மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்திய தொழிலதிபர் ரத்தினம் வீடு. உள்படம்: முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சென்னை: தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாக ஆற்று மணல் அள்ளி, அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உட்பட 28-க்கும் மேற்பட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 34 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் 825 முக்கிய ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள், 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 28 குவாரிகளில் முறைகேடு? - தமிழகத்தில் 2021 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்ட 28 அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. குறிப்பாக, வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி முறையைப்பின்பற்றாமல், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ஆற்று மணல் அள்ளப்பட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும், மணல் எடுத்துச் செல்ல வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டு, அவை உண்மையானவைபோல் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ.4,730 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தனது விசாரணையில் தெரிவித்திருந்தது. இதற்காக டிரோன், செயற்கைக்கோள் படங்கள், ஜியோ ஸ்கேனிங் மற்றும் பொக்லைன் இயந்திரங்களின் ஜி.பி.எஸ். தரவுகள் மூலம் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டது. துரைமுருகன் மீது வழக்கு: இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே தமிழக டிஜிபி-க்கு கடிதம் எழுதி வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியது. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து, இந்த முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக மீண்டும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதில், முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாக கருதிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இதில் திமுகவைச் சேர்ந்த, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஓய்வுபெற்ற முதன்மை தலைமை பொறியாளர்கள் ஏ.முத்தையா, ராமமூர்த்தி, நீர்வளத்துறையைச் சேர்ந்த 14 அரசு ஊழியர்கள், 10 தனியார் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டோர் என 28-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 34 இடங்களில் சோதனை: இதன் தொடர்ச்சியாக சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 34 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று காலை முதல் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். திருச்சியில் நீர்வளத்துறை பொறியாளர்கள் குமரவேல், சாதிக் பாட்சா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் தொடர்புடைய இடங்களிலும், வேலூரில் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பத், தீபாவாணி, சுரேஷ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனின் உறவினர் ராஜா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உதவி பொறியாளர் சங்கீதா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 825 ஆவணங்கள் பறிமுதல்: மொத்தம் 34 இடங்களில் நடைபெற்ற சோதனையின் முடிவில், வழக்குடன் தொடர்புடைய குற்றத்தை நிரூபிக்கக்கூடிய 825 ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இந்த மணல் குவாரி முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்து, அடுத்தகட்ட விசாரணையை தீவிரப்படுத்த அதிகாரி கள் திட்டமிட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க அமலாக்கத்துறை ரூ.4,730 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி உள்ள நிலையில், முறைகேடு நடைபெற்ற 28 குவாரிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 4 குவாரிகளில் மட்டும் அரசுக்கு சுமார் ரூ.1,427 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு புகார்: துரைமுருகன் உட்பட 28 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗