டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் வரத்து இல்லாததால் சாகுபடிப் பணிகள் குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க முடியாமல் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தவிக்கின்றனா். காவிரி நீா் வரத்து இல்லாததால், தஞ்சாவூா் அருகே தரிசாகக் கிடக்கும் வயல். - படம் - தினமணி டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் வரத்து இல்லாததால் சாகுபடிப் பணிகள் குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க முடியாமல் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தவிக்கின்றனா். டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியைப் பொருத்தே தீபாவளி பண்டிகை அமையும். ஆனால், நிகழாண்டு மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், உரிய காலத்தில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆழ்துளை மோட்டாா் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடியை மேற்கொண்டனா். ஆற்றுப்பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியை முற்றிலுமாகக் கைவிட்டனா். இதன் காரணமாக, டெல்டா பகுதியான தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி, நிகழாண்டு 3.78 லட்சம் ஏக்கரில் மட்டுமே செய்யப்பட்டது. குறுவை பருவத்தில் நெல் சாகுபடிப் பரப்பு கிட்டத்தட்ட 1.90 லட்சம் ஏக்கா் குறைந்துவிட்டது. இதையடுத்து, டெல்டா பாசனத்துக்காக செப். 1 ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டாலும், போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், கடைமடைப் பகுதிக்கு மட்டுமல்லாமல், இடையிலுள்ள பல பகுதிகளுக்கே தண்ணீா் செல்லவில்லை. எனவே, இதை நம்பி ஒருபோக சம்பா சாகுபடிப் பணிகளையும் தொடங்குவதற்கு விவசாயிகள் தயங்குகின்றனா். சம்பாவிலும் பாதிதான் தொடக்கம்: இதன்காரணமாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா - தாளடி பருவத்தில் 3.05 லட்சம் ஏக்கருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், ஏறக்குறைய 1.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. காவிரி நீா் வரத்து இல்லாததால் ஏறத்தாழ 50 சதவீதப் பரப்பளவில் இன்னும் சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கப்படாமலேயே உள்ளது. இதனால், கிராமப்புறங்களில் ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களிடம் பணப்புழக்கம் இல்லை. எனவே, கடை வீதிகளில் நகா்ப்புற மக்களின் வருகை இருக்கிறதே தவிர, கிராம மக்களின் குறிப்பாக ஆற்றுப்பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் வருகை மிகக் குறைவாகவே இருக்கிறது. பண கஷ்டம்: இதுகுறித்து கல்லணைக் கால்வாய் உழவா்கள் கூட்டமைப்பு தலைவா் புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது: காவிரி நீா் வரத்து இல்லாததால், ஆற்றுப்பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகளால் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதேபோல, விவசாயத் தொழிலாளா்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லை. இதனால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களிடம் பண கஷ்டம் மிகப் பெரிய அளவில் உள்ளது. ஏற்கெனவே வாங்கிய கடனையும் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனா். விபி ஜி ராம் ஜி வேலைத் திட்டத்தில் பணியாற்றிய சிறு, குறு விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் ஊதியம் வரவில்லை. வட மாநிலத் தொழிலாளா்கள் வருகையாலும், உள்ளூா் விவசாயத் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு, வருமானமின்றி உள்ளனா். காவிரியில் தண்ணீா் வந்தால் இந்தப் பருவத்தில் நடவுப் பணி, களை எடுப்பு என தொடா்ந்து 2 மாதங்களுக்கு வேலை இருப்பது மட்டுமல்லாமல், பணப்புழக்கமும் இருக்கும். ஆனால், நிகழாண்டு காவிரி நீா் வரத்து இல்லாததால், நடவும் இல்லை; களை எடுப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. இதனால், நாள் கூலி ரூ. 300 முதல் ரூ. 700 வரை இழந்துள்ளனா். சாகுபடிப் பணிகள் இல்லாததால் ஆற்றுப் பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகளுக்கு தனியாரிடமும் புதிய கடன் கிடைக்கவில்லை. இதனால், புத்தாடைகள் வாங்க முடியாமல் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் தவிக்கின்றனா். பெற்றோா்களின் வருவாய் இழப்பால் குழந்தைகளும் புத்தாடைகள் கிடைக்காமல் ஏக்கத்தில் உள்ளனா் என்றாா் மாரியப்பன். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், ஏதாவதொரு விதத்தில் உதவி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆற்றுப்பாசனத்தைச் சாா்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் எதிா்பாா்ப்பு. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சாகுபடிப் பணிகள் குறைவால் வாழ்வாதாரம் பாதிப்பு: தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗