காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் பாரம்பரிய கட்டடங்களின், நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் கண்காணிப்பு அவசியம் என்பது பற்றி... மாமல்லபுரம்... - ENS தொல்லியல் நினைவுச் சின்னங்களும் பண்பாட்டுப் பாரம்பரிய கட்டமைப்புகளும் மனித குலத்தின் வரலாற்று அனுபவங்கள், சமூகப் பரிணாமம், பண்பாட்டு அடையாளம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மீட்டுருவாக்குவதற்கான முதன்மையான பொருண்மைச் சான்றுகளாகத் திகழ்கின்றன. பழங்காலக் கோயில்கள், கோட்டைகள், அரண்மனைகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அகழாய்வுகளின் மூலம் வெளிக்கொணரப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை கடந்தகாலச் சமூகங்களின் வாழ்வியல், பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் உறவுகளைப் புலப்படுத்துகின்றன. இத்தகைய பாரம்பரிய வளங்கள் வரலாற்று ஆவணங்களாக மட்டுமின்றி, சமகாலப் பண்பாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை ஆதாரங்களாகவும் விளங்குகின்றன. இருப்பினும், வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய காலநிலை மாற்றம் இவற்றின் நீண்ட காலப் பாதுகாப்பிற்குப் பன்முக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. வெப்பநிலை உயர்வு, தீவிர மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடல்மட்ட உயர்வு, கடலோர அரிப்பு மற்றும் வளிமண்டல ஈரப்பத மாறுபாடுகள் ஆகியவை பாரம்பரிய கட்டமைப்புகளின் வெளிப்புற, உட்புற மற்றும் உயிரியல் சிதைவுச் செயல்முறைகளைத் தீவிரப்படுத்துகின்றன. எனவே, பாரம்பரிய பாதுகாப்பை வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பொறுப்பாக மட்டுமன்றி, நீண்ட கால சமூகப் பொருளாதார முதலீடாகவும் அணுக வேண்டிய தேவை உருவாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள், பாரம்பரிய கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கல், செங்கல், சுண்ணாம்பு மற்றும் பிற கட்டுமானப் பொருள்களின் இயற்பியல் பண்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியான வெப்பநிலையின் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக நுண்விரிசல்கள் உருவாகி, காலப்போக்கில் அவை கட்டமைப்பின் உறுதித்தன்மையைப் பாதிக்கக்கூடும். இதனுடன் மழைநீர் ஊடுருவல், உப்புப் படிகமாதல் மற்றும் உயிரியல் வளர்ச்சி ஆகியவை இணைந்து கட்டடப் பொருள்களின் சிதைவை விரைவுபடுத்துகின்றன. குறிப்பாக, தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் போன்ற சோழர் காலக் கட்டடக்கலைச் சின்னங்களில் வெப்பநிலை, ஈரப்பதம், நீர் ஊடுருவல் மற்றும் மேற்பரப்புச் சிதைவு ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும். இத்தகைய கண்காணிப்பு முறைகள் பாரம்பரிய கட்டமைப்புகளின் சிதைவுச் செயல்முறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். கடலோரப் பாரம்பரிய வளங்களும் காலநிலை சார்ந்த இயற்கை அபாயங்களும் கடல்மட்ட உயர்வு, கடற்கரை அரிப்பு, அலைகள் மற்றும் கடல்சார் நீரியல் மாற்றங்கள் ஆகியவை கடலோரப் பண்பாட்டுப் நினைவுச் சின்னங்களின் நிலைத்தன்மைக்கு முக்கியமான அச்சுறுத்தல்களாக அமைகின்றன. தமிழ்நாட்டின் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், பூம்புகார் மற்றும் தனுஷ்கோடி போன்ற பகுதிகள் கடல்சார் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கும், பாரம்பரிய பாதுகாப்பிற்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதற்கான முக்கியக் களங்களாகும். இப்பகுதிகளில் செயற்கைக்கோள் தொலைநுண்ணுணர்வு, புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ் - GIS), ஆளில்லா வானூர்தி வரைபடமாக்கல் (ட்ரோன் மேப்பிங் - Drone Mapping) மற்றும் நீருக்கடித் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கடலோர நிலப்பரப்பு மாற்றங்களையும் அபாய நிலைகளையும் மதிப்பிட முடியும். இத்தகைய இயற்கை மாற்றங்கள் நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பை மட்டுமன்றி, அவற்றைச் சார்ந்த சுற்றுலா வருவாய், உள்ளூர் தொழில்முனைவு மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், ஒருங்கிணைந்த கடலோரப் பாரம்பரிய மேலாண்மை அவசியமாகிறது. அதிக மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு: தொல்லியல் படிவுகளின் பாதுகாப்பு காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் தொல்லியல் தளங்களின் படிவியல் அமைப்பையும், பண்பாட்டுப் படிவுகளின் பாதுகாப்பையும் பாதிக்கக் கூடியவை. குறிப்பாக, மண்ணடுக்குகளின் இயற்கையான வரிசை சீர்குலைவதால் தொல்லியல் பொருள்களின் காலவரிசை, இடவியல் தொடர்பு மற்றும் பண்பாட்டுச் சூழல் குறித்த தகவல்கள் இழக்கப்படலாம். மண்பாண்டங்கள், உலோகப் பொருள்கள், எலும்பு எச்சங்கள், கரிமப் பொருள்கள் மற்றும் கட்டட எச்சங்கள் ஆகியவை இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடும். கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் மற்றும் பொற்பனைக்கோட்டை போன்ற தொல்லியல் தளங்களில் அறிவியல் அடிப்படையிலான மழைநீர் வடிகால் அமைப்புகள், மண்ணின் ஈரப்பதக் கண்காணிப்பு, அகழாய்வுப் பகுதிகளுக்கான பாதுகாப்பு உறைகள் மற்றும் முறையான ஆவணப்படுத்தல் ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும். அகழாய்வில் கிடைக்கும் தொல்லியல் பொருள்களைப் பாதுகாப்பதுடன், அவற்றின் முப்பரிமாண எண்ணிலக்க ஆவணப்படுத்தலும் மேற்கொள்ளப்படுவது எதிர்கால ஆராய்ச்சிக்கான தரவுத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும். பாரம்பரிய பாதுகாப்பில் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு காலநிலை மாற்றத்தால் உருவாகும் பாதிப்புகளை முன்கூட்டியே அடையாளம் காணவும், அவற்றின் தாக்கங்களைக் குறைக்கவும் நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் முக்கியமான கருவிகளாக உருவெடுத்துள்ளன. ஜிஐஎஸ் தொழில்நுட்பம் காலநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்பு நிலைகளின் இடவியல் பகுப்பாய்விற்கு உதவுகிறது. செயற்கைக்கோள் தொலைநுண்ணுணர்வு நிலப்பரப்பு மற்றும் கடலோர மாற்றங்களைக் கண்காணிக்கிறது. ட்ரோன் ஒளிப்பட அளவியல் மற்றும் ஒளி கண்டறிதல் மற்றும் தொலைவு அளவீடு (LiDAR) தொழில்நுட்பங்கள் பாரம்பரிய கட்டமைப்புகளின் துல்லியமான முப்பரிமாண மாதிரிகளை உருவாக்குகின்றன. வெப்பக் கதிரியக்க படமாக்கல் (தெர்மல் இமேஜிங் - Thermal Imaging) கட்டடங்களின் வெப்பநிலை வேறுபாடுகளைக் கண்டறியவும், இணையவழி உணரிகள் (ஐஓடி சென்சார்ஸ் - IoT Sensors) வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் கட்டமைப்பு இயக்கங்களைத் தொடர்ந்து பதிவு செய்யவும் பயன்படுகின்றன. மேலும், செய்யறிவு (Artificial Intelligence) பல்வேறு காலநிலை மற்றும் கட்டமைப்பியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அபாய முன்னறிவிப்புகளை உருவாக்க உதவுகிறது. எண்ணிலக்க இரட்டை தொழில்நுட்பம் (Digital Twin Technology) பாரம்பரிய கட்டமைப்புகளின் மெய்நிகர் மாதிரிகளை உருவாக்கி, அவற்றின் நிலைமாற்றங்களைக் காலவரிசை அடிப்படையில் மதிப்பிடுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குகிறது. இத்தகைய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பாரம்பரிய பாதுகாப்பைச் சேதத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு அணுகுமுறையிலிருந்து முன்கூட்டிய அபாய மேலாண்மை அணுகுமுறைக்கு மாற்றுகிறது. பாரம்பரிய பாதுகாப்பும் பொருளாதார நிலைத்தன்மையும் பாரம்பரிய பாதுகாப்பை அரசின் நிர்வாகச் செலவினமாக மட்டும் கருதாமல், நீண்ட காலப் பொருளாதார மதிப்பை உருவாக்கும் முதலீடாக அணுகுவது அவசியமாகும். தொல்லியல் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரிய தளங்கள் சுற்றுலா, உள்ளூர் தொழில்முனைவு, கைவினை உற்பத்தி, போக்குவரத்து, விருந்தோம்பல் மற்றும் அருங்காட்சியக மேலாண்மை போன்ற பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக அமைகின்றன. கீழடி, ஆதிச்சநல்லூர், தஞ்சாவூர் மற்றும் மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் பாரம்பரிய சுற்றுலாவை அறிவியல் விளக்க மையங்கள், அருங்காட்சியகங்கள், உள்ளூர் கைவினைத் தொழில்கள் மற்றும் சமூக அடிப்படையிலான சுற்றுலா மேலாண்மையுடன் இணைக்க முடியும். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகி, உள்ளூர் மக்களின் வருமான வாய்ப்புகளும் விரிவடையும். மேலும், தடுப்பு பராமரிப்பு, காலநிலை அபாய மதிப்பீடு மற்றும் தொடர்ச்சியான எண்ணிலக்க கண்காணிப்பு ஆகியவை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரும் மறுசீரமைப்புச் செலவுகளைக் குறைக்க உதவும். எனவே, பாரம்பரிய பாதுகாப்பின் பொருளாதார மதிப்பீட்டில் சுற்றுலா வருவாயுடன் வேலைவாய்ப்பு, உள்ளூர் உற்பத்தி, சமூகப் பயன்கள் மற்றும் தவிர்க்கப்படும் சேதச் செலவுகளையும் உள்ளடக்க வேண்டும். மரபுவழி அறிவும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையும் பாரம்பரிய பாதுகாப்பில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் மரபுவழிச் சுற்றுச்சூழல் அறிவையும் ஒருங்கிணைப்பது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய நீர்நிலை மேலாண்மை முறைகளான ஏரிகள், குளங்கள், ஊருணிகள் மற்றும் கால்வாய்கள் மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் உள்ளூர் நீரியல் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. அதேபோன்று, செட்டிநாட்டுப் பாரம்பரிய கட்டடங்களில் காணப்படும் உள்முற்றம், இயற்கைக் காற்றோட்டம், தடித்த சுவர்கள் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் கட்டுமானப் பொருள்களின் பயன்பாடு ஆகியவை காலநிலைக்கேற்ற கட்டடக்கலை அறிவின் சிறந்த வெளிப்பாடுகளாகும். இத்தகைய மரபுவழி அறிவை நவீன காலநிலை அறிவியலுடன் இணைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் தாங்குதிறன் கொண்ட பாரம்பரிய மேலாண்மை முறைகளை உருவாக்க முடியும். எதிர்காலச் செயல்திட்டங்களும் கொள்கை அணுகுமுறைகளும் தமிழ்நாட்டின் பாரம்பரிய வளங்களை காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த செயல்திட்டம் அவசியமாகிறது. முதன்மையாக, முக்கியத் தொல்லியல் தளங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கான பாரம்பரிய காலநிலை அபாய வரைபடம் (Heritage Climate Risk Atlas) உருவாக்கப்பட வேண்டும். இதனுடன் கணினி வழி பாரம்பரிய கண்காணிப்பு அமைப்புகள், காலநிலைத் தரவுச் சேகரிப்பு மையங்கள் மற்றும் விரிவான எண்ணிலக்க ஆவணப்படுத்தல் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும், காலநிலைக்கு ஏற்ற சுற்றுலா மேலாண்மை, பேரிடர் முன்னெச்சரிக்கைத் திட்டமிடல் மற்றும் சமூக அடிப்படையிலான பாரம்பரியப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அரசுத் துறைகள், பல்கலைக்கழகங்கள், தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொறுப்பான தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது இன்றியமையாததாகும். இத்தகைய முயற்சிகள் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளான எஸ்டிஜி 8 - SDG 8 (பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு), எஸ்டிஜி 11 - SDG 11 (நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்), எஸ்டிஜி 13 - SDG 13 (காலநிலை நடவடிக்கை) மற்றும் எஸ்டிஜி 17 - SDG 17 (கூட்டாண்மை) ஆகியவற்றின் நோக்கங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை. இறுதியாக சொல்ல வேண்டும் என்றால் காலநிலை மாற்றம் என்பது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினையாக மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் வரலாற்று நினைவுகள், பண்பாட்டுத் தொடர்ச்சி மற்றும் பொருளாதார வளங்களைப் பாதிக்கும் பல்பரிமாண உலகளாவிய சவாலாகும். எனவே, தொல்லியல் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரிய பாதுகாப்பில் அறிவியல் தொழில்நுட்பம், காலநிலை அபாய மேலாண்மை, மரபுவழி அறிவு, சமூகப் பங்கேற்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டின் தொல்லியல் வளங்களை காலநிலைத் தாங்குதிறன் கொண்ட முறையில் பாதுகாப்பதன் மூலம் பண்பாட்டுச் சொத்துகளின் நீடித்த தன்மையை உறுதிப்படுத்துவதோடு, சுற்றுலா வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளூர் பொருளாதார மேம்பாட்டிற்கும் வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும். பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கடந்த காலத்தின் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பதாகும்; காலநிலை மாற்றத்தின் தாக்கங்களிலிருந்து அதனைப் பாதுகாப்பது எதிர்காலத் தலைமுறைகளின் பண்பாட்டு உரிமையையும் பொருளாதார நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதாகும். (கட்டுரையாளர் - உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை) தொடர்புக்கு: Iniyane@gmail.com தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாரம்பரிய பாதுகாப்பில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் பொருளாதார நிலைத்தன்மையும்!