தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தனக்கு மக்களின் வரவேற்பு அமோகமாக இருப்பதாகவும், தோல்வி பயத்தில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து திட்டமிட்டு நாடகமாடி எதிர்ப்பது போன்ற போலி பிம்பத்தை உருவாக்குவதாகவும் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா குற்றம்சாட்டியுள்ளார். பிரசாரத்தின் போது சில இடங்களில் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சத்யபாமா, தோல்வி பயத்தால் தி.மு.க - அ.தி.மு.க இணைந்து நடத்தும் இந்த நாடகத்தையும் வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் போது சில இடங்களில் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் கேட்காத கேள்விகளை 4 மாத த.வெ.க அரசிடம் கேள்வி கேட்க தூண்டிவிடுவதாகவும், தோல்வி பயத்தால் தி.மு.க - அ.தி.மு.க இணைந்து நடத்தும் இந்த நாடகத்தையும் வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைதத்தது. முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் இடம்பெற்றுள்ளது. சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மதுராந்தகத்தில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர். அதே போல, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். அதே போல, விறாலிமலை தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கரூர் வெற்றிபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த த.வெ.க தலைவர் விஜய், ஒருவர் 2 பதவிகளை வகிக்கக்கூடாது என்ற மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, விறாலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல, தி.மு.க, அ.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம், நா.த.க ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால், இடைத்தேர்தல் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் த.வெ.க வேட்பாளர்களுக்கு சில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்யபாமா, “தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை இங்கே வெற்றி அடைந்தாகிவிட்டது. தோல்வி பயத்தினால் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் சேர்ந்து ஆட்களைக் கொண்டு வந்து அந்தந்த குறிப்பிட்ட இடங்களில் நிற்க வைத்து கலாட்டா பண்ணுவது மாதிரி வீடியோ எடுத்து அவ்வப்போது பப்ளிசிட்டி செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தால் ஏற்படுவது. இதை வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறார்கள்.” என்று கூறியுள்ளார். தாராபுரம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்து வரும் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா ஊடகங்களிடம் கூறியதாவது: “எனக்கு தொடர்ந்து எதிர்ப்பு என்பதெல்லாம் இல்லை. நேற்று தாராபுரம் பேரூராட்சி பகுதியில் தான் நான் பிரசாரம் செய்தேன். அமோகமான வரவேற்பு. நீங்கள் அந்த வீடியோக்களை வேண்டுமானால் பாருங்கள். அமோகமான வரவேற்பு இருந்தது. மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை மக்கள் விரும்புகிறார்கள். தலைவர் விஜயை மக்கள் ரொம்ப விரும்புகிறார்கள், நேசிக்கிறார்கள். இப்போது இந்த குட்டடம் பகுதியில் ஒரு சில இடத்தில் மட்டும் வந்து அவர்கள் (தி.மு.க, அ.தி.மு.க) பிரச்னை பண்ணுவது மாதிரி பண்ணி அதை பப்ளிசிட்டி பண்ண வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை இங்கே வெற்றி அடைந்தாகிவிட்டது. தோல்வி பயத்தினால் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் சேர்ந்து ஆட்களைக் கொண்டு வந்து அந்தந்த குறிப்பிட்ட இடங்களில் நிற்க வைத்து கலாட்டா பண்ணுவது மாதிரி வீடியோ எடுத்து அவ்வப்போது பப்ளிசிட்டி செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தால் ஏற்படுவது. இதை வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களிடத்தில் அது இல்லை, இது இல்லை என்று கேள்வி கேளுங்கள் என நேற்று இரவே வந்து ஆட்கள் சொல்லி விட்டு போனார்கள் என்று தகவல் சொன்னார்கள். அதாவது, இந்த த.வெ.க ஆட்சி வந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால், தி.மு.க கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள். அப்படி என்றால், அவர்கள் இந்த கேள்வியை எல்லாம் சரியாக யாரிடம் கேட்க வேண்டும்? ஐந்து ஆண்டுகளாக தி.மு.க எதுவுமே செய்யவில்லை, போன தேர்தலிலும் அவர்கள் கேள்வி கேட்கவில்லை. இப்போது கேட்கிறார்கள் என்றால் அவர்களுடைய நோக்கம் மக்கள் வெறுக்கிறார்கள் என்ற ஒரு பிம்பத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான் இவர்களுடைய திட்டம். தவிர, மற்றபடி மக்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். நீங்கள் பாருங்கள் குட்டடம் பகுதியில் அதிகப்படியான ஓட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு தான் வரும். அதனால், இந்த பொய்யான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என்று சத்தியபாமா கூறினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
“தோல்வி பயத்தில் தி.மு.க, அ.தி.மு.க நாடகம்; மக்களிடம் அமோக வரவேற்பு”: எதிர்ப்புகளுக்கு தாராபுரம் த.வெ.க வேட்பாளர் சத்யபாமா பதில்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk