பட மூலாதாரம், @poolbearlife லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள பிரையன் கார்டன் மற்றும் ரிகார்டோ மார்டினெஸ் ஆகியோரின் வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் கருப்புக் கரடிகள் ஜாலியாக ஓய்வெடுக்க விரும்புகின்றன. தெற்கு கலிபோர்னியா முழுவதும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தம்பதியினர் தங்களது 'கரடி விருந்தினர்களின்' வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அதோடு, இந்த வனவிலங்குகளுடன் தாங்கள் எவ்வாறு இணக்கமாக வாழ்ந்து வருகிறோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றனர். லாஸ் ஏஞ்சலிஸில் தான் வாங்கவிருந்த வீட்டின் நீச்சல் குளத்தில் கருப்புக் கரடிகள் நீந்துகின்றன என்று கேள்விப்பட்டபோது, கார்டன் முதலில் மிகவும் அச்சப்பட்டார். "நான் நிஜ வாழ்க்கையில் கரடியை நேரில் பார்த்ததேயில்லை. 'நாங்கள் முள்வேலி வைத்து மிகப்பெரிய தடுப்புச் சுவரைக் கட்டிவிடலாம்' என்று தான் முதலில் சொன்னேன்" என்று அவர் நினைவுகூர்கிறார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தங்கள் வீட்டு நீச்சல் குளத்தில் ஒரு கரடி குடும்பம் விளையாடுவதையும், தனது தோட்டத்தில் ஓடித் திரிவதையும் பார்த்து ரசிக்கத் தொடங்கிவிட்டார். இந்த 'விருந்தினர்கள்' வாரத்திற்குப் பல முறை இங்கு வந்து செல்கின்றனர். "நாம் அவற்றுக்குத் தீங்கு விளைவிக்காமலும், அவை நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலும் இருக்கும் வரை, அவை இங்கு வந்து மரங்களில் உடலை உரசுவதோ, குட்டித் தூக்கம் போடுவதோ, வெயில் காலத்தில் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடுவதோ எங்களுக்குப் பிரச்னையே இல்லை," என்கிறார் கார்டன். கார்டனும் அவரது இணையர் ரிகார்டோ மார்டினெஸும் தங்கள் நீச்சல் குளத்தையும் தோட்டத்தையும் கரடிகளுடன் அமைதியான முறையில் பகிர்ந்துகொள்வதையே விரும்புகின்றனர். இருப்பினும், அவர்களின் நீச்சல் குளத்தில் கரடிகள் ஓய்வெடுக்கும் இந்த அழகான வீடியோக்களுக்குப் பின்னால், இதனை சாத்தியமாக்கும் தீவிர கண்காணிப்பும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் நிறைந்த ஒரு ஆழமான பின்னணி உள்ளது. இந்த தம்பதியர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மன்ரோவியா பகுதியில் வசிக்கின்றனர். இவர்களது வீடு, சான் கேப்ரியல் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருப்பதோடு, சுமார் 2,830 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 'ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியை' எல்லையாகவும் கொண்டுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இவர்கள் இந்த வீட்டிற்குக் குடியேறிய புதிதிலேயே கரடிகளின் நடமாட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் சத்தம் எழுப்பியும், காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்தியும், சில சமயங்களில் மென்மையான ரப்பர் தோட்டாக்கள் கொண்ட பெயிண்ட்பால் துப்பாக்கியைப் பயன்படுத்தியும் கரடிகளை விரட்ட முயன்றனர். "ஆனால் அது எங்களுக்கு மிகவும் மனவேதனையைத் தந்தது," என்று கூறும் மார்டினெஸ், "அப்படிச் செய்வது சரியாகப் படவில்லை. அவை வீட்டிற்குள் அத்துமீறி நுழையாமலும், குப்பைகளைக் கிளறாமலும் இருக்கும் வரை, வந்து செல்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவு செய்தோம்" என்கிறார். நெருக்கமான சூழலிலும் தங்களையும் கரடிகளையும் பாதுகாப்பாக வைக்கும் ஒரு மென்மையான அணுகுமுறையை அவர்கள் தேடினர். "அதன்பிறகு நாங்கள் தீவிரமில்லாத, எளிய வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்தோம். உண்மையிலேயே அவைதான் எங்களுக்குச் சிறப்பாகப் பலனளிக்கின்றன," என்கிறார் கார்டன். கருப்புக் கரடிகள் "தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன" என்கிறார் மார்டினெஸ். "அவை உங்களைச் சாப்பிடப் போவதில்லை" என்கிறார். கருப்புக் கரடிகள் மனிதர்களைத் தாக்குவது மிகவும் அபூர்வமானது; கலிபோர்னியா வரலாற்றிலேயே ஒரே ஒருமுறைதான் கரடி தாக்கி உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தாங்கள் எப்போதும் கரடிகளிடமிருந்து "பாதுகாப்பான இடைவெளியை" பராமரிப்பதாகவும், அந்த விலங்குகள் அருகில் இருக்கும்போது வீட்டிற்குள்ளேயே இருந்து விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில சமயங்களில் எதிர்பாராத சந்திப்புகளும் நடப்பதுண்டு. "எங்கள் பார்பிக்யூ விருந்துகளின் போது கரடிகள் திடீரென நுழைந்தது உண்டு" என்கிறார் கார்டன். "ஆனால், அவை மனிதர்களைப் பார்த்தவுடனேயே வழக்கமாக அமைதியாக நடந்து விலகிச் சென்றுவிடும்." பட மூலாதாரம், @poolbearlife தங்களுக்கு மிகவும் பிடித்த கரடி விருந்தாளி 'மேடி' என கார்டனும் மார்டினெஸும் கூறுகின்றனர். 2023-ஆம் ஆண்டில் துறுதுறுப்பான குட்டியாக இருந்த மேடி, நீச்சல் குளத்தில் விளையாடுவதையும் தோட்டத்தில் சுற்றித் திரிவதையும் மிகவும் விரும்பிச் செய்தது. "அவள் எங்கள் செல்லப் பிள்ளை" என்கிறார் மார்டினெஸ். ஓராண்டு கழித்து, மேடி தனது குட்டிகளுடன் மீண்டும் வந்தது. "துரதிர்ஷ்டவசமாக அவள் தனது குட்டிகளை இழந்துவிட்டாள்; அதனால் அவளுடன் சேர்ந்து நாங்களும் பெரிய உணர்ச்சிப் போராட்டத்தைக் கடந்துவந்தோம்" என்கிறார் மார்டினெஸ். இந்த ஆண்டு அவள் தனது புதிய குட்டிகளை வீட்டிற்கு அழைத்து வந்தாள். "நாங்கள் இதுவரை பார்த்ததிலேயே மிக அழகான உயிரினங்கள் அவை. பார்த்ததுமே தூக்கி அணைத்துக் கொஞ்சத் தோன்றும் அளவுக்கு அழகாகவும், அதே சமயம் நீளமான நகங்களுடன் அச்சுறுத்துபவையாகவும் இருக்கின்றன. 'பங்கி' என்ற மற்றொரு துடிப்பான இளம் கரடி, தன் தாயுடன் குட்டியாக இருந்தபோதே முதன்முதலில் இந்த வீட்டிற்கு வந்தது என்கிறார் கார்டன். "நீச்சல் குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக் மிதவைகளைக் கடித்து உடைப்பதுதான் அதன் வேலை" ஒருமுறை அது ஒரு கப்கேக் வடிவிலான பிளாஸ்டிக் மிதவை மீது ஏறி நீச்சல் குளத்தின் நடுவே மிதந்து சென்றது. "அந்தக் கோடைகாலத்தில் நீச்சல் குளத்தில் அது செய்த குறும்புகளால் எங்கள் இதயங்களைக் கொள்ளைகொண்டது" என்கிறார் கார்டன். வழக்கமாக தங்கள் வீட்டிற்கு வந்து, நீச்சல் குளத்தில் மிதந்தபடியே நீண்ட நேரம் தூங்க விரும்பும் மற்றொரு பெண் கரடிக்கு அவர்கள் 'நாப்பி' என்று செல்லப்பெயரிட்டுள்ளனர். "அது நேராக நீச்சல் குளத்தின் படிக்கட்டுகள் வரை சென்று, உள்ளே இறங்கி, தலையைச் சாய்த்து ஓய்வெடுக்கத் தொடங்கிவிடும். கரடிகள் நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் தூங்கும் என்பதை அதைப் பார்த்துத்தான் நான் தெரிந்துகொண்டேன்" என்கிறார் கார்டன். அந்தத் தம்பதியினரைப் பார்த்தால் நாப்பி உறுமும். "அவள் ஒரு பெரிய தாய் கரடி. வாழ்க்கையில் எல்லாவற்றையுமே கொஞ்சம் எரிச்சலுடனே பார்க்கும் பெண் அது," என்று கார்டன் நகைச்சுவையாகக் கூறுகிறார். இந்தக் கரடிகளின் வருகை, கலிபோர்னியாவாசிகளுடன் இணைந்து வாழ முயலும் கருப்புக் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. அதே சமயம், இவை உள்ளூர் சமூகங்களுக்குப் பல சவால்களையும் ஏற்படுத்துகின்றன. கலிபோர்னியாவில் 60,000-க்கும் மேற்பட்ட கருப்புக் கரடிகள் வாழ்கின்றன என்கிறார் லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிஞரான வில்சன் ஷெர்மன். இந்தக் காட்டு விலங்குகள் லாஸ் ஏஞ்சலிஸின் புறநகர்ப் பகுதிகளில் அடிக்கடி தென்படுகின்றன. "அவை மிகவும் புத்திசாலியான, சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் அனைத்துண்ணிகள். அவை எல்லாவற்றையும் சாப்பிடுகின்றன; மனிதர்கள் வாழும் இடங்களில் இலகுவாக உணவைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டன" என்கிறார் ஷெர்மன். கரடிகளுக்கு மனிதர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்கிறார். இருப்பினும், அனைத்துக் கரடி சந்திப்புகளும் கார்டன் மற்றும் மார்டினெஸின் அனுபவத்தைப் போல நேர்மறையானவையாக அமைவதில்லை. "கரடிகள் குப்பைகளைத் தேடிச் செல்வதும், வீடுகளுக்குள் நுழைவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன" என்று ஷெர்மன் கூறுகிறார். "இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், நிலைமை கைமீறிப் போகும் போது, இறுதியில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் கரடிகளாகவே இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் பல கரடிகள் கொல்லப்பட்டுள்ளன." 2026 மார்ச் மாதத்தில், மான்ரோவியாவில் தனது நாயை நடைப்பயிற்சி அழைத்துச் சென்ற பெண் ஒருவரைக் கரடி தாக்கியதால், 'பிளாண்டி' என்று அழைக்கப்பட்ட தாய் கருப்புக் கரடி, கலிபோர்னியா மீன் மற்றும் வனவிலங்குத் துறையால் கருணைக்கொலை செய்யப்பட்டது. இந்த பிளாண்டி கரடி, கார்டன் மற்றும் மார்டினெஸின் தோட்டத்திற்குச் சில முறை வந்து சென்றபோதிலும், யாருக்கும் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தியதில்லை. எனவே, அதைக் கொல்வதைத் தடுப்பதற்காகக் கார்டன் திரட்டிய ஆன்லைன் மனுவில் கிட்டத்தட்ட 6,000 பேர் கையெழுத்திட்டனர். "இது எங்களுக்கு மிகவும் மனவேதனை அளிப்பதாக இருந்தது. பிளாண்டி அனைத்து தாய் கரடிகளையும் போன்றதுதான்; அது தங்குவதற்கு இடம் தேடவும், தன் குட்டிகளை வளர்க்கவும், தன் வாழ்க்கையை வாழவும் மட்டுமே முயன்றது" என்கிறார் கார்டன். ஆனால், அந்தக் கரடிதான் அந்தச் சம்பவத்திற்கும், 2025 ஜூன் மாதத்தில் மான்ரோவியாவில் தங்கள் வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் காரணம் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்ததாகக் கலிபோர்னியா மீன் மற்றும் வனவிலங்குத் துறை கூறுகிறது. "பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஒரு விலங்கு அச்சுறுத்தலாக இருக்கும்போதும், அதை மீண்டும் பாதுகாப்பாகக் காட்டுப்பகுதிக்கு அனுப்ப முடியாத சூழலிலும் மட்டுமே 'கருணைக்கொலை' என்பது இறுதி முயற்சியாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். "அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவது ஒரு தீர்வாகத் தோன்றலாம், ஆனால் அது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றால் அது சாத்தியமான வழிமுறையல்ல. கரடிகள் இடங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை; எனவே அவை பெரும்பாலும் தங்களுக்குப் பழக்கமான பகுதிகளுக்கே திரும்பி வந்துவிடுகின்றன." அந்தக் கரடியின் குட்டிகள் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அவை தயாரானதும் பொருத்தமான வாழ்விடத்தில் விடுவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறுகிறார். பட மூலாதாரம், @poolbearlife கரடிகளுடனான மோதலைக் குறைக்க, குப்பைத் தொட்டிகள் மற்றும் உணவை வெளியே வைப்பது போன்ற கரடிகளைக் கவரும் விஷயங்களை கட்டுப்படுத்துவது முக்கியம் என்கிறார் ஷெர்மன். "புழுக்கள் மற்றும் வேர்களைத் தோண்டித் தேடிக் கொண்டிருக்கும் ஒரு கரடிக்கு, பீட்சா நிறைந்த ஒரு பெட்டி கிடைப்பது என்பது அதன் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வாக அமைகிறது." குடியிருப்புப் பகுதிகளைக் கரடிகள் வராத இடமாக வைத்திருப்பது ஒரு "கூட்டு முயற்சி" என்றும் ஷெர்மன் மேலும் கூறுகிறார். "அனைவரும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்; ஏனெனில், ஒருவர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் உணவுக் கழிவுகள் போன்றவற்றை விட்டுவிட்டால், கரடிகளுக்கு மற்ற வீடுகளின் தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்." கழிவுகளைக் கையாள்வதில் தாங்கள் "மிகவும் எச்சரிக்கையாக" இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். "நாங்கள் எங்கள் வீட்டு குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துவதே இல்லை. வாரத்திற்கு ஓரிரு முறை அவற்றை என் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று விடுகிறேன்." அவர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடியே வைத்திருப்பதோடு, காருக்குள் ஒருபோதும் உணவை விட்டு வைப்பதில்லை. தங்கள் வீட்டிற்கு வரும் எந்தவொரு கரடியுடனும் தங்களுக்கு ஒருபோதும் எதிர்மறையான அனுபவம் ஏற்பட்டதில்லை என்று இந்தத் தம்பதியினர் கூறுகிறார்கள். மார்டினெஸ் ஒருமுறை தற்செயலாக கேரேஜைத் திறந்து வைத்திருந்தபோது, அதற்குள் 'நாப்பி' இருப்பதைக் கண்டார். "நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தோம்" என்கிறார் அவர். "நான் மெதுவாகப் பின்வாங்கி வந்தேன், ஏனெனில், கரடியை ஒரு மூலைக்குள் சிக்க வைப்பது ஆபத்தானது; அந்தக் கரடி கேரேஜிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டது" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images மார்டினெஸ் மற்றும் கார்டனின் சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் வீட்டு கண்காணிப்புக் கேமராக்கள், மக்கள் "கரடிகளைத் தனித்தனி உயிரினங்களாகப் புரிந்துகொள்ளவும், அவற்றின் வாழ்க்கையை நெருக்கமாகப் பார்க்கவும் வழிவகுக்கின்றன" என்கிறார் ஷெர்மன். ஆனால் அவருக்கு சில தயக்கங்களும் உள்ளன. "அவற்றை மிக மென்மையான அல்லது அழகான உயிரினங்களாகச் சித்தரிப்பதன் மூலம், யதார்த்தத்தை மீறிய ஒரு மாயையான பிம்பத்தை உருவாக்கும் (Disneyfication) அபாயம் எப்போதும் உள்ளது. அவை பொம்மை கரடிகள் அல்ல, அவை காட்டு விலங்குகள்தான்." கரடிகளும் மனிதர்களும் ஒருவருக்கொருவர் மிகவும் இயல்பாக பழகிவிடக் கூடாது என்று ஷெர்மன் எச்சரிக்கிறார். "கரடிகளை நேசிப்பதன் ஒரு பகுதி என்னவென்றால், ஆரோக்கியமான எல்லைகளை உருவாக்குவதும், அவை தவிர்க்க முடியாமல் நமது பகுதிகளைக் கடந்து செல்லும்போது அவை பாதுகாப்பாகச் செயல்பட வழிவகுப்பதும் ஆகும்," என்று அவர் கூறுகிறார். தங்களது @poolbearlife என்ற இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம், கரடிகளிடம் மனிதர்கள் எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் மற்றும் விரும்பத்தகாத சந்திப்புகளை எவ்வாறு குறைப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கார்டனும் மார்டினெஸும் முயற்சிக்கின்றனர். கருப்பு கரடிகளுடனான தங்கள் உறவு அனைத்து இடங்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்க முடியாது என்பதை அவர்கள் வலியுறுத்துகிறார்கள். . "நாங்கள் வாழும் இடத்தில் இது எங்களுக்குச் சரியாக இருக்கிறது" என்கிறார் கார்டன். "வனவிலங்குகளுடன் நாம் எவ்வாறு இணைந்து வாழ முடியும் என்ற சமநிலையைக் கண்டறிவது தான் முக்கியம்" என்கிறார் மார்டினெஸ். "நாங்கள் இங்கு வாழ்கிறோம், கரடிகளும் இங்கு வாழ்கின்றன. அவை வேறு எங்கும் சென்றுவிட வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
'வீட்டு நீச்சல் குளத்தில் அடிக்கடி வந்து குளிக்கும் கரடிகள்' - இந்த குடும்பம் என்ன செய்கிறது?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk