காசிக்கும் தமிழுக்கும் இத்தனை தொடர்புகளா? தமிழ் அகோரியுடன் உரையாடிய செய்தியாளரின் பயண அனுபவம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
காசிக்கும் தமிழுக்கும் இத்தனை தொடர்புகளா? தமிழ் அகோரியுடன் உரையாடிய செய்தியாளரின் பயண அனுபவம்

பட மூலாதாரம், Getty Images (இந்த கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரக்கூடும்) அது அதிகாலைப் பொழுது. மென்மையான தென்றலும் குண்டூசி அளவுக்கான மெல்லிய சாரலும் என்னை நனைத்துக் கொண்டிருந்தன. காசி பற்றி வாசித்த விஷயங்களையும் செவிவழிச் செய்தியாகக் கேட்ட சில கதைகளையும் மனதுக்குள் அசை போட்டவாறே காசியை சுற்றிப் பார்க்க நடக்கத் தொடங்கினேன். காசி, பனாரஸ், வாரணாசி என பல பெயர்களில் அறியப்படும் இந்த நகரத்தை இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நகரில் மரணித்தாலோ அல்லது உடலைத் தகனம் செய்தாலோ மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஒரு சாராரிடம் உள்ளது. தமிழ் மற்றும் தமிழர்களுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறது காசி. சரி, பயணத்துக்கு வருவோம். காசியின் குறுகிய தெருக்களுக்குள் புகுந்து நடக்க ஆரம்பித்தேன். சாரைசாரையாய் வரும் மனிதர்கள், அவர்களுக்கு மத்தியில் வலம் வரும் மாடுகள் - சக மனிதர்களுக்கு வழிவிட கடுமை காட்டுபவர்கள் கூட மாடுகள் வருகையில் இரண்டு புறமும் பிரிந்து வழிவிடுகிறார்கள். மணி அடிக்கும் சைக்கிள்கள், ஹாரன் அடிக்கும் பைக்குகள் என பிரதான சாலைகளுக்கு இணையான பரபரப்பைக் கொண்டிருந்தன அந்தக் குறுகிய தெருக்கள். எதிரே வந்த மாட்டுக்கு வழிவிட முடியாமல் பின்னோக்கி இரண்டு எட்டு வைத்து ஒரு லஸ்ஸி கடையின் வாசல் படியில் ஏறிய போது, நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதைக் கண்டேன். ஒரு சடலம் வந்து கொண்டிருந்தது. மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் தங்க நிற துணி போர்த்தி, ஏதோ முழங்கிக்கொண்டே அந்த சடலத்தைக் கொண்டு சென்றனர். அப்போது அருகே இருந்த கடைக்காரரிடம் ஒன்றைக் கவனித்தேன். ஒரு நொடி கண்ணை மூடி தலையை கீழசைத்தவாறு பெருவிரல் நீங்க நான்கு விரலால் நெஞ்சில் கை வைத்து முணுமுணுத்தார். அவரின் அந்த அசைவு முன்னர் வாசித்த சங்க இலக்கியப் பாடலான ஒரு கலித்தொகை பாடலை எனக்கு நினைவுபடுத்தியது. End of அதிகம் படிக்கப்பட்டது ''தெருவின்கண், காரண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ வாரண வாசிப் பதம்பெயர்த லேதில நீநின்மேற் கொள்வ தெவன்'' தலைவியும் தோழியும் பேசிக்கொள்ளும் இந்தப் பாடலில் மாற்றார் துயரத்தை தன் துயரமாகக் கருதும் பண்பாக வாரணாசி மக்களின் குணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கலித்தொகை மட்டுமல்ல சிலப்பதிகாரம், மணிமேகலை என பல்வேறு பழங்கால இலக்கிய நூல்களில் காசி பற்றி இது போல குறிப்புகள் உள்ளன. இது பழங்காலந்தொட்டே தமிழர்களுக்கும் அந்த நகரத்துக்குமான பரிச்சயத்தைக் காட்டக்கூடியதாக உள்ளது. அடுத்ததாக, காசியின் பிரதான அடையாளமாகப் பார்க்கப்படும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழைந்தேன். காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் தமிழர்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தக் கோவிலில் நான்கு வேளை பூஜை நடக்கும் நிலையில், அதில் மூன்று வேளை பூஜையை தமிழர்கள்தான் செய்கிறார்கள். காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் மூலம் தினமும் 3 வேளைக்கான பூஜை பொருட்கள் இந்தக் கோவிலுக்கு வழங்கப்படுகின்றன. இந்தப் பாரம்பரியம் நெடுங்காலமாகத் தொடர்வதாகக் கூறுகிறார் அந்தச் சத்திரத்தின் மேலாளர் கே.ஏ.விஸ்வநாதன். பட மூலாதாரம், Kashi Nattukottai Nagara shatram சத்திரத்தில் இருந்து கோவிலுக்குப் பூஜை பொருட்கள் கொண்டு செல்வதை 'சம்போ' என இவர்கள் குறிப்பிடுகின்றனர். பூஜைக்கான மலர், சந்தனம், பால் உள்ளிட்ட பல அபிஷேகப் பொருட்களுடன் தவில், நாதஸ்வரம் இசைத்து தினமும் 3 முறை சத்திரத்தில் இருந்து செல்வதாக அதன் மேலாளர் கூறுகிறார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காசியில் கலகங்கள் நடந்து ஊரடங்கு போடப்பட்டிருந்த சமயத்திலும் உள்ளூர் நிர்வாகத்தின் சிறப்பு அனுமதி பெற்று உரிய நேரத்தில் 'சம்போ' சென்று வந்ததாக 1963-ல் வெளியிடப்பட்ட காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தின் நூற்றாண்டு விழா மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சத்திரம் தொடங்கப்பட்டது குறித்து விவரித்த கே.ஏ. விஸ்வநாதன், ''இன்று தினமும் 200 முதல் 400 பேர் வந்து செல்லும் சத்திரமாக இது செயல்பட்டு வருகிறது. சிக்ரா பகுதியில் புதிய சத்திரம் ஒன்றும் கட்டியிருக்கிறோம். அதுவும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது'' என்றார். மீண்டும் பயணத்துக்கு வருவோம். நேரம் மதியத்தைக் கடந்திருந்தது. களைப்பு கால்களை தொற்றிக்கொள்ள தெருவோரக் கடையின் கச்சோரியும், லஸ்ஸியும் தற்காலிக தெம்பு தந்தன. வயிரை நிரப்பிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன். 'எங்கிருந்து வர்றீங்க, சவுத்தில் இருந்து வர்றீங்களா' என வழிநெடுக விசாரித்த பைக், டாக்ஸி ஓட்டுநர்கள் அவர்கள் பைக்கில் ஏறுமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தனர். தெருக்களுக்குள் ஆட்டோ, கார் செல்ல முடியாததால் இங்கு பைக் டாக்ஸி தேவை அதிகம். அதே நேரம், மொழி சரிவர தெரியாதவர்களிடம் சற்று கூடுதல் கட்டணம் கேட்கும் போக்கில் காசி விதிவிலக்கல்ல. இன்றும் தமிழ் எழுத்து மற்றும் கட்டடக்கலை அடையாளங்களுடன் நின்று கொண்டிருக்கும் ஓர் இடத்தில் வந்து இறங்கினேன். சைவத் துறவி குமரகுருபரர் மீட்டெழுப்பிய கேதாரேஸ்வர் கோவில் கங்கையைப் பார்த்தபடி 'சிவ சிவ' என்ற தமிழ் எழுத்துகளுடன் கேதார் காட் பகுதியின் படித்துறையின் மேலே தொன்மையான வரலாற்றை ஏந்தி நின்று கொண்டிருந்தது. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு உள்ளூர் நிர்வாகத்துக்குச் செலுத்தப்பட்ட வரி ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்தக் கோவிலுக்கும் குமரகுருபரர் மற்றும் குமாரசுவாமி மடத்துக்குமான தொடர்பு குறைந்தது 360 ஆண்டுகள் பழமையானது என்கிறார் காசி தருமபுர மடத்தின் கண்காணிப்பாளர் ராஜராஜன். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் தருமபுர ஆதீனத் தலைவர் விருப்பப்படி காசி சென்று, பின்னர் அங்கு சைவத்தொண்டு செய்ததாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட 'தமிழர் மரபில் காசி' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி விவரித்த ராஜராஜன், ''காசி வந்த குமரகுருபரர் கேதார் காட் பகுதியில் கங்கைக் கரையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு கனவு வந்திருக்கிறது. யாரோ ஒருவர் கனவில் தோன்றி 'எனக்கு கோவில் கட்டு' எனக் கூறி உள்ளார். கேதார் காட் அப்போது வனப்பகுதி போல இருந்துள்ளது. குமரகுருபரர் அந்தப் பகுதியை ஆராய்ந்த போது அங்கு கேதாரேஸ்வரர் என ஒரு சிவலிங்கம் இருந்துள்ளது. அது சுயம்புவாக உருவான லிங்கம் என காசி காண்டம் நூல் கூறுகிறது. கட்டடமாக இல்லாமல் குடிசை மட்டும் இருந்துள்ளது. அதை முழுமையான கோவிலாக மீட்டுருவாக்கம் செய்ய முடிவெடுத்த குமரகுருபரர், ஔரங்கசீப் அரசின் உள்ளூர் பிரதிநிதியிடம் நிலம் கேட்டு முறையிட்டார்'' எனக் கூறுகிறார். தன்னுடைய கல்வி அறிவினாலும் பண்பினாலும் டெல்லி பாதுஷாவின் பெருமதிப்பை குமரகுருபரர் பெற்றதாகவும், டெல்லி பாதுஷா குமரகுருபரருக்கு கேதார் காட்-டில் இடம் அளித்ததாகவும், பின்னர் தற்போது ஸ்ரீ குமாரசுவாமி மடம் என்ற பெயரில் அறியப்படும் மடத்தை குமரகுருபரர் நிறுவியதாகவும் 'தமிழர் மரபில் காசி' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. படித்துறைகளில் நடப்பதும், தெருக்களுக்குள் நுழைவதுமாய் காசிக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன். கங்கையின் ஓசையும் மந்திர ஓசைகளும் மாறிமாறி காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அப்போது, 'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்' என பாரதியார் பாடிய வரிகள் நினைவுக்கு வந்து சென்றன. காசி பற்றி பேசும் போது பாரதியாரை குறிப்பிடாமல் கடந்து செல்வது கடினம். தன் வாழ்க்கையில் சில காலத்தை பாரதியார் காசியில் கழித்திருக்கிறார். தந்தை இறந்த பிறகு காசியில் இருந்த தனது அத்தை வீட்டில் வந்து 4 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததாக பாரதியாரின் உறவுகள் ஊடகங்களில் அளித்த நேர்காணல்களில் கூறியுள்ளனர். ஹனுமன் காட் பகுதியில் உள்ள அந்த வீட்டில் தமிழ்நாடு அரசு நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. காசியும் தமிழும் எனும் போது கடந்து செல்ல முடியாத மற்றொரு விஷயம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். இந்திய மொழிகள் துறையின் கீழ் தமிழுக்கென ஒரு தனிப்பிரிவு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ளது. 1945-ஆம் ஆண்டு முதல் இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தமிழரல்லாத வேற்று மொழியைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இங்கு தமிழ் பயில்வதாகக் கூறுகிறார் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெகதீசன். பட மூலாதாரம், Jagadeesan பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் செயல்பாடுகள் குறித்து விளக்கிய அவர், ''தமிழில் சைவ சித்தாந்தம், பக்தி இலக்கியம், சங்க இலக்கியம் என பல்வேறு தத்துவ மரபுகள் இருப்பதால் அவற்றை வட இந்திய புலத்தில் உள்ள தத்துவ மரபுகளோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்வதுதான் தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்டதன் நோக்கம். தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் மொழி ஆய்வகம் ஒன்றும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. தமிழ் பயிற்றுவிப்பைத் தாண்டி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து தமிழ் நூல்களின் மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்து வருகிறோம். உதாரணமாக, ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை 35 மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான ஆய்வுத்திட்டம் நடந்து வருகிறது. அந்த நூல் விரைவில் வெளிவர உள்ளது. அதேபோல, தேசிய புத்தக நிறுவனத்துடன் இணைந்து மாற்றுமொழியில் உள்ள குழந்தைகளுக்கான சிறந்த நூல்களை தமிழிலும் மொழிபெயர்க்கிறோம். இதுவரை குழந்தைகளுக்கான 34 கதை நூல்களைத் தமிழ்ப் பிரிவினர் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளனர். இன்னும் 27 சிறார் நூல்கள் இந்த ஆண்டு வெளியிடப்படவுள்ளன. அதோடு, பாரதியார் ஆய்வு இருக்கையும் இங்கு உள்ளது. வட இந்தியப் பகுதியில் உள்ள மக்களிடம் தமிழைக் கொண்டு செல்வதற்கான ஓர் இணைப்புப் பாலமாக இங்கிருக்கும் தமிழ்ப்பிரிவு உள்ளது'' என்றார். தமிழில் உள்ள சைவ மரபுகளை இங்கிருக்கும் தத்துவ மரபுகளோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் சைவ சித்தாந்த ஆய்வு இருக்கையும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருப்பதாக முனைவர் ஜெகதீசன் கூறினார். 1946-ஆம் ஆண்டு குமாரசுவாமி மடம் வழங்கிய 60,000 ரூபாய் நிதி உதவியில் அந்த ஆய்வு இருக்கை தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்திய அரசு முன்னெடுத்து வரும் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்வை ஒருங்கிணைப்பதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கிய பங்காற்றுவதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறுகிறது. இருள் கருமை பூசத் தொடங்கியது. 'மணிக்கர்ணிகா காட்'-டை நோக்கி புறப்பட்டேன். இங்குள்ள மயானத்தில் இரவு, பகல் என தொடர்ந்து சடலங்கள் எரிவதால் காசி வரும் எவரும் தவறாமல் வந்து பார்க்கக் கூடிய இடம் இது. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மன்னர் அதிவீரராம பாண்டியரின் 'காசி காண்டம் நூல்' இந்த இடத்தினை ஆன்மிக ரீதியாக உயர்வாகக் குறிப்பிடுகிறது. மீண்டும் குறுகிய தெருக்களுக்குள் நடக்க ஆரம்பிக்க, இந்த முறை கால்களில் களைப்புத் தொற்றுவதற்கு முன்பே நான் தேடி வந்த இடத்தை நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பல அடி உயரத்துக்கு விறகுகள் மலை போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சடலத்தின் மீது பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. காசியில் பிணங்கள் துர்நாற்றம் வீசாது என்பது காசி பற்றிய பிரபலமான கூற்றுகளுள் ஒன்று. ஆனால், அதற்கு இந்த வாசனைப் பொருட்களும் ஒரு காரணம் என நான் சந்தித்த ஓர் அகோரி என்னிடம் கூறினார். அருகே இருந்த கட்டடத்தின் மீது ஏறினால் பிணங்கள் எரிவதைக் கழுகுப்பார்வை காட்சியில் பார்க்க முடியும் என்பதால் அருகே இருந்த கடைக்காரரிடம் அங்கு செல்ல வழி கேட்டேன். சற்று எரிச்சலுடன் அவரிடம் இருந்து பதில் வந்தது. முன்னர், சிரித்த முகத்துடன் எனக்கு வழிகாட்டியவர்களிடம் இருந்து சற்று வித்தியாசமானவராக இவர் தெரிந்தார். சடலங்கள் எரிவதைப் பார்க்க வருபவர்கள் ஆர்வ மிகுதியில் கேள்விகளால் அந்த நபரை துளைக்கிறார்கள் என நினைத்தேன். ஒருவேளை, அவர் பொறுமையாக பதில் சொல்லி இருந்தால் நானும் கூட எனக்குள் இருந்த சில கேள்விகளை அவரிடம் கேட்டிருக்கக் கூடும். வழிநெடுக கவனமாகக் கடந்து வந்தும், எனக்காகவே காத்திருந்தது போல காலில் ஒட்டிக்கொண்டது மாட்டுச்சாணம். அதோடு அந்தக் கட்டடத்தின் மீது ஏறி கண்கள் விரிய அந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். சில தமிழ் சந்நியாசிகளையும் அகோரிகளையும் காசியில் பார்க்க முடிந்தது. ஒரு தமிழ் அகோரியிடம் இயல்பான அறிமுகத்துக்குப் பின் எனக்குள் இருந்த கேள்விகளை ஒவ்வொன்றாக கட்டவிழ்க்கத் தொடங்கினேன். உங்க பெயர் என்ன? என்றேன். ''என் பெயரைத் துறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது'' என்றார். உங்களிடம் நிறைய எலும்புகள் உள்ளதே. எரிக்கப்பட்ட சடலத்தின் எலும்புகளாக அவை தெரியவில்லை, இவை உங்களுக்கு எப்படி கிடைக்கிறது? என்றேன் ''குழந்தைகள், கர்ப்பிணி உடல்கள் காசியில் எரிக்கப்படாது. மண் மூட்டையில் கட்டி கங்கையில் வீசப்படும். உடலை மீன்கள் தின்ற பிறகு எஞ்சியவை கரை ஒதுங்கும். அதில் இருந்து இவற்றை எடுத்துக்கொள்வோம். இவை எங்களுக்கு புனிதமானவை'' என்றார். இந்தப் பதில் அகோரிகளின் உலகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அதே நேரம், காசி பற்றி கேள்விப்பட்டதில் சில தகவல்கள் வெறும் வதந்தி என்பதை இந்த நகரத்துக்குள் சுற்றிய போது உணர முடிந்தது. காசியில் மரணித்தால் மோட்சம் கிடைக்கும் என கருதி பலர் இங்கு வந்து உயிரை மாய்ப்பதாகவும், அதனால் ஹோட்டல்களில் தனியாக வருபவர்களுக்கு இடம் கிடைப்பதில் சிரமம் இருக்கும் என யூடியூபர் ஒருவர் தனது வீடியோவில் கூறி இருந்தார். இது பற்றி ஹோட்டல் வரவேற்பறை ஊழியர்களிடம் கேட்ட போது, "காசியில் இருந்து திரும்பும் போது சிலர் தீர்த்தம் கொண்டு செல்ல விரும்புவார்கள்; சிலர் நினைவுகளை கொண்டு செல்ல விரும்புவார்கள்; சிலர் இது போன்ற கதைகளை உருவாக்கி கொண்டு செல்ல விரும்புகிறார்கள்" என நகைச்சுவையாகக் கூறினர். பின்னர் பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டேன். நகரின் போக்குவரத்து நெரிசலுக்குள் என் பைக் டாக்ஸி ஊர்ந்து கொண்டிருந்தது. காட் என அழைக்கப்படும் 80-க்கும் மேற்பட்ட படித்துறை பகுதிகளுக்கு அப்பால் வழக்கமான ஒரு நகரத்தின் இயல்பில் இயங்கிக் கொண்டிருந்தது காசி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை