அமைச்சர் ரமேஷ் | கோப்புப் படம் சென்னை: திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், 50-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்ட குத்தகைதாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த நம்பிராஜ் என்பவர் குத்தகை ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, சட்ட விதிகளுக்கு புறம்பாக கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி 50-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி அவற்றைச் சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விட்டுள்ளதாகத் தெரியவந்தது. இதன்மூலம் கோயிலின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டது தொடர்பாகப் புகார்கள் எழுந்தன. இவ்விவகாரம் அறநிலையத்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டவுடன், உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட குத்தகைதாரர் குத்தகை நிபந்தனைகளை மீறிச் செயல்பட்டதைக் கருத்தில்கொண்டு, அவருக்கான குத்தகையை ரத்து செய்து, நிலத்தை கோயில் வசம் ஒப்படைக்குமாறும் தெரிவித்து அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் கூடுதல் ஆணையர் ரத்னா தலைமையில், நில அளவையர்களைக் கொண்டு கோயில் நிலம் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் மூலம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் எல்லைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் வசம் சுவாதீனம் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்போரூர் கோயில் நிலத்தில் கடைகள் கட்டி வாடகை வசூல்: ஒப்பந்தத்தை ரத்து செய்த அமைச்சர் ரமேஷ்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗