செய்தியாளர் - கார்த்திகேயன் இந்தியாவில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துவது தென்மேற்குப் பருவமழைதான். ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும் இந்தப் பருவமழை, வடஇந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் தென்மேற்குப் பருவமழையால், வடஇந்தியாவில் கனமழை பெய்து, பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, 22 மாநிலங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது நிலப்பகுதிக்குள் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் வரை, மழையின் தாக்கம் தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தெற்கு ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில், தீவிர மழை பெய்து வருகிறது. மேலும், ஆந்திர பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில், மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை, பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த இரு மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை அமைப்பின் தாக்கம் ஒடிசா மற்றும் ஆந்திராவோடு நின்றுவிடவில்லை. இது உள்நாட்டை நோக்கி நகர்வதால், கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, சிக்கிம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், தெலங்கானா உள்ளிட்ட 22 மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு, உலக வானிலை நடைமுறைப்படி முன்கூட்டியே பெயர்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த நடைமுறையின்படி, ’ஆர்நாப்’ என்று பெயர் வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக மாறவில்லை என்று வானிலை மையம் கூறிவிட்டாலும், இந்த ’ஆர்நாப்’ என்ற பெயர், வடஇந்தியாவில் மக்கள் மத்தியில் பரவிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடலில் வானிலை மாற்றம்.. 22 மாநிலங்களில் கனமழை?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk