டிஜிட்டல் கைது என்பதே இந்திய சட்டத்தில் இல்லாத நடைமுறை! நீதியும் நியாயமும் - 12

📅 📍 Thanjavur, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
டிஜிட்டல் கைது என்பதே இந்திய சட்டத்தில் இல்லாத நடைமுறை! நீதியும் நியாயமும் - 12

‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) என்பது இந்திய சட்டத்தில் இல்லாத நடைமுறை. மோசடிக்காரர்கள் ஏமாற்றுவதற்காக அதுபோன்ற ஒன்றை மக்களிடையே நடைமுறைப்படுத்துகின்றார்கள். டிஜிட்டல் கைது - AI - Dinamani அலுவலகத்திற்கு எதிரே மளிகைக் கடை நடத்தி வருகிறார், பாண்டியன். அருகிலேயே வீடு. முதல் தலைமுறை வணிக வெற்றியாளர். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வணக்கம் வைப்பார். அன்று அதிகாலை நேரம். அலுவலகத்தில் இருந்தேன். பதற்றத்துடன் அலுவலகத்திற்குள் ஓடி வந்தார். “என்ன ஆச்சுங்க பாண்டியன்” என்றேன். கையில் செல்போனுடன், சற்று வியர்த்துக் காணப்பட்டார். “போதைப்பொருள் கடத்தல் வழக்குல பொண்ண கைது பண்ணப்போறாங்கலாம் சார்” என்றார். உடல் முழுவதும் பதற்றம் பரவியிருந்தது. மனிதன் கண்ணீர் சிந்தினார். நான் புரிந்துகொண்டேன். பாண்டியன் மகள் பிரபலமான தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறையில்தான் வீட்டிற்கு வருவார். நன்கு படிக்கக்கூடியவர். சுறுசுறுப்பானவர். மாதம் தவறாமல் பாண்டியன் நேரில் சென்று மகளைப் பார்த்து வருவார். “பாண்டி... போனை சுவிச்ஆப் பண்ணிட்டீங்களா” என்றேன். “என்ன செய்யறதுனு தெரியல சார், ‘சி.பி.ஐ. ஆபிசுல இருந்து பேசறோம்னு சொன்னாங்க. உங்க மகள் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மாட்டியிருக்கா... அவளைக் கைது செய்யப் போறோம், நாங்க சொல்றதைப் பொறுமையாகக் கேளுங்க’ னு சொன்னவுடனே சுவிச்ஆப் பண்ணிட்டு ஓடி வர்றேன் சார்” என்றார். “நல்ல காரியம் செஞ்சிருக்கீங்க, பதற்றமில்லாம உட்காருங்க” என்றேன். உட்கார்ந்தார். தண்ணீர் கொடுத்து ஆற்றுப்படுத்தினேன். இன்றைக்கு இந்தியாவையே அச்சுறுத்தி வரும் ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்தான் பாண்டியனைத் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை விளக்கினேன். இத்தகைய டிஜிட்டல் மோசடிக் கும்பலிடம், ஒவ்வோர் ஆண்டும் மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்து வருகின்றனர். “இப்பதான் உசுரு வந்தமாதிரி இருக்கு, உடனே..பொண்ணுக்கிட்டபேசணும் சார்” என்றார். “தாராளமாகப் பேசுங்க, நடந்ததைப் பத்தி இந்த நேரத்தில எதுவும் சொல்லாதீங்க.. அதிகாலை நேரம். நேரில் பார்க்கும்போது, பொறுமையாக நடந்ததைச் சொல்லுங்கள். ‘தெரியாத எண்ணில் இருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம்’ என்று மட்டும் சொல்லுங்கள்” என்றேன். “எதுக்கும் ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வந்துடுறேன் சார்” என்றார். “வழக்கத்திற்கு மாறாக எதையும் செய்ய வேண்டாம். விடுமுறையில் போய் பாருங்கள் போதும், உங்களுக்கு கால் வந்த எண்ணைக் குறித்து சைபர் கிரைம் எண்ணுக்குத் தகவல் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பிவைத்தேன். இப்படியான மோசடிக் கும்பல்களின் நடமாட்டம் இப்போது அதிகரித்திருக்கின்றது. பொதுவாக இதுபோன்று வரும் புகார் தொடர்பாக உள்ளுர் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெரிதாகக் கவனத்தில் கொள்வதும் இல்லை. இத்தகைய புகார்களை விசாரணை செய்யும் கட்டமைப்பும் நமது காவல் துறையினரிடம் இல்லை. மனிதர்கள் வெளிப்படைத் தன்மையோடு தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ள வேண்டும். பொதுவில் வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், தங்கள் குடும்பத்தினருக்காவது வெளிப்படைத்தன்மையோடு வாழ வேண்டும். பல சிக்கல்களுக்கு வெளிப்படைத்தன்மை இல்லாத வாழ்க்கை முறைதான் காரணமாகின்றது. அச்சம் மனிதனை மென்று விழுங்கிவிடும். இணைய வழி மோசடிக் கும்பல்களுக்கு மனிதர்களின் அச்சம்தான் முதலீடாகின்றது. பாண்டியனுக்கு தன் மீதும் தன் மகள் மீதும் நம்பிக்கை இருந்தது. பதற்றமடைந்தார், ஆனால் நிதானம் இழக்கவில்லை. மனம் அறிந்து எந்தக் குற்றமும் செய்யாதவர். சி.பி.ஐ. ஆபிசர்னு சொன்ன பிறகும், செல்போனை சுவிச்ஆப் செய்துவிட்டு வழக்கறிஞர் அலுவலகம் நோக்கி ஓடி வந்துள்ளார். வெளிப்படைத் தன்மையோடு வாழ்பவர்களால் மட்டுமே நெருக்கடியான சூழலில் சரியான முடிவெடுக்க முடியும். பாண்டியனுக்கு ஏதேனும் ஓர் அச்சம் அல்லது குற்ற உணர்ச்சி இருந்திருந்தால்; குடும்பம் என்ன நினைக்கும்; ஊர் என்ன நினைக்கும்; என்ற அச்சத்தில் மோசடிக் கும்பலின் சதி வலையில் சிக்கி இருப்பார். பல லட்சங்களை இழந்திருப்பார். அவரால் போனை சுவிச்ஆப் செய்திருக்க முடியாது. இங்கு நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. பாண்டியன் சில லட்சங்களில் வியாபாரம் செய்யக்கூடியவர் என்பதும், பாண்டியனுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் மோசடிக் கும்பலுக்கு எப்படித் தெரியும்? இந்தச் சூழ்நிலையில்தான், ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, In Re: Victims of Digital Arrest Related to Forged Documents, Suo Motu Writ Petition (Criminal) No. 3 of 2025 என்ற வழக்கைப் பதிவு செய்து விசாரணை செய்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணையில் இருக்கும் ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) குறித்த வழக்குத் தீர்ப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் ‘டிஜிட்டல் கைது’ தொடர்பான விரிவான சட்டங்கள் உருவாகக் கூடும். கடந்த 29.10.2026 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ‘சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளே மோசடிகளில் இருக்கும் சூழலில் அல்லது வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவு (Due diligence failure) காரணமாக இருக்கும்பட்சத்தில், இழந்த தொகைக்கும் குறைவில்லாதத் தொகையை இழப்பீடாக சம்பந்தப்பட்ட வங்கிகளே கொடுக்க நேரிடும்’ என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. விடியோ அழைப்பில் வரும் பண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள், எதிர்முனையில் இருப்பவர்களிடம், ‘தங்களுடைய ஆதார் எண் மற்றும் பான் எண்ணைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது’ என்றோ, ‘பண மோசடி நடந்துள்ளது’ என்றோ, ‘தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்யப்பட்டு உள்ளது’ என்றோ குற்றச்சாட்டுகளைக் கூறி அச்சுறுத்துவார்கள். ‘நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள், வேறு எங்கும் செல்லக்கூடாது; விடியோ காலில் இருந்து இணைப்பைத் துண்டிக்கக் கூடாது’ என மிரட்டுவார்கள். ‘வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புங்கள்’ என்பார்கள். ஏதேனும் வழக்கில் சிக்கிக்கொண்டால் நம்மைப் பற்றி குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள்; இந்த ஊர் என்ன நினைக்கும்; என்ற அச்சத்தில் கேட்கும் தகவல்கள் அனைத்தையும் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் பகிர்ந்து விடுவார்கள். இணைப்புத் துண்டிக்கப்பட்டுவிடும். தாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்வதற்குள் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் முடிந்திருக்கும். தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் சில நொடிகளில் இழந்திருப்பார்கள். இணைய வழி மோசடியில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் பெறுபவர்கள் நேரடியாகக் தங்களின் / குற்றவாளிகளின் வங்கிக் கணக்கிற்கு பணத்தைக் கொண்டு செல்வதில்லை. “உங்கள் வங்கி கணக்கு எண்ணில் இருந்து எங்கள் பிசினஸ் பணத்தைப் பெற்று வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொடுத்தால் கமிஷன் தருகிறோம்” என்று விவரம் இல்லாத பல அப்பாவி மக்களிடம் வங்கிக் கணக்குகளைப் பெற்று வைத்திருப்பார்கள். மோசடியில் பெறப்படும் பணம் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களின் வங்கிக் கணக்கிற்குத்தான் முதலில் சென்று சேர்கின்றது. அங்கிருந்து வேறு கணக்கு, மீண்டும் அங்கிருந்து வேறு கணக்கு என மாற்றி விடுவார்கள். தான், மோசடி செய்யப்பட்டுவிட்டேன் என்பதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்தவுடன், சைபர் கிரைம் பிரிவிற்கு உடனடியாகத் தகவல் கொடுக்க வேண்டும். பணத்தை மீட்பதற்கான வழிகள் உண்டு. பல நேரங்களில் மீட்கப்பட்டும் உள்ளது. காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் பணம் வேறு வேறு கணக்கிற்கு மாறிக்கொண்டே இருக்கும். பணத்தை மீட்க முடியாமல் போய்விடும். மோசடிக் கும்பல்கள் பயன்படுத்தும் போலி வங்கிக் கணக்குகள் Mule Account என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுபோன்று ஆயிரக்கணக்கான மியூல் கணக்குகள் காவல் துறையினரால் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. ‘ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண் போன்றவற்றின் விவரங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்’ என தொடர்ந்து வங்கிகள் எச்சரித்து வருகின்றன. கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் வங்கி விவரங்களைக் கொடுத்தால் மோசடி வழக்கில் சிக்கிச் சிறை செல்வதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த ஆண்டில் மட்டும் 3,000 கோடி ரூபாய் டிஜிட்டல் கைது மோசடியால் மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தங்களின் வாழ்நாள் சேமிப்பை மூத்த குடிமக்கள் இழந்திருக்கின்றார்கள். இதனால் பல மூத்த குடிமக்கள் கொடிய மரணத்திற்குத் தள்ளப்படுகின்றனர். அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்ப மோசடியும் வளர்ச்சி அடைந்துவிட்டன. ‘நிதி ஆயோக்’ இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இதை முற்றிலும் தடுப்பதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் டிஜிட்டல் கைது மோசடியால் ஏற்பட்டுள்ள மனித உரிமை பாதிப்புகளைக் கவனத்தில் கொண்டு ஆலோசித்து வருகின்றது. ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) என்பது இந்திய சட்டத்தில் இல்லாத நடைமுறை. ஆனால், மோசடிக்காரர்கள் அதனை நடைமுறைப்படுத்துகின்றார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியப் பொருளாதாரத்தையே அசைத்துப் பார்க்கின்றது. காவல் துறை அதிகாரிகள் யாரும் விடியோ காலில் அழைத்து வழக்கு குறித்துப் பேசுவதில்லை என்ற பொதுவான அறிவு நமது மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஒன்று உள்ளது. 1961ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது. பாடல் எழுதி 65 ஆண்டுகள் கடந்துவிட்டது. திருட்டு ஒழியவில்லை. திருட்டின் தன்மை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது. மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை அறிமுகமில்லாத நபர்களிடம் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. வங்கியில் இருந்து வரும் OTP எண்ணை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது. விடியோ காலில் மிரட்டல் அழைப்பு வந்தால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்:1930-இல் புகார் தெரிவிக்க வேண்டும். National Cyber Crime Reporting Portal இணைய தளத்தில் புகாரைப் பதிவு செய்ய வேண்டும். எல்லா புகார்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றாலும் ஏதோ ஒரு சூழலில் உண்மை வெளிப்படும். குற்றவாளிகளின் தொடர் கண்ணி அறுக்கப்படும். ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) என்பது இந்திய குற்றவியல் சட்டத்தில் புதிய சொல்லாடல். இதற்கான வரையறையை நிகழ்காலம்தான் எழுத வேண்டும். ‘டிஜிட்டல் கைது’ தொடர்பான குற்றங்களைத் தடுப்பது குறித்து தனியாக எந்தச் சட்டமும் இல்லை. தகவல் தொழில்நுட்பச் சட்டம் (Information Technology (IT) Act, 2000) பிரிவு 66D-இன் கீழ் கணினி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வேறொரு நபராக வேடமிட்டு (ஆள்மாறாட்டம் செய்தல்) ஏமாற்றுதல், பிரிவு 66C-இன் கீழ் மோசடியாகக் கடவுச்சொல் மற்றும் மின்னணுக் கையொப்பம் செய்தல், அடையாளத் திருட்டு ஆகியவற்றுக்குத் தண்டனை விதிக்க முடியும். ‘பாரதிய நியாய சன்ஹிதா’ பிரிவு 318-இன்கீழ் ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் தூண்டுதல் மூலம் செய்யப்படும் மோசடி, பிரிவு 319-இன் கீழ், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் (உதாரணமாக, காவல்துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள் போல வேடமிடுதல்) பிரிவு 308-இன் கீழ் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் அல்லாத கட்டாயப்படுத்துதல் மூலம் பணம் பறித்தல், பிரிவு 61-இன் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பான குழுக்களுக்கு இடையிலான குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும். ‘டிஜிட்டல் கைது’ மோசடியில் ஈடுபடுபவர்கள் சாதாரண நபர்களாக இருக்க முடியாது. தகவல் தொழில்நுட்பம் நன்கு அறிந்த மனிதர்களாகத்தான் இருக்க முடியும். அவர்கள் எங்கிருந்து தோன்றுகின்றார்கள்? என்றால், இந்தச் சமூகத்தில் இருந்துதான். இளைஞர்களின் அதிகபட்ச லட்சியம் White-Collar Job. அது, அலுவலகப் பணி அல்லது அறிவுசார் பணி. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் அதுதான் பெருமை தரக் கூடியதாக இருக்கின்றது. தங்களுக்கான பணி வாய்ப்பு என்பது அனைவருக்கும் பொருந்தி வருவதில்லை. சிலநேரங்களில் ஏமாற்றம், இழப்பு, நம்பிக்கைத் துரோகம், மோசடி போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளில் முடிவடைகின்றன. பலரும் அதைக் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால், சிலரால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மொத்த சமூகத்தையும் வஞ்சம் தீர்க்கத் துணிந்து விடுகின்றனர். டிஜிட்டல் குற்றவாளிகள் (White-Collar Criminals) இப்படிப்பட்ட சூழல்களில்தான் உருவாகின்றனர். அவர்களிடம், ஈவு இரக்கம் என்பதையெல்லாம் மருந்துக்கும் எதிர்பார்க்க முடியாது, இருக்காது. ‘கடுமையான சட்டங்கள் திறமையான குற்றவாளிகளை உருவாக்கும்’ என்ற குற்றவியல் தத்துவம் இந்த இடத்தில் மெய்யாகிவிடுகின்றன. இணையவழி பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ள காலகட்டத்தில், தங்கள் வாடிக்கையாளரைப் பாதுகாக்க வேண்டிய மேலான பொறுப்பு வங்கிகளுக்கு இருக்கின்றன. லட்சங்களில் பணம் மாறுதல் (Transfer) செய்யும்போது; சில தனியார் வங்கிகள் உடனடியாக வாடிக்கையாளரை தொலைபேசியில் அழைக்கிறார்கள். “தங்கள் பரிவர்த்தனை சரியான நபருக்குத்தான் போய்ச் சேருகின்றதா?” என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒரு கணக்கில் இருந்து வேறொரு கணக்கிற்குப் பணம் மாறுதல் செய்யப்பட்டவுடன் வாடிக்கையாளரை அழைத்துப் பேசும் நடைமுறையைப்போல, பணம் மாறுதலுக்காக ஒப்புதல் கேட்டு ஓடிபி எண் அனுப்பும்போதே, தங்கள் வாடிக்கையாளரை அழைத்துப் பேசும் நடைமுறையைக் கட்டாயப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர் எச்சரிக்கை அடைய முடியும். இத்தகைய வசதிக்கான மென்பொருளைத் தயாரிக்க வேண்டும். அது இயலாத ஒன்றல்ல. வாடிக்கையாளருக்கான இழப்பு என்பது தனிநபருக்கானது மட்டுமல்ல. அது இந்த நாட்டுக்கான இழப்பும்கூட. நீதிக்கான குரல் ஒலிக்கும்... நியாயத்திற்கான பயணம் தொடரும்... கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர் Tamilmani Arumugam, Advocate. advocatetamilmani@gmail.com தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை