அமராவதி: ஆந்திராவின் ஓங்கோல் அருகே ‘முரசு’ புயல் கரையைக் கடந்தது. அப்போது பெய்த கனமழையால் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன. 15 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘முரசு’ புயலாக உருவெடுத்து ஆந்திராவின் ஓங்கோல் அருகே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. அப்போது கன மழையுடன் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஆந்திராவின் தென் கடலோர பகுதிகளான பாபட்லா, ஓங்கோல், காக்கிநாடா, ஏலூரு, நெல்லூரு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழையும், சூறாவளி காற்றும் வீசின. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. முக்கிய நீர்நிலைகள் நிரம்பின. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்தன. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. கனமழை பெய்த மாவட்டங்களில் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன. ஏராளமான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. புயல் கரையை கடந்த பின்னரும், 15 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் ராயலசீமாவில் மழை நீடிக்கும் என விசாகப்பட்டின வானிலை மையம் எச்சரித்துள்ளது. சந்திரபாபு நாயுடு ஆய்வு முரசு புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும், மக்களின் நிலை குறித்தும் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்தே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைரீதியான முக்கிய அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது முதல்வர் கூறியதாவது: வெள்ள பாதிப்பு பகுதிகளில் 171 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் 10,805 பேர் தங்கி உள்ளனர். 14,810 உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 11 மத்திய பேரிடர் மீட்புக் குழுக்கள், 13 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 613 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. மரங்களை வெட்டி அப்புறப்படுத்த 185 குழுக்கள் களப்பணியாற்றி வருகின்றன. புயலுக்கு முன்பாகவே 3,066 கர்ப்பிணிகள், 1,008 இளம் தாய்மார்கள் மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டனர். 13 மாவட்டங்களில் 725 மருத்துவ குழுவினர், 362 ஆம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபட்டு உள்ளன. புயல் குறித்த தகவல்கள் 3.77 கோடி பேரின் செல்போன்களுக்கு அவ்வப்போது அனுப்பப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,095 கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மொத்தம் 30,661 ஹெக்டேர் அளவுக்கு நெல், பருத்தி, மிளகாய், பழங்கள்,காய்கறிகள் அடங்கிய பயிர்கள் நாசம் அடைந்ததாக முதற்கட்ட அறிக்கையை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
‘முரசு’ புயல் பாதிப்பு: ஆந்திராவில் கனமழையால் 30,661 ஹெக்டேர் பயிர்கள் சேதம், கால்நடைகள் மாயம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗