Bulk FD interest rate 2026 ஒரே அளவிலான பெருந்தொகை டெபாசிட்டுகளுக்கு, வங்கி கிளைகள் மாறுபடுகின்றன என்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை. பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களில் புதிய திருப்பம் கொண்டுவரும் ஆர்பிஐ இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளில் செய்யப்படும் பெருந்தொகை ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கான (Bulk Fixed Deposits) வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது மற்றும் வெளிப்படையாக அறிவிப்பது தொடர்பான விதிகளில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய நடைமுறைகள் மூலம் வங்கிச் சேவைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். இந்த மாற்றங்கள் வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள், பேமெண்ட் வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். பல்க் டெபாசிட் என்றால் என்ன? பொதுவாக சாதாரண சேமிப்பாளர்களுக்கும், பெரிய அளவில் முதலீடு செய்பவர்களுக்கும் வட்டி விகிதங்கள் மாறுபடும். அந்த வகையில், ரூ. 3 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட ஒரே வைப்புத்தொகையானது 'பல்க் டெபாசிட்' (Bulk Deposit) என்று அழைக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்: தினசரி காலை 10 மணிக்கு வட்டி விகித வெளியீடு: வங்கிகள் தங்கள் மொத்த டெபாசிட் வட்டி விகிதங்களை ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணிக்குள் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும். வங்கிகளுக்கு வசதியாக 10 நிமிடங்கள் அவகாசம் அதாவது காலை 10:10 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வட்டி வழங்கும் போது இணையதளத்தில் காட்டப்படும் வட்டி விகிதங்களின்படியே வழங்க வேண்டும். அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான வட்டி விகிதம்: வாடிக்கையாளர்கள் எந்தக் கிளையில் டெபாசிட் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து வட்டி விகிதம் மாறக்கூடாது. ஒரே நாளில் பெறப்படும் ஒத்த தொகை டெபாசிட்டுகளுக்கு, நாட்டின் எந்தக் கிளையாக இருந்தாலும் ஒரே மாதிரியான வட்டி விகிதமே வழங்கப்பட வேண்டும். கிளைகள் மாறுவதால் வட்டி விகிதத்தில் வேறுபாடு இருக்கக்கூடாது. எல்.சி.ஆர். விதிகளின் கீழ் மாறுபட்ட வட்டிக்கு அனுமதி: லிக்யூடிட்டி கவரேஜ் ரேஷியோ (LCR) கட்டமைப்பின் கீழ் வரக்கூடிய ரன்-ஆஃப் விகிதங்களின் அடிப்படையில், வங்கிகள் பல்க் டெபாசிட்டுகளுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றன. எளிமையாகச் சொன்னால், வைப்புத்தொகை அல்லது மொத்த நிதியானது வங்கியை விட்டு வெளியேறும் சாத்தியக்கூறுகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப வட்டி விகிதங்களை வங்கிகள் முடிவு செய்யலாம். என்.ஆர்.ஐ (NRI) ரூபாய் டெபாசிட்டுகளுக்கும் இதே விதி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் (Non-Residents) ரூபாய் டெபாசிட்டுகளுக்கும் இதே போன்ற தளர்வுகள் பொருந்தும். LCR கட்டமைப்பின் விதிகளுக்கு ஏற்ப என்.ஆர்.ஐ பெருந்தொகை டெபாசிட்டுகளுக்கும் வங்கிகள் மாறுபட்ட வட்டி விகிதங்களை நிர்ணயிக்கலாம். இதன் மூலம் உள்நாட்டு டெபாசிட்டுகள் மட்டுமின்றி, சில குறிப்பிட்ட என்.ஆர்.ஐ ரூபாய் டெபாசிட்டுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெபாசிட்தாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? இந்த புதிய மாற்றங்களால் பொதுவான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தானாகவே உயர்ந்துவிடும் என்று அர்த்தமல்ல. மாறாக, வங்கிகள் தங்களுடைய வட்டி விகிதங்களை மறைக்காமல் முன்கூட்டியே தெளிவாக அறிவிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பெரிய முதலீட்டாளர்கள் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் வங்கி இணையதளத்தில் வட்டி விகிதங்களைச் சரிபார்த்து எளிதாக முதலீடு செய்ய முடியும். முக்கிய குறிப்பு: அக்டோபர் 1 முதல் வட்டி விவரங்கள் அனைத்தும் வங்கி இணையதளங்களில் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் என்பதால், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் முன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள வட்டி அட்டவணையைச் சரிபார்ப்பது மிகவும் சிறந்தது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அக்டோபர் 1 முதல் எஃப்.டி. வட்டி விதிகளில் மாற்றம்: டெபாசிட்தாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk