450 டன் வெங்காயத்தை காணவில்லை என்று இபிஎஸ் குற்றச்சாட்டு பற்றி... தமிழகத்துக்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு சந்தைக் குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (என்சிசிஎஃப்) ஆகியவற்றிடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு ஒரு கிலோ ரூ. 35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், என்ஏஎஃப்இடி நிறுவனத்திடமிருந்து நான்காம் கட்டமாக கொள்முதல் செய்யப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காயம் தரமற்றதாக இருந்ததால், அந்த கொள்முதல் ஆணையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டுக்கு என்ஏஎஃப்இடி நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட வெங்காயம், கொருக்குப்பேட்டை முனையத்தில் அழுகிய நிலையில் லாரியில் இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருப்பதாவது: ”வெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு. இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 250 டன் வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இந்த வெங்காயம் லாரிகளில் இருந்து கீழே இறக்கப்படாததால் அத்தனையும் அழுகி வீனாகி வருவதாக செய்திகள் தெரிய வருகிறது. 250 டன் அழுகிய வெங்காயத்துடன் கடந்த 3 நாட்களாக 10 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, என்ஏஎஃப்இடி மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று என்ஏஎஃப்இடி தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அதாவது, தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை! குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்த திக்குத் தெரியாத தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான்! இது என்ன சினிமாவா, டேக் சரியில்லை என்றால் கட் சொல்லிவிட்டு அடுத்த டேக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி! மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது! அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் தீவிரம் புரியாமல், மந்தமாக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம். விலைவாசி கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
450 டன் வெங்காயத்தை காணவில்லை! தமிழக அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗