தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த சீமான், ஆளும் கட்சியான தவெகவை கடுமையாக விமர்சித்தார். ஊழல் சக்தி- தீய சக்தி என விமர்சித்துவிட்டு அங்கிருந்து வந்தவர்களை வைத்து கொண்டே அரசியல் செய்வது எந்த விதத்தில் சரி என கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தலுக்கு முன்பு விஜய்யை தன்னை வைத்து கார் ஓட்டியதாகவும் அப்போது கூட்டணி குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டார். தாராபுரம் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றிருந்த சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமானார். இதையடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தாராபுரத்தில் தவெக சார்பில் மீண்டும் சத்யபாமாவே போட்டியிடுகிறார். மேலும் திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் நாம் தமிழர் சார்பில் தாராபுரம் தொகுதியில் கார்த்திகா போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசிய சீமான், தனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக கூட தவெக சொன்னதாக குறிப்பிட்டார். மேலும், விஜய் தன்னை வைத்து கார் ஓட்டியதாகவும் அப்போது கூட்டணி குறித்து ஆலோசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், "என் தம்பியும் (விஜய்யும்) நானும் ஒரு வாகனத்தில் பயணம் செய்தோம். அவர்தான் வாகனத்தை ஓட்டினார். அப்படி சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று என்னிடம், 'அண்ணே, நாம் காங்கிரஸையும் கூட சேர்த்துக்கொள்ளலாமா?' என்று கேட்டார். நான் உடனே திரும்பி, 'என்ன இது, என்ன கேள்வி இது? உனக்கு யார் இதுபோன்ற ஆலோசனைகளையெல்லாம் தருகிறார்கள்?' என்று கேட்டேன். காங்கிரஸையும் சேர்த்துக்கொண்டு மக்களிடம் என்ன அரசியலை முன்னெடுப்பாய்? கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசுவாயா? காவிரி நதிநீர் உரிமை குறித்து பேசுவாயா? அல்லது மொழி கொள்கை பற்றிப் பேசுவாயா? அல்லது ஈழ விடுதலை குறித்து பேசுவாயா? எதையுமே பேச முடியாது. இந்த நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த தீமைகளுக்கும் அவர்களே மூலக் காரணம்' என்று கூறினேன். உலகில் இருக்கும் அனைத்து தீய திட்டங்களுக்கும் வேர் தேடிப் போனால், அங்கே அமெரிக்கக்காரனின் கையெழுத்துதான் இருக்கும் என்று நம்மாழ்வார் கூறுவார்கள். அப்படி தான் இந்தியாவில் இருக்கும் அனைத்து தீய திட்டங்களுக்கும் வேர் தேடி போனால், காங்கிரஸ்காரனின் கையெழுத்துதான் இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தீய திட்டங்களுக்கும் வேர் தேடி போனால், அங்கே கருணாநிதியின் கையெழுத்தாகத்தான் இருக்கும்! இப்போது இந்த இடைத்தேர்தலையே எடுத்துக்கொள்வோமே.. அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற சத்யபாமா எதற்காக பதவி விலகினார்? தன்மானமுள்ள ஒரு தமிழ்மகன் இது குறித்து கேட்க வேண்டும் தானே.. 'நீ இதே தொகுதி எம்எல்ஏ தானே? நாங்கள் வாக்களித்துத்தானே உனக்கு எம்எல்ஏ. பதவியை தந்தோம்? இப்போது எதற்காக பதவி விலகினாய்?' என்று கேட்க வேண்டாமா.. இந்த கட்சியிலிருந்து அந்த கட்சிக்கு மாற வேண்டிய அவசியம் என்ன? அதற்கான தேவை என்ன? அதே பதவிக்கு மீண்டும் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றால், 'எப்படியும் மக்கள் நமக்கு வாக்களித்து விடுவார்கள், அதனால் நாம் போட்டியிடுவோம்' என்று நினைக்கிறார்கள். அவர்களின் கட்சி தலைவர் யார்? ஒருவரை ஊழல் சக்தி என்றார், தீய சக்தி என்றார். ஆனால், அந்த தீய சக்தியிடம் வாக்குகள் பெற்று வென்றவர்களைத்தான் தங்களோடு வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறார். ஊழல் சக்தி என்று கூறிவிட்டு, அந்த ஊழல் சக்தியின் மூலம் வெற்றி பெற்றவர்களை தங்களோடு சேர்த்துக்கொண்டு இப்போது தேர்தலில் நிறுத்தியிருக்கிறார். அவர் என்ன வாஷிங் மெஷினா இருக்கிறது, துவைத்து புனிதப்படுத்தி விடுவதற்கு? இது ஒரு கொடுமை" என்று கடுமையாக விமர்சித்தார்.
\"விஜய் என்னை வைத்து கார் ஓட்டினார்! அப்போ என்ன சொன்னார் தெரியுமா?\" சீமான் பரபர தகவல்!
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk