சென்னை/புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், ‘‘கட்சி மாறிய இவர்களை எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும், ராஜினாமா செய்ததால் வந்த இடைத்தேர்தல் செலவுகளை வசூலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை நாடாளுமன்றம் இயற்றும்வரை, இது போன்ற ராஜினாமாக்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் விதிகளையும் நீதிமன்றம் வகுக்க வேண்டும்’’ என்று சி.செல்வகுமார் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் அதில், ‘‘தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுவதால் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றும் கோரியிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெய் சுகின் ஆஜராகி, ‘‘நாங்கள் கடந்த ஜூன் மாதமே மனு தாக்கல் செய்திருந்தும் இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே இதுதொடர்பான மூல வழக்குடன் சேர்த்து இந்த மனுவை விசாரிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ‘‘இதே விவகாரம் தொடர்பான மூல வழக்கு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனவே தற்போது விசாரிப்பதற்கு எதுவும் இல்லை’’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மரகதம் குமரவேல் உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்