பிரேஸிலில் நாடாளுமன்றமே வலதுசாரி கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இடதுசாரி தலைவரான லூலாவுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. லூலா டா சில்வா - AP தென் அமெரிக்க நாடான பிரேஸில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். முதல் சுற்று வாக்குப் பதிவில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத நிலையில், இறுதிச் சுற்று வாக்குப் பதிவில் லூலா டா சில்வா 51.8 சதவீத வாக்குகள் (6.43 கோடி) பெற்று வென்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆசி பெற்ற வலதுசாரி தலைவரான முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகன் ஃபிளாவியோ போல்சனாரோ சுமார் 44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். தேர்தல் முடிவுகளை ஃபிளாவியோ ஏற்க மறுத்ததும், மனைவி, இரு மகள்களுடன் அமெரிக்காவில் தஞ்சமடைந்திருப்பதும் எதிர்பாராத அரசியல் திருப்பங்கள். முதல் சுற்று வாக்குப் பதிவில் ஃபிளாவியோ போல்சனாரோ 22 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இறுதிச் சுற்றில் லூலா டா சில்வா வியத்தகு வெற்றியைப் பதிவு செய்துள்ளார். பிரேஸிலில் 1985-இல் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, முதல் சுற்றில் இரண்டாமிடம் பிடித்த வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முதல் சுற்றில் வாக்களிக்காத சுமார் 30 லட்சம் பேர் இறுதிச் சுற்றில் வாக்களித்தனர். தென் அமெரிக்காவில் அமெரிக்காவின் தலையீடு பரவலாக அதிகரித்துவரும் சூழலில் பிரேஸில் தேர்தல் முடிவுகள் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. மெட்டா நிறுவனம் தனது ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக தளங்களில் லூலா ஆதரவு உள்ளடக்கத்தைவிட ஃபிளாவியோ போல்சானரோ ஆதரவு உள்ளடக்கத்துக்கு முன்னுரிமை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டும் இத்தேர்தலின் தீவிரத் தன்மையை அதிகரித்தன. லூலா டா சில்வா ஆட்சியில் விலைவாசி உயர்வு, பாதுகாப்பு குறைபாடு, குற்றங்கள் அதிகரிப்பு போன்றவற்றை முன்வைத்து ஃபிளாவியோ பிரசாரம் மேற்கொண்டார். ஆனால், ஊழல், பண மோசடி, வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுகளில் விசாரணையை எதிர்கொள்வதும், தீவிர டிரம்ப் ஆதரவு நடவடிக்கைகளும், பிரேஸில் மீதான அமெரிக்காவின் தலையீட்டை கண்டும் காணாமலும் இருந்ததும் ஃபிளாவியோவுக்குப் பின்னடைவாக அமைந்தன. வாழ்க்கைச் செலவினம் மற்றும் பாதுகாப்பு குறித்த மக்களின் கவலைகளுக்கு மத்தியில், தனது பிரசாரத்தை மாற்றியமைத்து இளைஞர்களின் வாக்குகளை ஈர்த்ததன் மூலம் லூலா டா சில்வா இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளார். வாரத்தில் ஆறு நாள்கள் வேலை முறையை நீக்கும் அரசியல் சாசன திருத்தத்தை லூலா அரசு கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி நாடாளுமன்ற செனட்டில் நிறைவேற்றியது. இந்த நடவடிக்கை தேர்தலில் லூலாவுக்கு பெரிதும் கைகொடுத்தது. வடகிழக்கு பிரேஸிலில் வறுமையான குடும்பத்தில் பிறந்து, உலோகத் தொழிற்சாலையில் வேலை செய்தவர் லூலா. 1970-களில் தொழிற்சங்கத் தலைவராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். தொழிலாளர் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான லூலா, மூன்று முறை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து 2003-இல் முதல்முறையாக அதிபரானார். அதன்பிறகு தொடர்ச்சியாக இருமுறை, 2022-இல் மூன்றாவது முறை வென்ற லூலா, இப்போது நான்காவது முறையாக வென்றிருக்கிறார். மீண்டும் அதிபராகியுள்ள லூலா டா சில்வா கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். நாட்டின் பொதுக் கடன், லூலாவின் தற்போதைய பதவிக் காலத்தில் 10 சதவீதப் புள்ளிகளுக்கும் மேலாக அதிகரித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இது கடன் வாங்குவதற்கான செலவுகளை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பிரேஸிலின் மத்திய வங்கி உலகின் மிக உயர்ந்த வட்டி விகிதங்களில் ஒன்றை நடைமுறையில் வைத்திருக்கிறது. லூலா முன் உள்ள மற்றொரு சவால் நாட்டில் பரவியிருக்கும் வன்முறை கலாசாரம். பல்வேறு நகரங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குற்றக் குழுக்களையும், ஆயுதக் குழுக்களையும் ஒடுக்கும் கட்டாயத்தில் உள்ளார் லூலா. அத்துடன் கொடூரமான குற்றங்களுக்கான குற்றப் பொறுப்பு வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைப்பதை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். அதற்கான சட்ட நடவடிக்கைகளை அவர் எடுத்தாக வேண்டும். அமெரிக்காவின் தலையீட்டுக்கு மத்தியில் பிரேஸிலின் இறையாண்மையைப் பாதுகாப்பதாக உறுதியளித்து தேர்தலில் லூலா பிரசாரம் மேற்கொண்டார். வெற்றிக்குப் பின்னர் ஆற்றிய உரையிலும், பிரேஸில் யாருடைய கொல்லைப்புறமாகவும் இருக்க ஒப்புக்கொள்ளாது என அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார். பிரேஸில் மீது அதிக வரிகளை டிரம்ப் விதித்துள்ள நிலையில், அமெரிக்க எதிர்ப்பை மட்டுப்படுத்தாமல், அதேவேளையில் அமெரிக்காவுடனான உறவுகளையும் லூலா நிர்வகிக்க வேண்டியிருக்கும். பிரேஸில் நாடாளுமன்ற கீழவையில் போல்சானரோவின் லிபரல் கட்சி மொத்தம் உள்ள 513 இடங்களில் 121 இடங்களுடன் தனிப் பெரும் கட்சியாக உள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்தால் சுமார் 250 இடங்களை வலதுசாரி கூட்டணி வைத்திருக்கிறது. அதிபர் லூலாவின் தொழிலாளர் கட்சிக்கு கீழவையில் 70 உறுப்பினர்கள் உள்ளனர். மேலவையில் மொத்தம் உள்ள 81 இடங்களில் கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் சேர்த்து லிபரல் கட்சிக்கு 45 இடங்கள் உள்ளன. மொத்தத்தில் நாடாளுமன்றமே வலதுசாரி கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இடதுசாரி தலைவரான லூலாவுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும். திருக்குறள் (எண் 611) அதிகாரம்: ஆள்வினை உடைமை தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெற்றியும் சவால்களும்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗