ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 9 | மருத்துவமனையின் வலிகளும்.. ஏக்கங்களும்!

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️
ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 9 | மருத்துவமனையின் வலிகளும்.. ஏக்கங்களும்!

கடந்த வாரம் நண்பர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். "உன்னுடைய கட்டுரைகளைப் 'புதிய தலைமுறை' இணையதளத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன். சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம், நீ சொல்லும் எல்லா நிகழ்விலும் நீ ஒரு பார்வையாளனாக ( OBSERVER) மட்டுமே இருக்கிறாய், நீ என்ன செய்தாய் என்று சொல்லவே இல்லை" என்று அந்தச் செய்தியில் இருந்தது. நான் ஏற்கெனவே சொன்னது போலத்தான், "சக மனிதன் வாதைகளுக்குள்ளும், வலிகளுக்குள்ளும் தவிக்கும்போது, அதைச் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருப்பது சதாகாலமும், நாமும்தான்" . சூழ்நிலைகளுக்குள் இருக்க முடிந்த மனிதனால் ஒருபோதும் சூழ்நிலைகளைக் கையாள முடிவதில்லை. சூழ்நிலைகளைக் கையாளத் தெரிந்தவன் எல்லாச் சூழ்நிலைகளையும் தனக்கேற்றபடி மாற்றிக்கொள்கிறான். 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைப்போல நான் இச்சமூகத்தின் ஒரு பிரதி. சராசரி பொதுபுத்தி. அவசர வேலையில் இருசக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருக்கும்போது யாரோ கீழே விழுந்து அவரைச் சுற்றிப் பத்து பேர் முதலுதவி செய்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, இத்தனை பேர் இருக்கிறார்களே, நாம் கிளம்பிவிடுவோம் என்று பதினொன்றாவதாக நிற்கும் இடத்தை சமூக பொதுபுத்தியின் பொருளாதார வாழ்விற்குக் காவு கொடுக்கும் 'பொது பிரஜை' நான். மூன்று வயதுக் குழந்தை பிளக் பாயிண்ட்டில் மாட்டி வைத்திருந்த கொசு மருந்து (LIQUID)ஐக் கழற்றி வாயில் ஊற்றிக்கொண்டது என்று அக்குழந்தையின் பாட்டி குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு அவசரமாக மருத்துவர் அறையைத் திறக்கப்போனாள். செவிலியர்கள் அவரை அவசர அவசரமாக வார்டு அறைக்குள் நகர்த்தி மருத்துவரை அழைத்துப்போனார்கள். 'குழந்தையைச் சரியாய்ப் பார்க்கத்தெரியாதா?" என்ற நான்கு பேர்களின் கேள்விகளோடு குற்றவுணர்ச்சியோடு அக்குழந்தையின் தாய் முகமுழுக்க அழுகையோடு அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள். அறைக்குள்ளிருந்து வந்த குழந்தையின் அழுகைச் சத்தமும் செவிலியர்களின் ஓட்டமும் தாயை நிலைகுலையச் செய்துகொண்டிருந்தது. ஒரு வயோதிகர் என்னருகில் வந்து "கொசு மருந்த குடிச்சிருச்சு குழந்தை, என்னாகும், சரியாயிருமா?" என்று என்னிடம் கேட்டார். மருத்துவமனைகளில் அமர்ந்து சதா மனிதர்களை நீங்கள் கவனிக்க வேண்டும். எத்தனை எத்தனை வலிகள், எவ்வளவு கண்ணீர்கள், எத்தனை வேண்டுதல்கள், எவ்வளவு கூக்குரல்கள், வார்த்தையில் பிரவேசிக்க முடியாத ஏக்கங்கள். வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை என்ற எதார்த்தத்தை முகத்தில் அறையும் ஓர் இடம் மருத்துவமனையின் அவசரகால சிகிச்சை வளாகம். குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த மருத்துவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை அந்தக் குழந்தையின் உறவினர்கள் மற்றும் தாய் தவிர்த்து நானும்கூட எதிர்பார்த்திருந்தேன். "பயப்படவேண்டாம், ஒன்றும் ஆகாது" என்றார் மருத்துவர். வயோதிகர் என் கைகளைப் பற்றிக்கொண்டார். "நன்றி தம்பி" என்றார். அதைத்தான் நானும் சொல்லியிருந்தேன். நான் சொன்னது அவருக்கான நம்பிக்கை. மருத்துவர் சொன்னது அறிவியலில் பகுத்தறிந்து சொன்ன உண்மை. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. ஆனாலும் குற்ற உணர்ச்சியில் வெளியில் நின்று அழுதுகொண்டிருந்த தாயின் தகப்பனான அந்த வயோதிகனுக்கு நிறைய நடுக்கங்கள் இருந்திருக்க வேண்டும். குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையில் வயோதிகர் என் கைகளைப் பற்றி நன்றி சொல்வது என்பது, அவர் இந்த இயற்கைக்குக் கூறும் நன்றியாகவே பட்டது. நான் ஒரு சாட்சி. அங்கிருந்த மரம், பறவை, யாவையையும் பார்த்துக்கொண்டிருந்த கண்கொண்ட சாட்சி, அவ்வளவே. 'ஒருத்தர் மட்டும் கூட இருங்க, மத்தவங்களாம் வெளியே நில்லுங்க 'என்ற செவிலியர், தாயின் முகத்தைப் பார்த்துவிட்டு, " அக்கா, நீங்க போய் பாப்பாட்ட நில்லுங்க" என்றார். ஓடிக்கொண்டு போனாள் தாய். இந்தக் காட்சியில் சமூகத்தின் பிரஜையாக நான் பார்த்தது வெறுமனே எதார்த்தம். அரை மணி நேரம் கழித்து மருத்துவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டேன். தொழில் ரீதியான சந்திப்புதான் அது. என் வேலைகளை முடித்துவிட்டு, அக்குழந்தை குறித்துக் கேட்டேன். என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர் பகிர்ந்தார். ஒருநாள் முழுக்க எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு அந்த மருத்துவமனையிலேயே நின்று அந்தக் குழந்தை தேறிவிட்டதா, வீட்டுக்குக் கிளம்பிவிட்டதா என்றெல்லாம் பார்த்துவிட ஏக்கம்தான். மருத்துவரிடமிருந்து விடைபெறும்போது, நன்றி சொல்வது வழக்கம். அன்றைய நன்றி" என் தொழிலுக்கானதல்ல, அவருடைய தொழிலுக்கானதாக இருந்தது. மருத்துவமனையிலிருந்து வெளியேறி என் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து எதிரே பார்த்தேன், அந்த வயோதிகர் என்னைப் பார்த்துச் சிரித்தார். " பேத்திய பார்த்தீங்களா" என்றேன். ’சிரிச்சா சார்.. கழுத" என்றபடி தன் தோளில் இருந்த துண்டின் முனையால் தன் கண்களை ஒருமுறை துடைத்துக்கொண்டார். மருத்துவமனையின் மாடியை நிமிர்ந்து பார்த்தேன். மாடத்தில் மூன்று புறாக்கள் கொஞ்சிக்கொண்டிருந்தன. "வாழ்க்கை- காலத்தின் நீட்சி. அதில் சுகமும் துக்கமும் சதா பருவங்கள்”. மருத்துவமனைகளுக்குப் பல முகங்கள் இருக்கின்றன. எனக்கு முன் கலைந்து சென்றிருந்த ஆட்களைப் பிடித்துக் கேட்டுப் பாருங்கள், ஏதோ ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள், என்னாச்சுனு தெரியல என்பார்கள் அல்லது மருத்துவமனைக்குச் சந்தேகத்தின் சாயலைப் பூசியபடியே செல்வார்கள். தெரியாத விசயங்களில் எல்லாம் மனிதர்கள் தங்கள் அனுமானங்கள் என்று சந்தேகங்களையும் எதிர்மறை எண்ணங்களையும் நிரப்பிக்கொள்கிறார்கள். மருத்துவமனை என்றாலே எதிர்மறை உணர்வுகளான வலி, அழுகை, ஏமாற்றம் இவைதான் அதிகப்படியாக உணர்ச்சியின் வடிவில் இருக்கின்றன. உணர்வுகள் தன்னியல்பிலிருந்து வெளியேறத் தெரியாமல் வெறும் உணர்ச்சிகளால் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும். உணர்ச்சியில் ஓர் ஈர்ப்பிருக்கும். அது, ஒரு வகை கவர்ச்சி. உணர்வு அப்படிப்பட்டதல்ல. உள்ளார்ந்து வெளிவரும் சமிக்ஞை. சுருக்கமாக, உணர்ச்சி உடலளவில், உணர்வு மனதளவிலென பிரவாகம் எடுப்பவை. உணர்ச்சிவயப்படுதலில் எதிர்மறை உணர்ச்சிகள்தான் பிரதானம். உதாரணத்திற்கு, செய்திச் சேனலில் தவறான சிகிச்சை அளித்து நோயாளி பலி என்று ஒரு பேக் கிரவுண்ட் மியூசிக் போட்டு செய்தி காண்பித்தால், நிறைய மக்கள் பார்ப்பார்கள். எத்தனை மக்கள் பார்க்கிறார்கள் என்பதே சேனலுக்குப் பொருளாதாரம். செய்தி வேறு, பொருளாதாரம் வேறு. நம்மை உணர்ச்சிவயப்படவைப்பது எளிது. ஈர்ப்பிற்கு மயங்காத உணர்ச்சி ஏது? அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டு நன்றாகத் தேறி வீட்டுக்குச் சென்றது என்று செய்தி வந்தால், யாரும் சீண்டக்கூட மாட்டோம். அதில் அந்தக் கவர்ச்சி இல்லை என்பதே எதார்த்தம். ”மருத்துவமனையில் தவறான சிகிச்சை, அப்பாவி நோயாளி பலி, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை " என்று அந்த இசையோடு சேர்த்து செய்தியாக்கினால் நம் அனைவருக்கும் ஓர் எதிர்மறைக் கவர்ச்சி உண்டாகும், எந்த ஊர்ல, யாரு செத்தா, இது எல்லாம் பேசுபொருளாகும். கட்டக்கடைசியில் இந்த டாக்டர்ஸே இப்படித்தான் என்று ஒரு பஞ்ச் டயலாக்கை ஒருவர் அடிப்பார். இதுதான் கள நிலவரம். செய்தித்தாள்களில் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கொரு முறையோ அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சாதனை என்று ஒரு பெட்டிச் செய்திபோல் போடுவார்கள். அதில் மக்களுக்கு எந்தச் சுவாரஸ்யமும் கிடைப்பதில்லை. ஒரு துறை சார்ந்த செய்திபோல அது காணாமல் போய்விடும். இன்னும் கொஞ்சம் விவரித்துப்பார்த்தால், மருத்துவர்கள்தான் அந்தந்த மருத்துவர்களுக்குள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டாடிக்கொண்டிருப்பர். மற்றபடி, இந்தச் செய்தி மக்களைச் சென்றடைந்திருக்காது. அவ்வளவுதான் நேர்மறை உணர்ச்சிகளுக்கு இருக்கும் மதிப்பு. எனக்குத் தெரிந்த நண்பரும் மருத்துவருமான - குழந்தைகள் நல மருத்துவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்திருப்பதாகக் கூறியிருந்தார். அவரது குடும்பத்தினர் பிரபல துணிக்கடையில் துணி எடுப்பதற்காக உள்ளே நுழைந்திருந்தனர். நானும் மருத்துவரும் அருகிலிருந்த கடையில் டீ அருந்திவிட்டு கடைக்குள் கூட்டத்திற்குள் நுழைந்தோம். அங்கே ஒரு தாய், தன் இரண்டு வயதிருக்கும் குழந்தையைத் தன் தோளில் 'போட்டபடி' துணிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, தன் தாயின் தோளில் சாய்ந்தபடி பின்னே இருக்கும் ஆட்களை நோட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வோர் ஆட்களையும் பார்த்துக்கொண்டே இருந்த குழந்தை, தன் பார்வையை என் அருகில் இருந்த நண்பரின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அப்படியே அவர் மீது தன் பார்வையை நிறுத்தியது. கிட்டத்தட்ட இருவருக்குமிடையே ஏழெட்டு ஆட்கள் நின்றிருப்பார்கள் அல்லது அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார்கள். குழந்தை, ஆட்கள் மறைத்துக்கொண்டால், தலையைத் திருப்பி நிமிர்ந்துப் பார்த்தது. மருத்துவரும் அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருந்ததைப் பார்த்துவிட்டு, "என்ன டாக்டர், உங்களையே உத்துப்பார்த்துட்டே இருக்கு" என்று கேட்டேன். "அந்தக் குழந்தை என் பேஷண்ட்" என்றார் மருத்துவர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வு. இன்னும் ஓர் அழகான கவிதையைப்போல நினைவிலிருக்கிறது. இருவருமே வெளியூர்க்காரர்கள். மதுரைக்குத் துணி எடுக்க வந்தவர்கள். அவ்வளவு கூட்டத்திலும் அந்தக் குழந்தை தன் தாயின் தோளில் உள்ள சேலையை வாயில் வைத்து அப்பியபடி தன் மருத்துவரை அடையாளம் கண்டுகொண்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. மருத்துவரும் அந்தக் குழந்தையைத் தூரத்தில் நின்றபடிக்குத் தன் கண் இமைகளைத் தூக்கி, "என்ன பாக்குற" என்று கொஞ்சியபடி சமிக்ஞை செய்தார். "இவன்தான நமக்குத் தொட்டுத்தொட்டுப் பாக்குறவன், இவன் தான ஊசி போடுறவன் இப்படியெல்லாம் தோன்றியிருக்குமா?" அம்மா, இங்க பாரு, நம்மூர்க்காரன், என்று சொல்லக்கூடத் தெரியாத சிசுவின் கண்களில் அத்தனை மின்னல்கள். இந்த மொழியற்ற உரையாடல்களை, கண்களால் பிரவாகம் எடுத்த பிரியங்களின் அரங்கேற்றத்தைக் குழந்தையின் தாய் அறிந்திருக்கவில்லை. கடைசியாக மருத்துவர் நகரும்போது குழந்தைக்கு "டாட்டா" எனக் கைகளை ஆட்டினார், குழந்தை கண்களால் சிரித்தது. உணர்வுவயப்படுதலுக்கு உரையாடல்கள் தேவையில்லை. ஆர்ப்பரிக்காமல் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு நதியைப் போன்றதுதான் உணர்வுவயப்படுதலும். நீங்கள் உணர்ச்சியின் கட்டுக்குள் இருக்கிறீர்களா அல்லது உணர்ச்சியை உங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறீர்களா, குறிப்பாக மருத்துவமனைகளில்?! . காத்திருங்கள். "ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு" சுவாரஸ்யங்களை அவிழ்க்கும். இந்தத் தொடரின் முந்தை பகுதியைப் படிக்க: ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு - 8 | மருத்துவமனையில் மாசு கட்டுப்பாட்டு விதிகள்! (டைரிக்குறிப்பு தொடரும்..)

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை