செய்தியாளர் - M.மீரா சூடானில் நீடித்து வரும் போருக்கு மத்தியில், தங்கச் சுரங்கத் தொழில் நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளது. இத்னால் பாதுகாப்பற்ற சுரங்கப் பணிகள் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்திய இரு சுரங்க விபத்துகளில் மட்டும் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு சூடானில், எகிப்து எல்லைக்கு அருகே உள்ள Awny சுரங்கப் பகுதியில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் சுரங்கத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இதற்கு சில நாட்களுக்கு முன்பு West Kordofan மாநிலத்தில் உள்ள al-Zaraa தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்துகள், சூடானின் தங்கச் சுரங்கத் துறையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. ஆப்பிரிக்காவின் முக்கிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றான சூடான், கடந்த ஆண்டு சுமார் 70 டன் தங்கத்தை உற்பத்தி செய்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 2024-ல் 64 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இது 2022-இல் பதிவான 41.8 டன்னைவிட 53 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டப்பூர்வ ஏற்றுமதி வருவாயாக சுமார் 1.57 பில்லியன் டாலர் கிடைத்துள்ளது. ஆனால், தங்கத்தின் முக்கியத்துவம் அதிகரித்ததற்கு பின்னால் சூடானின் மோசமான பொருளாதார நிலையும் உள்ளது. 2023 ஏப்ரலில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையான Rapid Support Forces (RSF)-க்கும் இடையே போர் தொடங்கியதிலிருந்து, தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் சீர்குலைந்து, லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தச் சூழலில், தங்கம் பலருக்கு முக்கியமான வருமான வாய்ப்பாக மாறியுள்ளது. அதே நேரத்தில், நாட்டின் பெரும்பாலான தங்கம் அரசு வழியாக ஏற்றுமதி செய்யப்படாமல் கடத்தல் மற்றும் சட்டவிரோத வலையமைப்புகள் மூலம் வெளியேறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூடானின் தங்க ஏற்றுமதியில் ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய இடம் வகிக்கிறது. தங்க வர்த்தகம் தொடர்பாக சூடானுக்கும் UAE-க்கும் இடையே சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன; இந்தக் குற்றச்சாட்டை UAE மறுத்துள்ளது. தங்கச் சுரங்கங்களில் பெரும்பாலானவை தொலைதூரப் பகுதிகளில் செயல்படும் முறைசாரா சுரங்கங்களாக இருப்பதால், நவீன தொழில்நுட்பம், போதிய கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். போரால் சூடானின் பொருளாதாரம் மேலும் சீரழிந்துள்ளது. 2023-க்கு முன்பு ஒரு அமெரிக்க டாலருக்கு சுமார் 570 சூடான் பவுண்டுகள் இருந்த நிலையில், 2026 ஏப்ரலில் ஒரு டாலருக்கு 3,500 பவுண்டுகளுக்கும் அதிகமாகி உள்ளது. உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால், உயிருக்கு ஆபத்தானதாக இருந்தாலும் தங்கச் சுரங்கப் பணி பலருக்கு தவிர்க்க முடியாத வாழ்வாதாரமாக மாறியுள்ளது. சூடானின் போர்ச்சூழல் நீடிக்கும் நிலையில், தங்கத்தின் மீதான இந்தப் பொருளாதாரச் சார்பு மேலும் பல உயிர்களை ஆபத்தில் தள்ளக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
சூடான் | தங்கத்துக்காக உயிரைப் பணயம் வைக்கும் மக்கள்.. சுரங்கத்தில் அடுத்தடுத்து மரணம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk