சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை. திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது, நாங்கள் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும் என திமுக செய்தி தொடர்புத் துறைத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘‘அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். திமுக, அதிமுக கட்சிகள் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வேன்’’ என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘‘இடைத்தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவு எடுக்கப்படும்’’ என்று கூறியிருந்தார். இதனால் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்கப் போவதாக வலைதளங்களில் கருத்துகள் வெளியாகின. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்களில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியைத் தவறவிட்டது. எனவே, அடுத்ததாக நடைபெற உள்ள 5 தொகுதி இடைத் தேர்தல்களிலும் திமுகதான் போட்டியிடும். இதில் எங்களுக்கு வெற்றி கிடைப்பது உறுதி. முதல்வர் விஜய்க்கு நிர்வாகத் திறமை இல்லை என்பது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அவரால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டம் - ஒழுங்கும் மோசமடைந்துள்ளது. இப்பிரச்சினைகள் 5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் எதிரொலிக்கும். சீமானைப் பொருத்தவரை திராவிட இயக்கத்துக்கு எதிராக கட்சி தொடங்கி, திமுகவை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். எனவே, அம்பாசமுத்திரம் தொகுதியில் அவருக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. எங்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது, நாங்கள் ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானுக்கு ஆதரவு கிடையாது: டிகேஎஸ் இளங்கோவன் திட்டவட்டம்