அரசியல் மாண்பும் தலைமைப் பண்பும்...

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
அரசியல் மாண்பும் தலைமைப் பண்பும்...

அதிகாரம் பதவியால் கிடைக்கலாம்; மாண்பு மக்களின் நம்பிக்கையால் மட்டுமே கிடைக்கும். முதல்வர் விஜய் - ANI முனைவர் லூக்காஸ் மரியசவேரி அதிகாரம் பதவியால் கிடைக்கலாம்; மாண்பு மக்களின் நம்பிக்கையால் மட்டுமே கிடைக்கும். அதிகாரம் கிடைப்பது எளிது; மக்களின் நம்பிக்கையைப் பெறுவதும், அதை நிலைநிறுத்துவதும்தான் உண்மையான தலைமைக்கான சவால். ஒரு சிறுவன் தனது தந்தையிடம் ஒரு நாள் கேட்டான்: அப்பா, பெரியவர் என்றால் யார்? தந்தை உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, "மற்றவர்கள் உன்னைப் பார்த்து பயப்படும்போது நீ பெரியவன் அல்ல; உன்னை நம்பும்போது நீ பெரியவன்” என்றார். அந்தப் பதிலில் தலைமைத்துவத்தின் மிகப் பெரிய உண்மை இருக்கிறது. அதிகாரத்துக்கும் தலைமைக்கும் உள்ள வேறுபாடு அதுதான். ஒருவரிடம் பதவி இருக்கலாம்; அதிகாரம் இருக்கலாம்; அவரைச் சுற்றி பலர் இருக்கலாம். ஆனால், மக்கள் மனத்தில் நம்பிக்கை இல்லையென்றால், அந்த அதிகாரம் ஒரு நாற்காலியின் உயரத்தை மட்டுமே காட்டும்; ஒரு தலைவரின் உயரத்தை அல்ல. அண்மைக்காலமாக தமிழகத்தின் பொது வெளியில் "தலைமை', "அதிகாரம்', "பொறுப்பு', "அரசியல் நாகரிகம்' போன்ற சொற்கள் பல்வேறு உரையாடல்களில் எதிரொலிக்கின்றன. அந்த உரையாடல்களில் யார் யாரைப் பற்றி பேசினார்கள் என்பதைவிட, அவை நமக்குள் எழுப்பும் அடிப்படைக் கேள்விதான் முக்கியம். அரசியல் என்பது வெறும் தேர்தலில் வெல்வதற்கான கலை அல்ல. அது மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அறம். அதனால்தான் ஒரு தலைவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு மனித முகம் இருக்கிறது. ஒரு அரசு எடுக்கும் ஒரு முடிவு, எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு விவசாயியின் வாழ்க்கையை மாற்றலாம். ஒரு சட்டம், ஒரு தொழிலாளியின் குடும்ப வருமானத்தைத் தொடலாம். ஒரு நிர்வாகத் தீர்மானம், ஒரு மாணவரின் எதிர்காலத்தை மாற்றலாம். ஒரு தவறான முடிவு, ஒருவரின் வாழ்க்கையில் ஆண்டுகளுக்கான வலியை ஏற்படுத்தலாம். எனவே, அதிகாரம் என்பது வெறும் ஆணையிடும் உரிமையல்ல; அது பிறருடைய வாழ்க்கையைத் தொடும் பொறுப்பு. மேலாண்மை உலகில் தலைமைத்துவத்தின் முக்கியமான அடிப்படையாகக் கருதப்படுவது பொறுப்பேற்பு. வெற்றி கிடைக்கும்போது முன்னால் நிற்பதும், தோல்வி நேரும்போது பின்னால் செல்வதும் தலைமை அல்ல. வெற்றியின் புகழை அணியுடன் பகிர்ந்து கொண்டு, தோல்வியின் பொறுப்பை முதலில் ஏற்றுக்கொள்வதே தலைமை. வாக்குறுதி அளிப்பது எளிது. அதை நிறைவேற்றுவது கடினம். நிறைவேறாதபோது, அதற்கான காரணத்தைத் தேடாமல், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது அதைவிடக் கடினம். ஆனால், அந்தக் கடினமான தருணத்தில்தான் தலைமை தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. அரசியல் மாண்பு என்பது எதிரியைத் தோற்கடிப்பதில் இல்லை. எதிரியின் குரலைக் கேட்கும் அளவுக்கு தன்னம்பிக்கை கொண்டிருப்பதில் இருக்கிறது. மாறுபட்ட கருத்து ஜனநாயகத்தின் எதிரி அல்ல. அது ஜனநாயகத்தின் சுயதிருத்தக் கண்ணாடி. எதிர்க்குரல் இல்லாத இடத்தில் தவறு பெரிதாகிறது. கேள்வி கேட்கப்படாத இடத்தில் அதிகாரம் தன்னையே உண்மையென நம்பத் தொடங்குகிறது. எனவே, ஆள்பவருக்கும் எதிர்ப்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், இருவருக்கும் மேலாக இருக்க வேண்டியது மக்களின் நலன். அதிகாரம் மாறலாம். கட்சிகள் மாறலாம். தலைவர்கள் மாறலாம். ஆனால், ஜனநாயக நிறுவனங்களின் மாண்பு குறையக்கூடாது. இதுவே அரசியல் தலைமைத்துவத்தின் மிக முக்கியமான பரிமாணம். ஒரு தலைவர் தன்னைப் பாதுகாப்பதைவிட, தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், பதவி தனி நபருக்குச் சொந்தமானது அல்ல; அது மக்களால் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு. மக்கள் அரசியல்வாதிகளை ஒவ்வொரு நாளும் வாக்குச்சீட்டால் மதிப்பிடுவதில்லை. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையால் மதிப்பிடுகிறார்கள். அரசு அலுவலகத்தில் ஒரு முதியவரிடம் எப்படி பேசப்படுகிறது?, மருத்துவமனையில் ஏழை ஒருவர் எப்படி நடத்தப்படுகிறார்?, காவல் நிலையத்தில் ஒரு சாதாரண மனிதனின் குரல் கேட்கப்படுகிறதா? - இவற்றில்தான் அரசியல் மாண்பு சோதிக்கப்படுகிறது. ஒரு நல்ல தலைவர் தனது பெயரை வரலாற்றில் எழுத முயல்வதில்லை. அவர் உருவாக்கும் நல்ல நிர்வாகம், நல்ல நிறுவனம், நல்ல பண்பாடு ஆகியவையே அவரது பெயரை எழுதுகின்றன. பதவி முடிந்த பிறகும் ஒரு முதியவர், "அவர் காலத்தில் எங்களிடம் நியாயமாக நடந்தார்கள்'’ என்று சொன்னால் - அது தலைமை. ஒரு மாநிலத்தின் தலைமை வெறும் அதிகாரத்தின் குரலாக இருக்கக் கூடாது. அது மக்களின் நம்பிக்கையின் குரலாக இருக்க வேண்டும். அரசியலில் வெற்றி பெறுவது ஒரு நிகழ்வு. ஆனால், நம்பிக்கையைப் பெறுவது ஒரு நீண்ட பயணம். அதிகாரம் ஒருவரை உயர்த்தலாம்; ஆனால், மாண்புதான் அவரை நிலைநிறுத்தும். அரசியல் ஒரு போட்டியாக இருக்கலாம்; ஜனநாயகம் ஒரு பொறுப்பு. கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால், கண்ணியக் குறைவு இருக்கக் கூடாது. வெற்றி-தோல்வி மாறிக் கொண்டே இருக்கலாம்; மக்கள் நம்பிக்கை மட்டும் அரசியலின் நிலையான அளவுகோலாக இருக்க வேண்டும். இறுதியில் வரலாறு ஒரு தலைவரிடம் கேட்கும் கேள்வி: நீ எவ்வளவு காலம் அதிகாரத்தில் இருந்தாய் என்பதல்ல; உனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை, நீ எவ்வளவு மனிதநேயத்துடன் பயன்படுத்தினாய்? என்பதுதான். அதற்கான பதில்தான் அரசியல் மாண்பின் அளவுகோல். அதற்கான பதில்தான் தலைமைப் பண்பின் சான்று. அதற்கான பதில்தான் ஒரு தலைமுறையின் நினைவில் ஒரு தலைவருக்கு இடம் தரும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை