பட மூலாதாரம், Getty Images குளிர்காலத்தில் குறிப்பாக காலை நேரங்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள், பிற நேரங்களை விட அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதய நோய் ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளவர்கள், இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியாமலே இருப்பவர்களுக்கு குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை அதிகம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். மாரடைப்புக்கும் குளிருக்கும் இருக்கும் தொடர்பை எளிமையாக விளக்க வேண்டுமென்றால் - குளிர்காலத்தில் ரத்த நாளங்கள் சுருங்கும், அப்போது இதயத்துக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அது சிலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தலாம். 2022-ல் வெளியான ஒரு பகுப்பாய்வு- 26 ஆய்வுகளை மதிப்பாய்வு செய்து, வெப்பமான காலங்களை விட குளிரான காலங்களில் மாரடைப்பு அபாயம் அதிகமாக இருந்ததாக கண்டறிந்தது. காற்றின் வெப்பநிலை குறைவது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் ஆய்வு தெரிவித்தது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்-ல் பகுதியின் மரணங்களை ஆய்வு செய்த போது, குளிர்காலத்தில் மாரடைப்பால் ஏற்படும் இறப்புகள் 17% அதிகமாக இருந்தன என்று கண்டறியப்பட்டது. எட்டு ஆண்டு தரவுகளில் சுமார் 20,000 கூடுதல் குளிர்கால மரணங்கள் மாரடைப்பு தொடர்பாக பதிவாகியிருந்தன. 2020-ல் வெளியான ஆய்வு, குளிர்காலத்தில் இதயத் தமனியில் உள்ள கொழுப்புப் படிவு வெடித்தல் அதிகமாக இருப்பது, மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தது. பட மூலாதாரம், Getty Images ரத்த நாள சுருக்கம் என்பது ரத்தக் குழாய்களின் சுவர்களில் உள்ள தசைகள் சுருங்குவதால், அவற்றின் உட்பாதை குறுகும் நிலையாகும். இதனால் ரத்த ஓட்டத்திற்கு அதிக அழுத்தம் தேவைப்படுவதால் ரத்த அழுத்தம் உயரக்கூடும். குளிர், மனஅழுத்தம், காயம், தொற்று, புகைப்பிடித்தல் மற்றும் சில ஹார்மோன்கள் போன்றவை ரத்த நாள சுருக்கத்தை ஏற்படுத்தும். உடல் வெப்பத்தைப் பாதுகாப்பது அல்லது காயத்தின் போது ரத்த இழப்பைக் குறைப்பது போன்ற சூழல்களில் இது பயனுள்ளதாக இருக்கும். End of அதிகம் படிக்கப்பட்டது ஆனால் அளவுக்கு மீறிய ரத்த நாள சுருக்கம் ஏற்பட்டால், இதயம் மற்றும் உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். "குளிர் காலத்தில் உடலின் வெப்பத்தை தக்க வைக்க உடலில் ஏற்படும் நிகழ்வு இது. எனினும் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தில் உள்ளவர்களுக்கு ரத்த நாள சுருக்கம் மாரடைப்புக்கு வழிவகுக்கலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இது ஏற்படும் அபாயம் உள்ளது" என்று கூறுகிறார் இதயவியல் மருத்துவர் எம்.எஸ்.ரவி. புகைப்பிடிப்பவர்களுக்கு குளிர் காலத்தில் மாரடைப்புக்கான ஆபத்து அதிகம் என்று கூறுகிறார் மருத்துவர் எம்.எஸ்.ரவி. "புகைப்பிடிப்பதால் சிகரெட்டில் உள்ள நிகோடின் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்து, ரத்த அழுத்தத்தையும் இதயத்தின் வேலைப்பளுவையும் அதிகரிக்கின்றன. இந்நிலையில், குளிர் காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கும் போது, மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன" என்கிறார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அதிகாலையில் அட்ரினலின் உள்ளிட்ட ஹார்மோன்கள் அதிகரிப்பதாலும், குளிரால் ரத்தக் குழாய்கள் சுருங்குவதாலும், ரத்த அழுத்தமும் இதயத்தின் வேலைப்பளுவும் அதிகரிக்கும். அதனுடன் ரத்தம் கட்டியாகும் தன்மையும் அதிகரிப்பதால், குளிர்கால அதிகாலைகளில் மாரடைப்பு அபாயம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அட்ரினலின் என்பது ஆபத்து, பயம் அல்லது மனஅழுத்தத்தை உடல் உணரும்போது சுரக்கும் ஒரு ஹார்மோன். இது ரத்தக் குழாய்களின் சுவர்களில் உள்ள தசைகளைச் சுருங்கச் செய்து, ரத்தக் குழாய்களை குறுகச் செய்கிறது. "அதிகாலையில் அட்ரினலின் சுரப்பது அதிகமாக இருக்கும். இரவு நேரங்களில் தூங்கும் போது குறையும் அட்ரினலின் விழிக்கும் போது உடனடியாக அதிகரிக்கும். அது ரத்த நாளங்களை சுருங்க செய்யும். ஏற்கெனவே அடைப்பு இருப்பவர்களுக்கு இது ஆபத்தாகலாம்." என்கிறார் இதயவியல் மருத்துவர் மதன்மோகன். தீவிர அறிகுறிகள் இல்லாமல் ஒருவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்படக் கூடும் என்று விளக்குகிறார் மருத்துவர் மதன்மோகன். "பாதிப்பின் தீவிரம் குறைவாக இருக்கும் போது, மாடிப்படி ஏறுகையில் மூச்சு வாங்குவது போன்ற அறிகுறிகளே தோன்றும், நெஞ்சுவலி ஏற்படாது. சிலருக்கு தாடை வலி ஏற்படும், கை வலி ஏற்படும். பலரும் இந்த அறிகுறிகளை எளிதாக கடந்து செல்லக் கூடும்." என்கிறார். "தமிழ்நாட்டில் பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், அந்தக் காலக் கட்டத்தில், பிற மாதங்களை விட அதிக மாரடைப்பு நோயாளிகளை பார்க்கிறோம். ஏற்கெனவே அடைப்பு கண்டறியப்பட்டு, மருந்துகள் உட்கொண்டு வரும் நோயாளிகளை, தவறாமல் மருந்துகள் உட்கொள்ளுமாறு இந்தக் காலத்தில் அறிவுறுத்துவோம்" என்று மருத்துவர் மதன்மோகன் கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images குளிர் காலம் மட்டுமல்லாமல் குளிர் பிரதேசங்களுக்கு செல்லும் போதும் இதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் எம்.எஸ்.ரவி. "மலைப்பகுதிகளுக்கு செல்பவர்கள் குறிப்பாக ஏற்கெனவே இதய நோய் கொண்டவர்கள், கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் அறிவுறுத்தலை பெற்று செல்வது நல்லது. ஏனென்றால் குளிர் அதிகரிக்க, அதிகரிக்க, ரத்த நாளங்கள் சுருங்குவதும் அதிகரிக்கும்" என்கிறார். மாரடைப்பு என்பது இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால், இதயத் தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலை. இதனால் இதயத் தசைகளின் சில பகுதிகள் சேதமடையவோ அல்லது உயிரிழக்கவோ வாய்ப்பு உள்ளது. நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை, கைகள் அல்லது தாடைக்கு பரவும் வலி போன்றவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
குளிர்காலம் காலை வேளையில் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் ஏன்?