பட மூலாதாரம், Getty Images வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி மாத இறுதி நாட்களான 28, 29, 30 ஆகிய தேதிகளில் முழு வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்தியத் தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (UFBU) அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஞாயிற்றுக்கிழமை ( செப் 27 ) வங்கிகள் செயல்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக மாத இறுதியில் வழங்கப்படும் மாத ஊதியம் இம்முறை சற்று முன்கூட்டியே (வெள்ளிக்கிழமை செப் 25) வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரித்துவிட்டாலும், இன்றும் பணத்தையே பிரதானமாக கொண்டு இயங்கும் சிறு வியாபாரிகள் பலரும் இதனால் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம் என்று கூறுகின்றனர். எனினும், அவசரத் தேவைக்கு பணம் அல்லது நகைக்கடன் பெற முடியாமல் இக்கட்டை சந்திக்க நேரிடலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் மற்ற நாட்களைப் போல வழக்கமான பணிகள் நடைபெறுமா என்பது சந்தேகமே என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு செப் 27, 28, 29 ஆகிய நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் முகமாக ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட ஆர்பிஐ அனுமதித்திருப்பதால் செப் 27ம் தேதி (நாளை) வங்கிகள் செயல்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது மத்திய நிதியமைச்சகம் வங்கி ஊழியர்களை சீண்டி பார்ப்பதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்தாலும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படுவதை உறுதி செய்துள்ளது. "ஒருங்கிணைந்த வங்கிச் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ள மூன்று நாள் வேலைநிறுத்தம் வார இறுதி விடுமுறை நாட்களான செப்டம்பர் 26,27 ஆகிய தேதிகளுடன் வருவதால் மக்களுக்கான வங்கிச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய செப்டம்பர் 27, ஞாயிறு அன்று வங்கிகள் செயல்படும்." என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் அத்தியாவசிய வங்கிச் சேவைகள் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும், மண்டல கிராமப்புற வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை ( செப் 27) செயல்படும் என்று தெரிவித்துள்ளது. "அன்றைய தினம் அனைத்து வங்கி கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் கிளைகள் ஆகியவை முழுமையாக செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது." என்றும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம், Handout பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சகம் பரிசீலிக்காமல் , போராட்டத்தை சீர்குலைக்க ஞாயிற்றுக்கிழமை வேலைநாளாக அறிவித்துள்ளதாக இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் துணை தலைவர் கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், சாதாரண வேலை நாட்களில் நடக்கும் வங்கி சேவைகள் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் திறக்கப்படும்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்றார். வங்கிகளின் சாதாரண வேலை நாட்களில் காசோலை வாங்குவது, பணப்பரிவர்த்தனை செய்வது, கடன் வழங்குவது , பென்ஷன் வழங்குவது, காப்பீடு திட்டம், வங்கி லாக்கர் திறப்பது, நகை அடகு வைப்பது, கே ஒய் சி(KYC) அப்டேட் செய்வது போன்ற அனைத்து விதமான பணிகளும் நடைபெறும். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அதனை மக்கள் எதிர்பார்ப்பது கடினம் என்று அவர் கூறுகிறார். மேலும் பேசிய அவர், "ஆண்டின் இறுதி நாட்களில் வங்கிகளின் செயல்பாடுகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் பணியாற்றுவதுண்டு. ஆனால் பணப் பரிவர்த்தனைகள் செய்ய விதிகள் இடம் தராது. நாளை வங்கிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானாலும், வங்கிகளில் பணப் பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்கும் வகையில் விதிகள் தற்போது வரை திருத்தப்படவில்லை" என்றார். "வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை ( செப் 27) வங்கிகள் செயல்படும் என்று கூறிய அவர், அன்றைய தினம் வங்கிகளில் எந்தெந்த சேவைகள் கிடைக்கும் என்பதை அந்தந்த வங்கிகள் முடிவு செய்யும்"என்று சி பி கிருஷ்ணன் தெரிவித்தார். வங்கிகள் வேலைநிறுத்தம் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மொத்த வியாபாரி நாச்சியப்பன், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்ட பிறகு வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைந்துவிட்டதாக தெரிவித்தார். அதனால், வங்கிகள் தொடர் வேலை நிறுத்தத்தால் தங்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது என்று அவர் கூறினார். இதற்கு நேர்மாறாக சிறு வியாபாரிகளின் கூற்று உள்ளது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துவிட்டாலும், இன்றும் பணம் அதிகம் புழங்கும் சிறு வியாபாரத்தில் தாங்கள் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய ஆவடியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் நிஜாமுதீன், "இறைச்சிக்காக ஆடுகள் வாங்கும் போது பெரும்பாலோனோர் ரொக்க பணப்பரிவர்த்தனை செய்யவே விரும்புவதால் பெரிய தொகை எடுக்க அடிக்கடி வங்கிகளை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது" என்றார். "வேலை நிறுத்தம் அமலுக்கு வரும் முன்பே, கடந்த வெள்ளிக்கிழமையில் வங்கிக்கு சென்ற போது குறைந்த அளவு பணம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது" என்று அவர் கூறினார். இந்த போராட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஏடிஎம் மையங்களில் பணம் கிடைப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாக பட்டாபிராமில் ஏடிம் மையத்தில் பணம் எடுக்க வந்த சரவணன் என்பவர் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், 3 ஏடிஎம் மையங்களுக்கு சென்றும் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியவில்லை. பணம் இல்லை என்றும் ஏடிம் இயந்திரம் அவுட் ஆஃப் ஆர்டர் என்றும் வருகிறது, வங்கிகள் திற்ந்திருக்கும் போதே இந்த நிலை என்றால், வங்கி செயல்படாத நாட்களில் எப்படி இருக்கும் " என்று அச்சம் தெரிவித்தார். "வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அவசர தேவைக்காக வங்கிகளில் பணம் எடுக்க அல்லது நகைக்கடன் பெற விரும்புவோரின் நிலைமையை யாரிடம் சொல்வது "என்றார் வெள்ளிக்கிழமை (செப்.25) ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த கோமதி என்ற பெண்மணி. சிறு வியாபாரி நிஜாமுதீன் கூற்று தொடர்பாக விளக்கம் பெற அவர் குறிப்பிட்ட வங்கியின் மேலாளரை பிபிசி தமிழ் சார்பாக தொடர்புகொண்டோம். பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுகோளோடு பேசிய அவர், "வங்கிகளின் பணப்பரிவர்த்தனைக்கு ஒதுக்கப்படும் நிதிகளில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டியது வங்கியின் கடமை. அதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது" என்றார். "தொடர் விடுமுறை காரணமாக அதிகளவு பணம் எடுக்க வேண்டும் நோக்கத்தில் வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க வருவபவர்களுக்கு அப்போதைய இருப்பைப் பொருத்து முடிந்தவரை ரொக்கம் வழங்கப்படுகிறது" என்று அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்போது என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பிபிசி தமிழ் கேட்டபோது, காசோலை பரிவர்த்தனைகள் தேசிய அளவிலேயே அன்றைய தினம் செயல்படாது என்பதால் அந்த சேவை அன்றைய தினம் இருக்காது என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
ஞாயிறன்று வங்கிகள் இயங்கும்: வழக்கமான வேலை நாள் போல அனைத்து பணிகளும் நடக்குமா? அதிகாரிகள் தகவல்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk