இந்தியக் கோதுமையை மலிவாகவும் விரைவாகவும் கொண்டு செல்ல முடிவதால், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம் மீண்டும் இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் சாதனை அளவிலான கோதுமை உற்பத்தி மற்றும் உள்நாட்டு இருப்பு அதிகரித்துள்ளதால், இந்திய அரசு ஏற்றுமதி விதிகளில் தளர்வு அளித்துள்ளது. இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விவகாரம் தொடர்பாக, அண்டை நாடான வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் நீடிக்கிறது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து மீண்டும் கோதுமை கொள்முதல் செய்ய வங்கதேசம் முன்வந்துள்ளது. வங்கதேசத்தில், அரிசி விலை வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளதோடு, கோதுமை மாவின் (Flour)விலை கடந்த ஒரே மாதத்தில் 17% வரை உயர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு மலிவான விலையில் உணவு தானியங்களை வழங்கவேண்டிய கட்டாயம் அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 2022-ஆம் ஆண்டு இந்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தது. மிகக் குறைவான விளைச்சல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய தேவை காரணமாக உள்நாட்டு விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்தியா ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தது. இதனால், இந்தியாவின் மொத்த கோதுமைத் தேவை இறக்குமதியில் வங்கதேசத்தின் 70% பங்கு பாதிக்கப்பட்டது. எனினும் இந்தியாவின் இந்த ஏற்றுமதித் தடை அமலில் இருந்தபோது, அர்ஜென்டினா, கனடா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிடம் வங்க்தேசம் கோதுமையை இறக்குமதி செய்தது. இதில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாகக் கருங்கடல் வழியாக நடைபெறும் தானியப் போக்குவரத்து முடங்கியதால், உலகச் சந்தையில் கோதுமையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியக் கோதுமை ஒரு டன் 450 டாலருக்கு மேல் விற்கப்படும் நிலையில், இந்தியக் கோதுமை ஒரு டன் 305 முதல் 326 டாலர் என்ற மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும், கடல் வழிப் போக்குவரத்தைக் காட்டிலும் இந்தியாவிலிருந்து எல்லை தாண்டிய ரயில் பாதைகள் மூலம் குறைந்த நேரத்திலும், மிகக் குறைந்த செலவிலும் கோதுமை சரக்குகளை உடனடியாகக் கொண்டுசெல்ல முடியும் என்பதால், வங்கதேசம் இந்தியாவின் உதவியை நாடியிருக்கிறது. இதையடுத்து, அந்நாட்டு வணிகர்கள் இதுவரை 2,00,000 டன்களுக்கு அதிகமான இந்தியக் கோதுமையைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் சாதனை அளவிலான கோதுமை உற்பத்தி மற்றும் உள்நாட்டு இருப்பு அதிகரித்துள்ளதால், இந்திய அரசு ஏற்றுமதி விதிகளில் தளர்வு அளித்துள்ளது. இதன்மூலம் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வங்கதேசம் கோதுமையை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. 'தி டெய்லி ஸ்டார்' பத்திரிகையின்படி, வங்கதேசம் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன் கோதுமையை உற்பத்தி செய்கிறது, ஆனால் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய கூடுதலாக 70 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. வங்காளதேசத்தின் பிரதான தானியம் அரிசி என்றாலும், அந்நாட்டில் அதிகம் நுகரப்படும் இரண்டாவது தானியம் கோதுமை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைவிரித்த ரஷ்யா, உக்ரைன்.. 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் உதவியை நாடும் வங்கதேசம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk