உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த நடிகை மேட்டா ரூங்ராத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை... எம்ஜிஆர் உடன் நடிகை மேட்டா ரூங்ராத் - எக்ஸ் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடத்த தாய்லாந்தைச் சேர்ந்த நாயகி மேட்டா ரூங்ராத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி இன்றளவும் மக்களிடையே பிரபலமான திரைப்படம் “உலகம் சுற்றும் வாலிபன்”. இப்படத்தில், எம்ஜிஆர் உடன் இணைந்து மஞ்சுளா, லதா, சந்திரகலா மற்றும் மேட்டா ரூங்ராத் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற “பச்சைக்கிளி முத்துச்சரம்” பாடலில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அக்காலத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நடிகை மேட்டா ரூங்ராத். தாய்லாந்தின் மின்புரி நகரத்தில் வசித்து வந்த 83 வயதான பழம்பெரும் நடிகை மேட்டா ரூங்ராத், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 3) தனது வீட்டின் படுக்கையறையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த தாய்லாந்து அதிகாரிகள் மேட்டாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை மேட்டா ரூங்ராத் அல்செய்மர்ஸ் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொண்ட அறைக்குள் வெளி நபர் யாரும் வந்து சென்றதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தாய்லாந்து நாட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்த மேட்டா ரூங்ராத் தற்கொலை செய்துகொண்டது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்ஜிஆர் பட நாயகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗