இலங்கையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னிச்சையான கைதுகள், நீண்டகாலத் தடுப்புக் காவல் மற்றும் சித்திரவதைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்ட 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய அரசாங்கத்தால் 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலம்' நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கி, சர்வதேச தரத்திற்கு அமைவாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே கொண்டு வரப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. அதேவேளையில், இப்புதிய சட்டமூலமும் தொடர்பான 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்ட மூலமும்' பழைய சட்டத்தை விடவும் ஆபத்தான அடக்குமுறை அதிகாரங்களைக் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. அதேபோல நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிவில் அமைப்பினர் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். பட மூலாதாரம், Saliya Periz இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சீர்திருத்துவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்து வருகிறது. புதிய சட்டமூலத்தில் பொலிஸ் அதிகாரிகளிடம் (உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தினர்) பெறப்படும் 'ஒப்புதல் வாக்குமூலங்களை' நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஏனெனில், பழைய சட்டத்தின் கீழ் இந்த ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் அதிகாரமே பொலிஸார் மத்தியில் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோக கலாசாரம் வளர முதன்மைக் காரணமாக அமைந்தது. ஆனால், அரசாங்கத்தின் இந்த நகர்வை "சர்வதேச சமூகத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஏமாற்றும் தந்திரம்" என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் பகிரங்கமாகச் சாடியுள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பிபிசி தமிழிடம் பேசிய அவர், "புதிய சட்டமூலத்தில் ஒப்புதல் வாக்குமூலங்கள் நீக்கப்படுவதாகக் காட்டிக்கொள்ளும் அரசாங்கம், அதேநேரம் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம்' என்ற புதிய சட்டமூலத்தையும் வெளியிட்டுள்ளது. இதில், அதே அதிகாரிகளிடம் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சாட்சியமாக ஏற்கப்படும் என்ற பழைய சட்டத்தின் கொடூரமான அம்சம் அச்சு அசலாக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது," என சாலிய பீரிஸ் குற்றம் சாட்டினார். மேலும், ஒருவரின் தலைமுடி அமைப்பு, பச்சை குத்தல்கள் அல்லது ஆடைகளின் அடிப்படையில் மட்டுமே, அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் என முடிவு செய்து கைது செய்யப் புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம் அனுமதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். "சந்தேக நபருக்கு எதிராக எவ்வித சான்றும் இல்லாதபோதும், பொலிஸார் ஆஜர்படுத்தினர் என்பதற்காக மட்டுமே அவரைத் தடுப்புக் காவலில் வைக்க நீதவான்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சந்தேக நபர்கள் உயர் நீதிமன்றத்திடம் இருந்து மட்டுமே பிணை பெற முடியும் என்ற நிலையை இது உருவாக்குகிறது," என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் தன்னிச்சையான கைது கலாசாரத்தை பொலிஸார் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டத்தின்' மூலம் தொடர்வர் என்றும் சாலிய பீரிஸ் குற்றம் சாட்டுகிறார். இப்புதிய சட்டமூலத்திற்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்தச் சட்டத்தின் மூலமாக நிறைவேற்று அதிகாரத்திற்கு அளவு கடந்த அதிகாரம் கிடைக்கின்றது. கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் சோதனையிடுதல் தொடர்பில் நிறைவேற்று அதிகாரத்திற்கு அளவு கடந்த அதிகாரம் கிடைப்பதுடன், தனிநபர் சுதந்திரம் தீர்மானிக்கப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றக் கண்காணிப்பையும் இது கட்டுப்படுத்துகிறது. இது நடைமுறையில் இருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிடவும் மோசமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது," என்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "1979இல் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்டு 1982இல் நிரந்தரமாக்கப்பட்ட பழைய சட்டத்தால் தமிழ் மக்கள் மட்டுமன்றி, 1989-91 காலப்பகுதியில் ஜே.வி.பி.யினரும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். புதிய சட்டமூலத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இல்லை என அரசு கூறினாலும், அது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. பெயரளவில் மட்டுமே பழைய சட்டம் நீக்கப்படுகிறதே தவிர, புதிய சட்டங்களில் அதைவிட மோசமான செயல்பாடுகளே காணப்படுகின்றன," எனத் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "2021 காலப்பகுதியில் பழைய சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி போராட்டங்களை நடத்தியதே தற்போதைய ஆளும்கட்சியினர்தான். தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அதைவிட கொடூரமான அதிகாரங்களைக் கொண்ட சட்டத்தை உருவாக்குவது மக்களுக்குச் செய்த துரோகமாகும். முப்படைகளுக்கும் நிரந்தர அதிகாரம் வழங்குவது ஆட்சியை முற்றுமுழுதாக ராணுவமயமாக்கலை நோக்கி நகர்த்தும்," என எச்சரித்தார். மேலும் அவர் சுட்டிக்காட்டுகையில், "பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தவறானவை எனச் சுட்டிக்காட்டப்பட்ட சில விஷயங்கள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட வரைபில் நீக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே. அதேவேளையில், தற்போது இயற்றப்பட்டுள்ள புதிய சட்ட வரைபு பழைய சட்டத்தை விடவும் மிகவும் மோசமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்ற விவாதமும் எழுகின்றது. பழைய சட்டத்தைவிட மேலான சில அம்சங்களை இந்தப் புதிய சட்டமூலம் கொண்டிருக்கின்றது என்பதற்காக இதை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டமே மிகவும் கொடூரமான ஒன்று என்ற நிலையில், அதிலிருந்து சில விஷயங்களை மட்டும் மாற்றிவிட்டு இந்தப் புதிய சட்டமூலம் மேம்பட்டது எனக் கூறுவது பொறுப்பற்ற செயல்," எனக் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2000ஆம் ஆண்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசத்தை அனுபவித்து, கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பெயர் குறிப்பிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தனது அனுபவங்களை பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார். "எந்தவித ஆதாரங்களும் இல்லாத நிலையிலும் என்னைத் தொடர்ச்சியாகத் தடுப்புக் காவலில் வைத்துச் சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். என்னுடன் இருந்த பல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் இதே நிலை ஏற்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவதற்கே 20 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில், தனது எதிர்காலமும் வாழ்க்கையும் முற்றாக நாசமாகி இன்று நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனையுடன் கூறினார். "இத்தகைய கொடூரமான சட்டங்களால் அப்பாவிப் பொது மக்களின் வாழ்க்கை அழிந்த பிறகு வருத்தப்படுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. இழந்த காலத்தை யாராலும் மீட்டுத்தர முடியாது," என்றும் அவர் கூறினார். எனவே, இனி வரும் காலங்களிலாவது இவ்வாறான சட்டங்களால் நாட்டின் இளைஞர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பட மூலாதாரம், Ayingaran புதிய சட்டமூலத்தின் பிரிவு 3(1), ஓர் அரசாங்கத்தை "முறையின்றி" நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களைப் பயங்கரவாதம் என வரையறுக்கிறது. அத்துடன், பழைய சட்டத்தில் பொலிஸாருக்கு மட்டுமே இருந்த நீதிமன்றப் பிடியாணை இல்லாத கைது, சோதனையிடல், மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பறிமுதல் செய்யும் அதிகாரங்கள் (பிரிவு 19, 20), தற்போது ராணுவத்திற்கும் கடலோரக் காவல்படைக்கும் நேரடியாக நீட்டிக்கப்பட்டுள்ளன. பிரிவு 9 மற்றும் 10இன் கீழ், "பயங்கரவாதத்தை மறைமுகமாகத் தூண்டுதல்" அல்லது "பயங்கரவாத வெளியீடுகளை வைத்திருத்தல்" ஆகியவற்றுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது ஊடகவியலாளர்கள் தங்களின் தகவல் மூலங்களைப் பாதுகாப்பதற்குக் கடுமையான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்று சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் எச்சரிக்கிறார். இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், "ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் ஏதேனும் போராட்டங்களை முன்னெடுக்கும் சூழ்நிலை உருவானால், அதையும் பயங்கரவாதத்திற்குள் உள்வாங்கக்கூடிய விதமாகவே இந்த வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. ஆகவே, நீதிமன்ற நடைமுறைகளுக்கு முன்னதான பல சிக்கல்கள் இச்சட்டமூலத்தின் கீழ் காணப்படுவது மிகவும் ஆபத்தானது. அத்துடன், சிவில் நிர்வாகத்தில் பொலிஸார் மட்டுமே தலையிட முடியும் என்ற நிலை மாறி, முப்படைகளுக்கும் கடலோரக் காவற்படைக்கும் நேரடி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சில தற்காலிக நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க முடிந்தாலும் அதற்கு நாடாளுமன்ற அனுமதி அவசியமாக இருந்தது. ஆனால், இந்தச் சட்டத்தின் ஊடாக முப்படைகளுக்கும் நிரந்தரமான நேரடி அதிகாரம் வழங்கப்படுகின்றது," என்றார். உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அமைப்புகளும் இப்புதிய சட்டமூலங்கள் குறித்துத் தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை அரசாங்கம் புதிதாக முன்வைத்துள்ள 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தனது கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தையும், பொலிஸாரிடம் அளிக்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சான்றாக ஏற்கப்படாமை மற்றும் விசாரணை ஒலி-ஒளிப் பதிவு போன்ற சில முன்னேற்றங்களையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நா, இருப்பினும் புதிய சட்டமூலமானது பழைய சட்டத்தின் பல குறைபாடுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளதுடன், சில அம்சங்களை மேலும் மோசமாக்கியுள்ளதாக எச்சரித்துள்ளது. "குறிப்பாக, புதிய சட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான வரையறை மிகவும் தெளிவற்றதாகவும் பரந்ததாகவும் காணப்படுவதால், அமைதியான மக்கள் போராட்டங்கள், தொழிற்சங்க வேலை நிறுத்தங்கள், ஊடக செய்தியிடல்கள் மற்றும் மனித உரிமை ஆவணப்படுத்தல்கள் கூட பயங்கரவாதமாகக் கருதப்பட்டு ஒடுக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்குப் பரந்த நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருப்பதுடன், நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் ஓராண்டு வரை தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்பது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு முற்றிலும் முரணானது" என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. இந்தச் சட்டமூலத்தை முழுமையாக மீளாய்வு செய்து, பயங்கரவாத வரையறையைக் குறுக்கி, சிவில் பொலிஸாரின் அதிகார முதன்மையையும் நீதித்துறையின் நேரடி மேற்பார்வையையும் உறுதி செய்யுமாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அதேபோல், இலங்கை அரசாங்கம் புதிதாக முன்வைத்துள்ள இச்சட்டமூலத்திற்கு எதிராகச் சர்வதேச மன்னிப்புச் சபை தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அரசாங்கம் இச்சட்டமூலத்தில் பகுதியளவிலான திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என அந்த அமைப்பு நேரடியாக வலியுறுத்தியுள்ளது. "நீதிமன்றத்தின் முறையான மேற்பார்வையின்றி நீண்ட காலம் நபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்யும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குவதால், தன்னிச்சையான கைதுகள் அதிகரிக்கக் கூடும், தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம்," என எச்சரித்துள்ளது. தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கும் எந்தவொரு சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் கொள்கைகளுக்கு இச்சட்டம் முரணானது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு வெளியிட்டுள்ள சட்ட விளக்கக் குறிப்பில், இலங்கையின் புதிய பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைச் சட்டக் கடப்பாடுகளுக்கு அமைவாக இல்லை என்ற கவலை வெளியிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின்றி நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கும் சித்திரவதைகளுக்கும் வழிவகுத்த பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக இந்தப் புதிய சட்டமூலம் கொண்டு வரப்படுவதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இருப்பினும் இதிலுள்ள ஆபத்தான அம்சங்கள் குறித்து எச்சரித்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பு முடிவடைந்துள்ள இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. பட மூலாதாரம், Harshana Nanayakkara இந்நிலையில், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, புதிய சட்டமூலம் குறித்து சமூக ஊடகங்களிலும் அரசியல் தளங்களிலும் திட்டமிட்டுப் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "47 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. பழைய சட்டம் ஆட்சியில் இருந்தவர்களால் சுயநலமாகப் பயன்படுத்தப்பட்டது. தமக்குத் தேவையான முறையில் எதிரணிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் தனி நபர்களுக்கும் எதிராக சட்டத்தைக் கையாண்ட வரலாறே உள்ளது. அதை மாற்றியமைக்கும் உறுதியான நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்," எனக் குறிப்பிட்டார். பாதுகாப்பிற்கும் சிவில் உரிமைகளுக்கும் இடையிலான இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவர், "பயங்கரவாதத்தைக் கையாளத் தனிச் சட்டமே தேவையில்லை என சிவில் அமைப்புகளும், சாதாரண குற்றவியல் சட்டம் போதாது எனப் பாதுகாப்புத் தரப்பும் கூறுகின்றன. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலையான இடத்திற்கே அரசாங்கம் வந்துள்ளது. இது அரசைப் பாதுகாக்கும் சட்டம் அல்ல, மக்களைப் பாதுகாக்கும் சட்டம்," எனத் தெரிவித்தார். அமைதி வழியிலான ஆர்ப்பாட்டங்கள், கருத்துச் சுதந்திரம் அல்லது ஜனநாயக ரீதியான செயல்பாடுகளுக்கு இச்சட்டம் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்றும், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது கூட சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழேதான் கையாளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். சில விசேஷ சந்தர்ப்பங்களில் மட்டுமே பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்படுவர் என்றும், சிவில் அதிகாரமும் நீதிமன்றக் கண்காணிப்பும் தொடரும் என்றும் அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம், Nalinda அதேவேளையில், இச்சட்டமூலத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 'ஜி.எஸ்.பி பிளஸ்' எனப்படும் சிறப்பு வர்த்தக வரிச் சலுகை ஒப்பந்தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார். "பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கண்டு அஞ்சியவர்கள், இப்போது ஜனநாயக முறைமையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டமூலங்களை எதிர்ப்பது முரண்பாடானது. புதிய சட்டங்கள் வேண்டாம் என்றால் மீண்டும் பழைய தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கே செல்ல வேண்டியிருக்கும்." அத்துடன் அவர், "எனவே இப்போது கொண்டு வரும் சட்டமானது, நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் சாதாரண பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை," என்றும் சுட்டிக்காட்டினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
இலங்கையின் புதிய பாதுகாப்புச் சட்ட மூலத்தை எதிர்க்கும் கட்சிகள், சிவில் அமைப்புகள் - அரசின் பதில் என்ன?