தில்லியில் செவ்வாய்க்கிழமை அடா்த்தியான புகைமூட்டம் சூழ்ந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது. தில்லியில் காற்றின் தரம் - பிரதிப் படம் தில்லியில் செவ்வாய்க்கிழமை அடா்த்தியான புகைமூட்டம் சூழ்ந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது. காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 332-ஆக குறைந்து, ‘மிகவும் மோசமான’ பிரிவில் பதிவானது. ஜஹாங்கீா்புரியில் காற்றின் தரம் மிக மோசமாக, ஏக்யூஐ 452-ஆக பதிவாகி ‘கடுமையான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்தது. காற்றின் தரம்: தில்லியின் ஏக்யூஐ திங்கள்கிழமை 324-ஆகவும், நவ. 1-ஆம் தேதி 261-ஆகவும் இருந்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, தில்லியில் கண்காணிப்பில் உள்ள 57 மையங்களில் 8 மையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவிலும், 32 மையங்களில் மிகவும் மோசமான பிரிவிலும் பதிவானது. 2 மையங்களில் மிதமான நிலையும், மீதமுள்ள 15 மையங்களில் மோசமான நிலையும் காணப்பட்டது. வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு மையமான சஃப்தா்ஜங் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவகால சராசரியைவிட 1.1 டிகிரி அதிகமாகும். பாலம் பகுதியில் 16.2 டிகிரி செல்சியஸும், லோதி சாலையில் 16.2 டிகிரி செல்சியஸும் பதிவானது. லோதி சாலையில் இது வழக்கத்தைவிட 3.2 டிகிரி அதிகமாகும். ரிட்ஜ் பகுதியில் 17.7 டிகிரி செல்சியஸும், அயாநகரில் 17.2 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாகப் பதிவானது. செவ்வாய்க்கிழமை வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 29 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. சிபிசிபி வகைப்படுத்தலின்படி, 301 முதல் 400 வரையிலான ஏக்யூஐ அளவு ‘மிகவும் மோசமான’ பிரிவிலும், 401 முதல் 500 வரையிலான அளவு ‘கடுமையான’ பிரிவிலும் அடங்கும். பருவகாலத்தில் பயிா்க்கழிவு எரிப்பு தில்லியின் நுண்துகள் மாசுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், பிற மாசு வெளியீட்டு மூலங்கள், காற்றின் திசை மற்றும் வானிலை நிலவரங்களும் காற்றின் தரத்தைப் பாதிக்கின்றன பயிா்க்கழிவு எரிப்பின் பங்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு: தில்லியில் அடுத்த 3 நாள்களில் நுண்துகள் மாசான பிஎம் 2.5 அளவில், பயிா்க்கழிவு எரிப்பின் பங்களிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் முடிவெடுப்பு ஆதரவு அமைப்பின் (டிஎஸ்எஸ்) கணிப்பின்படி, தில்லியின் பிஎம் 2.5 மாசில் பயிா்க்கழிவு எரிப்பின் பங்களிப்பு நவ. 2-ஆம் தேதி 8.58 சதவீதமாக இருந்தது. இது நவ. 3-ஆம் தேதி 15.30 சதவீதமாகவும், நவ. 4-ஆம் தேதி 20.06 சதவீதமாகவும், நவ. 5-ஆம் தேதி 22.21 சதவீதமாகவும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கிடையே, நவ. 2-ஆம் தேதி அண்டை மாநிலங்களில் 219 இடங்களில் நெல் பயிா்க்கழிவு எரிக்கப்பட்டதை செயற்கைக்கோள் தரவுகள் கண்டறிந்துள்ளன. அதிகபட்சமாக பஞ்சாபில் 98 இடங்களிலும், ராஜஸ்தானில் 67, மத்திய பிரதேசத்தில் 48, உத்தர பிரதேசத்தில் 4, ஹரியாணாவில் 2 இடங்களிலும் இத்தகைய சம்பவங்கள் பதிவாகின. தில்லி, உத்தரகண்டில் அன்றைய தினம் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என விண்வெளி சாா்ந்த வேளாண் சூழலியல் கண்காணிப்பு மற்றும் மாதிரியாக்க ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (க்ரீம்ஸ்) ஆய்வகம் தெரிவித்தது. நிகழாண்டு செப். 15 முதல் நவ. 2 வரை மொத்தம் 3,535 பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பஞ்சாபில் 1,612, ராஜஸ்தானில் 738, மத்திய பிரதேசத்தில் 614, உத்தர பிரதேசத்தில் 349, உத்தரகண்டில் 176, ஹரியாணாவில் 44, தில்லியில் 2 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பயிா்க்கழிவு எரிப்பின் பங்களிப்பு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்பட்டாலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் 2020-ஆம் ஆண்டு 51,822 சம்பவங்களும், 2021-இல் 24,583, 2022-இல் 26,490, 2023-இல் 18,991, 2024-இல் 9,668, 2025-இல் 4,993 சம்பவங்களும் பதிவாகியிருந்தன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தில்லியில் காற்றின் தரம் ‘மிக மோசம்’ நிலைக்குச் சரிவு: ஜஹாங்கீா்புரியில் அதிகபட்சமாக 452-ஆக பதிவு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗