கரூரில் இன்றைய முதல்வர் விஜய், கடந்த ஆண்டு இதேநாளில் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்த ஓராண்டு கடந்துள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதல்வராக விஜய் பொறுப்பேற்றது உட்பட பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரம் எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்கிறது. கரூர் துயர சம்பவத்தின் முதலாம் ஆண்டை முன்னிட்டு வேலுசாமிபுரத்தில் பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. கடந்த ஓராண்டாக நடந்த நிகழ்வுகளும், அங்குள்ள மக்களின் தற்போதைய உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் என்ன? பட மூலாதாரம், AFP via Getty Images கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் தேதி, கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த நாளில் திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை திரும்பினார் விஜய். அப்போது அது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஸ்டாலின், அதே இரவில் கரூருக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களைச் சந்தித்தார். சென்னை திரும்பிய விஜய், இரு நாட்களுக்குப் பின்பு, ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அன்றைய ஆளும்கட்சியின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இதற்கு திமுக கடும் எதிர்வினையாற்றியது. உயிரிழப்புகள் தொடர்பாக தமிழகக் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் விஜய் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் மற்றும் பல தவெக நிர்வாகிகள் எனப் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவமே ஒரு சதி என்று தவெக-வினர் குற்றம்சாட்டினர். விஜய் தாமதமாக வந்ததே இத்தனை உயிரிழப்புகளுக்கும் காரணம் என்று சட்டப்பேரவையில் அப்போதிருந்த முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் மறைமுக ஒப்பந்தம் உள்ளதாகச் சொல்லலாமா, அதற்கு அழுத்தம் கொடுத்தது யார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அப்போது மாநில அரசை விமர்சித்திருந்தார். ஆனால் தற்போது தவெக ஆட்சிக்கு, விடுதலைச்சிறுத்தைகள் ஆதரவு அளித்திருப்பதுடன், அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. முதலில் தமிழக காவல்துறையால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பின் கீழ், சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பே விசாரணையில் ஆஜராக விஜய் டெல்லி சென்று வந்தார். இருப்பினும் கூட்டநெரிசல் சம்பவத்துக்குப் பின்பு கரூர் வராத விஜய், உயிரிழந்த 41 பேருடைய குடும்பத்தினரையும் மாமல்லபுரத்துக்கு அழைத்து, நேரில் சந்தித்தார். கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போதும், அவர் கரூருக்கு பரப்புரை செய்ய வரவில்லை. End of அதிகம் படிக்கப்பட்டது சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தவெகவுக்கு சாதகமாக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார். கூட்டநெரிசல் நடந்த வேலுசாமிபுரத்தை உள்ளடக்கிய கரூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. அங்கு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், தன்னுடைய சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தார். தேர்தல் வழக்கு காரணமாக, கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பட மூலாதாரம், TVK பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு, அதாவது 41 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்து 9 மாதங்களுக்குப் பின்பு, கடந்த ஜூலை 10 அன்று, கரூருக்கு சென்றார் விஜய். தனி மைதானத்தில் மக்கள் சந்திப்பு என்ற பெயரில், அனுமதி வழங்கப்பட்ட 5 ஆயிரம் மக்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்வில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய முதல்வர் விஜய், ''என் வாழ்வில் எல்லாவற்றையும்விட அதிக வலியையும் காயத்தையும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான். நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல்துறை கூட்டம் அதிகமாக இருப்பதாக எங்களை எச்சரிக்காதது ஏன்? கரூரில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாகவுள்ளது, நீங்கள் வரவேண்டாம் எனச் சொல்லியிருக்கலாம் அல்லவா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "ஏன் என்னை காவல்துறையே நெடுஞ்சாலை பகுதிக்கு வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்றிருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் அப்போது நம்பிவிட்டேன். இப்படி நடந்தால் அப்படிச் செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படிச் செய்யுங்கள் எனச்சொல்லி காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது யார்?. நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்களைக் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது, அவர்கள் எழவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடியைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்றும் முதலமைச்சர் விஜய் பேசினார். அதன்பின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். முதல்வரின் பேச்சை கண்டித்த திமுக எம்.பி. கனிமொழி, ''அப்போது மக்களை வந்து பார்த்தவர்கள் யார், ஓடியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.'' என்றார். ஒரு மாநிலத்தின் முதல்வரே இப்படி காவல்துறையைக் குற்றம்சாட்டியது தவறு என்று கூறிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், "அன்று விஜய் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் அந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். அன்று மயங்கி விழுந்த 100 பேரில் 60 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதற்குக் காரணம் அன்றைய திமுக அரசுதான்." என்று கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த ஆணைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்கியது. அதனால் இப்போதும் அந்தப் பணிகளில் அவர்கள் தொடர்ந்து வருகின்றனர். ஓராண்டுக்குப் பின், சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த சம்பவத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் பகுதியில் உயிரிழப்புக்குக் காரணமான கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில், கட்டமைப்பு ரீதியாக எந்த விதமான மாற்றங்களும் இல்லை. சம்பவ இடத்தின் இரு புறமும் இருந்த கடைகளின் முன்பாக இருந்த சாதாரண மேற்கூரைகள் அகற்றப்பட்டு, சிறிய அளவில் பலமான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி, அந்த மேற்கூரைகள் மாற்றப்பட்டதாக அங்குள்ள கடைக்காரர்கள் பலரும் பிபிசியிடம் கூறினர். சாலையோரம் சில மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் சாலை விரிவாக்கம் எதுவும் நடைபெறவில்லை. அப்பகுதி மக்கள் பலரிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, கடந்த ஆண்டில் சம்பவத்தின் போது தாங்கள் கண்டதை விவரித்தனர். மற்றபடி கடந்த ஓராண்டில் அப்பகுதியில் எந்த மாற்றங்களும் நடக்கவில்லை என்பதை அறிய முடிந்தது. பிபிசி தமிழிடம் பேசிய அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல், ''எல்லோரும் அந்த சம்பவத்தை மறந்துவிட்டனர். இங்கே பெரிதாக எந்த மாற்றங்களும் நிகழவில்லை. சாலையை விரிவுபடுத்துவதாக மரங்களை வெட்டியதுடன் கடைகளின் முன்பாக இருந்த கூரைகளை அகற்றினர். ஆனால் எந்த வேலையும் நடக்கவில்லை.'' என்றார். கரூர் வேலுசாமிபுரம் என்பது இப்போது வெளியூரில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டதாக பிபிசியிடம் கூறிய கடைக்காரர் செல்வராணி, ''எங்கள் பகுதியில் இப்படியொரு துயரம் நடந்ததில் எங்களுக்குப் பெரிய வருத்தம்தான்.'' என்றார். முதல்வர் விஜய் தங்கள் பகுதிக்கு மீண்டும் வருவார் என்று தாங்கள் நம்பிக் கொண்டிருப்பதாக பலரும் கூறினர். அந்தப் பகுதியிலுள்ள மக்கள் பலரும் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால், அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், கோவை, திருப்பூரில் இருப்பது போன்று கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் தொழில் தொடர்பான ஒரு தொழிற்பேட்டையை அப்பகுதியில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தார் வேலுசாமிபுரத்திலுள்ள மெடிக்கல் ஷாப் ஊழியர் ஆனந்தன். வேலுசாமிபுரம் வடிவேல்நகரைச் சேர்ந்த ஜெயமணி பால்ராஜ், ''எங்களுக்கு எம்ஜிஆர் காலத்தில் நிலம் கொடுத்து வீடு கட்டித்தந்தார்கள். நாங்கள் எல்லோரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். எங்களால் அந்த வீட்டை இடித்துக் கட்ட முடியாது. எந்த ஆட்சியிலும் இதைச் சீரமைத்தும் தரவில்லை. அதிலேயே குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு இதே பகுதியில் புதிய குடியிருப்பு கட்டிக் கொடுத்தால் பேருதவியாக இருக்கும். முதல்வர் விஜய்யிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்.'' என்றார். பொதுவான தேவை குறித்துப் பேசியவர்களை விட, தனிப்பட்ட முறையில் அரசு தங்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளையே பலரும் கோரிக்கைகளாகத் தெரிவித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் மாரப்பன், தள்ளுவண்டியில் பழம் விற்கும் சத்தியாவதி ஆகியோர், தங்களுக்கு பல ஆண்டுகளாகக் கிடைத்து வந்த முதியோர் உதவித்தொகை, இந்த மாதத்தில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். தங்களைப் போலவே அப்பகுதியிலுள்ள பல முதியவர்களுக்கும் இந்தத் தொகை கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறினர். பிபிசியிடம் பேசிய பலரும், விஜய் நிச்சயமாக தங்கள் பகுதிக்கு ஏதாவது நல்லது செய்வார் என்று நம்புவதாகக் கூறினார். சம்பவம் நடந்த பகுதியிலேயே குடியிருக்கும் ஓய்வு பெற்ற வருமானவரித் துறை ஊழியர் பழனிசாமி, ''இந்த பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் விஜய் ஏதாவது செய்வார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர் இங்கே வந்தாலும் வராவிட்டாலும் இப்பகுதி மக்களுக்கு நல்லது செய்வார் என்றுதான் நானும் நம்புகிறேன்.'' என்றார். கூட்ட நெரிசலின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அந்தப் பகுதியில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை. மாறாக கரூர் பேருந்து நிலையம் அருகில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அதிமுக சார்பில் வென்ற கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு மாதம் கழித்து உயிரிழந்த சிறுமி மதுமிதாவின் உயிரிழப்புக்கு எந்த இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்று அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் பகிர்ந்துள்ளனர். கரூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட மதுமிதா சிகிச்சை பலனின்றி 2025 நவம்பர் 2 ஆம் தேதி உயிரிழந்தார். பிபிசியிடம் பேசிய மதுமிதாவின் தாயார் லல்லி, ''கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்றதற்கான ஆதாரம், அதன்பின்பு சென்னையில் விஜயை சந்தித்த போது முறையிட்டது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் தவெக நிர்வாகிகள் மற்றும் போலீசார் என பலரும் வாங்கிச் சென்றனர். ஆனால் இப்போது வரை எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. இப்போது எனது கணவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் அவருடன் இருக்க வேண்டியுள்ளது. யாரையும் சந்திக்கமுடியவில்லை.'' என்றார். இதுபற்றி இத்தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, ''கடந்த ஆண்டில் நடந்ததால் எனக்கு இதுபற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. இப்போது வரை இந்த விஷயம் பற்றி என்னுடைய கவனத்துக்கு வரவில்லை. கண்டிப்பாக விசாரித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறேன்.'' என்றார். சிறுமி மதுமிதா உயிரிழப்பு குறித்து பிபிசி தமிழில் கடந்த மே மாதம் விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதன் ஓராண்டு நினைவு தினம் - அந்த இடம் தற்போது எப்படி இருக்கிறது?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk