புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு 248 கிலோமீட்டரில் இருந்து 1,200 கிலோ மீட்டராக மேம்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அணுகுமுறை என்பது உதவிகளை வழங்குவது மட்டுமல்ல என்றும், மாறாக மக்களை வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் மெட்ரோ ரயில் 3-வது வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். காணொளி வாயிலாக தொடங்கிவைத்த பின்னர் உரையாற்றிய பிரதமர், “2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளித்தபோது, நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை மற்றும் பயணத்தை எளிதாக்கும் உறுதியுடன் நாங்கள் செயல்படத் தொடங்கினோம். 2014-ல் இந்தியாவில் 248 கி.மீ. மெட்ரோ கட்டமைப்பு மட்டுமே இருந்தது. அது தற்போது சுமார் 1,200 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. 2014-ல் ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவை இருந்த நிலையில், தற்போது 26 நகரங்களில் மெட்ரோ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் மெட்ரோவில் பயணம் செய்கிறார்கள். மெட்ரோ வலைப்பின்னல் கட்டமைப்பில் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மெட்ரோ சேவை மூலம் கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புனே மெட்ரோவின் விரிவாக்கம் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, பயண நேரத்தைச் சேமித்து, நகரத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும். மேம்பட்ட நகர்ப்புற உள்கட்டமைப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். புனே மெட்ரோ விரிவாக்கம் நகரின் பழைய மற்றும் புதிய பகுதிகளுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்தும். மெட்ரோ இணைப்பை வலுப்படுத்துவது புனேவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். மகாராஷ்டிராவில் மெட்ரோ வலைப்பின்னல் 2014-ல் வெறும் 11 கி.மீ. ஆக மட்டுமே இருந்த நிலையில், அது தற்போது சுமார் 200 கி.மீ. ஆக விரிவடைந்துள்ளது. மேலும், 680 கி.மீ.-க்கும் அதிகமான நீளமுள்ள மெட்ரோ பாதைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத்தின் அணுகுமுறை என்பது வெறும் உதவிகளை வழங்குவது மட்டுமல்ல, மாறாக மக்களை வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது” என தெரிவித்தார். இன்று தொடங்கிவைக்கப்பட்ட மெட்ரோ சேவை, இளஞ்சிவப்பு நிற வழித்தடம் என அழைக்கப்படுகிறது. இது பெண் பணியாளர்களால் இயக்கப்படும். இதன் மின்சாரத் தேவையில் சுமார் 30 சதவீதம் சூரிய ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யப்படும். இன்றைய நிகழ்ச்சியின்போது, சுமார் ரூ. 13,500 கோடி மதிப்பிலான புனே மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
“அன்று 248 கி.மீ, இன்று 1,200 கி.மீ... 12 ஆண்டுகளில் மெட்ரோ கட்டமைப்பு மேம்பாடு” - பிரதமர் மோடி பெருமிதம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗