ் குந்தர் (38). இவர் கடந்த 14 ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வந்துள்ளார். இவரது மனைவி டீனா குந்தர் பள்ளி ஆசிரியையாகவும், அவர்களின் மகன் 10ஆம் வகுப்பு படித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 20ஆம் தேதி ஆல்வினின் சகோதரர் அனில் அவரைத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவரது அழைப்பை ஏற்காமல், ’நான் நன்றாக இருக்கிறேன்’ என வெறும் குறுஞ்செய்தி மட்டுமே சென்றுள்ளது. ஆல்வின், வழக்கமாக குரல் பதிவுகள் மூலமே பதில் அனுப்புவார் என்பதால் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர் ஷார்ஜாவில் உள்ள ஆல்வினின் நண்பர் மூலம் விசாரிக்கச் சொல்லியுள்ளனர். விசாரணையில் அவர், இந்தியா வரவில்லை என்பதும், பாஸ்போர்ட் பதிவுகளின்படி அவர் அமீரகத்திலேயே இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், அவர் ஜூலை மாதமே கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. ஓமன் செல்லும் பாதையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஆல்வினின் காரின் டிக்கியில், இரண்டு பைகளில் அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கொலைக்குப் பிறகு அவரது மனைவி டீனா குந்தரையும், அவர்களது பதின்வயது மகனையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஷார்ஜாவை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பதும், கொலைக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதும் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவரது உடலை இந்தியா கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஷார்ஜாவில் கொடூரம்.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட இந்தியரின் உடல்.. மனைவி, மகன் மாயம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk