காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை தினமும் 6 காட்சிகளைத் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து... புதிய திரைப்படங்களை தினமும் 6 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், சனி - ஞாயிறு, உள்ளூர் பண்டிகை, பொதுவிடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் பிலிம் ஆக்டிவ் ப்ரொடியுசர்ஸ் அசோசியேஷன்ஸ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு திரைப்படங்களை நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4-காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள், வெளியிடப்படும் நாளிலிருந்து, ஏழுநாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாள்கள்,பொதுவிடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗