சீன்: விமர்சனம் - ‘ஹாட்ரிக்’ ஹிட் கொடுத்தாரா சூர்யா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
சீன்: விமர்சனம் - ‘ஹாட்ரிக்’ ஹிட் கொடுத்தாரா சூர்யா?

கரோனாவுக்கு பிந்தைய சில ஆண்டுகளாக துவண்டு போயிருந்த சூர்யா ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக் போல அடுத்தடுத்து ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய படங்கள் ஹிட் ஆகி உற்சாகம் கொடுத்தன. ‘ஆவேஷம்’ மலையாளப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சூர்யாவை வைத்து ஜித்து மாதவன் இயக்குகிறார் என்ற அறிவிப்பே ‘சீன்’ படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. அந்த எதிர்பார்ப்பை தக்க வைத்து சூர்யா ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தாரா என்று பார்க்கலாம். டிஎஸ்பி இன்பராஜ் (சூர்யா) ஒரு கூர்மையான, கண்டிப்பான போலீஸ் அதிகாரி. எப்படியாவது முன்கூட்டியே ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு முடித்துவைத்த ஒரு வழக்கு திடீரென மீண்டும் தலைதூக்கி, அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. தொடர்ச்சியான கொலைகள் ஒரு புத்திசாலித்தனமான சீரியல் கொலையாளியை கைகாட்டுகின்றன. இதனால் வழக்கு விசாரணைக்குள் மீண்டும் தள்ளப்படும் இன்பராஜின் வாழ்க்கைக்குள் உதவியாளராக வருகிறார் மாயா (நஸ்ரியா). ஒருபுறம் சீரியல் கில்லர் தரும் டென்ஷனையும், இன்னொருபுறம் டார்க் காமெடியையும் கச்சிதமாக சமன் செய்யும் ஒரு கிரைம் த்ரில்லராக படம் விரிகிறது. தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் மிஸ் செய்த சூர்யாவை மீட்டெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் ஜித்து மாதவன். ’பிதாமகன்’, ‘அயன்’, ‘ஆதவன்’ போன்ற படங்களில் இருந்த கலகலப்பான, ஃப்ரெஷ் ஆன சூர்யாவை இந்த படத்தில் பார்க்கமுடிகிறது. சூர்யா வரும் ஆரம்ப காட்சிகளை இயக்குநர் கையாண்ட விதமும், பின்னர் ஒரு ட்விஸ்ட்டின் மூலம் அவற்றை ஜஸ்டிஃபை செய்திருப்பதும் புத்திசாலித்தனமானது. படம் தொடங்கியதுமே எந்தவித தொய்வும் இன்றி அடுத்தடுத்த காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக முதல் காட்சியிலேயே வில்லன் நஸ்லெனின் புத்திகூர்மையை பார்ப்பவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. லால் - சூர்யா இடையிலான காட்சிகள் கலகலப்புக்கு உத்தரவாதம் தருகின்றன. சிறையில் இருக்கும் ஒரு கேமியோ கதாபாத்திரத்திடம் லால் விசாரணை நடத்தும் காட்சி, அதே கதாபாத்திரத்திடம் பின்னர் சூர்யா விசாரணை நடத்த முயல்வதும், சூர்யாவை பற்றிய ஓர் உண்மையை அந்த கதாபாத்திரம் போட்டு உடைக்கும் காட்சிகள் எல்லாம் ப்ளாஸ்ட் ரகம். மலையாள சினிமாக்களுக்கு தமிழ் சினிமா மீதுள்ள காதலை சொல்லும் விதமாக, படத்தில் வரும் ஒரு முக்கிய காட்சி ரசிக்க வைக்கிறது. நடிகராக நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவிடம் இறுக்கமில்லாத ஓர் ‘இலகுவான’ தன்மையை பார்க்க முடிகிறது. அதற்கான காட்சிகள் பார்வையாளர்களும் உணரும் வண்ணம் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. தீவிரமான நடிப்பால் மட்டுமே படத்தை உயர்த்திவிட வேண்டும் என்று மெனக்கெடாமல், கதாபாத்திரத்துக்குள் முழுமையாக ஐக்கியமாகி இயக்குநரின் பார்வையை நம்பி மட்டுமே பயணித்துள்ளார் சூர்யா. எந்தவொரு இடத்திலும் தனது நடிப்பை அவர் முன்னிறுத்த முயலவில்லை; அதனாலேயே அவரது கதாபாத்திரத்துடன் பார்வையாளர்களால் எளிதில் ஒன்றிவிட முடிகிறது. ‘பிரேமலு’ படத்தில் சாக்லேட் பாய் போல வந்த நஸ்லெனின் அடுத்தடுத்த பட தேர்வுகள் வியக்க வைக்கின்றன. ஒரே போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், ஆடியன்ஸ் விரும்ப மாட்டார்கள் என்ற சப்பை காரணங்களை சொல்லாமல் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை தைரியமாக மேற்கொள்கிறார். இதுவும் அவருடைய திரை வாழ்வில் நிச்சயம் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சூர்யாவுக்கு இணையாக தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் நஸ்ரியா. ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது மெனக்கெடல் தெரிகிறது. லால், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கியுள்ளனர். சுஷின் ஷியாமின் பின்னணி இசை படம் முழுக்க ஒருவித புத்துணர்வைத் தந்துள்ளது. ’ஆவேஷம்’ போலவே அவரது இசை படத்தை தாங்கிப் பிடிக்கிறது. வினித் அகஸ்டியனின் கேமரா கோணங்களும், அஜ்மல் சாபுவின் எடிட்டிங்கும் படத்தின் தொய்வுகளை சரிசெய்கின்றன. ‘கஜினி’ படத்தின் காட்சி, இளையராஜாவின் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல் இரண்டையும் இணைத்து ஜித்து மாதவன் உருவாக்கியிருக்கும் ஒரு காட்சி படத்தின் முக்கிய ஹைலைட் என்று சொல்லலாம். சூர்யாவின் நாஸ்டால்ஜியாவை வெறும் சம்பிரதாயமான ஃபேன் சர்வீஸ் ஆக பயன்படுத்தாமல், கதையின் ஓட்டத்தோடு அமைத்தது ஆறுதல். ‘ஆவேஷம்’ அளவுக்கு இது நேர்த்தியான, விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம் என்று சொல்லிவிட முடியாது. எனினும் பல சுவாரஸ்யமான ஐடியாக்கள் படம் முழுக்க அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பாதியில் சில இடங்களில் படத்தின் வேகம் மந்தமாவதை உணர முடிகிறது. விசாரணைப் பாதையிலிருந்து விலகி சில காமெடி டிராக்குகள் கதை ஓட்டத்தை மெதுவாக்குகின்றன. சூர்யாவுக்கும் நஸ்ரியாவுக்கும் இடையேயான காதல் கூட சற்று அவசரமாக சொல்லப்பட்டதாக தோன்றுகிறது. எனினும், படத்தின் இறுதி காட்சிகள் இதுபோன்ற சிறிய குறைகளை எல்லாம் ஈடுசெய்துவிடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத, இயல்பான இந்த சூர்யாவை மீண்டும் திரையில் பார்ப்பதே அவரது ரசிகர்களுக்கு புத்துணர்வை தரும் என்பதில் சந்தேகம் இல்லை . ‘சீன்’ ஒரு மாஸ்டர்பீஸ் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், தமிழ் சினிமாவில் அரிதாக நிகழும் சில அசலான முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று நிச்சயம் கூறலாம்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை