ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட குழுவினர் டேராடூன்: பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் இறந்துவிட்டதாக உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீக் ஜெயின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வாயிலாக இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர் பத்ரிநாத் கோயிலில் இருந்து டேராடூனில் உள்ள சகஸ்தரதாரா ஹெலிபேடுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சமோலி மாவட்டத்தின் ஹாத்தி பர்வதம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், விமான மற்றும் ஐந்து பயணிகள் என மொத்தம் ஆறு பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க, போலீஸார், மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் ஆகியவை அடங்கிய இரண்டு குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டரை டெல்லியைச் சேர்ந்த கேப்டன் ஹிமான்ஷு சபர்வால் இயக்கியுள்ளார். இதில், பிரதாபா, அருண், சங்கர் கவுடா, சுதிர் கே, ஹெச்.எஸ்.நடராஜா ஆகிய பயணிகள் பயணித்துள்ளனர். பயணிகள் அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து - பயணித்த 6 பேரும் உயிரிழப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗