பட மூலாதாரம், Getty Images சென்னை போரூரில் தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதோ மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? இதற்கான காரணம் என்ன? இந்த இறப்புகள் அனைத்தும் ஹார்ட் அட்டாக் தானா? இதுபோன்ற சம்பவங்களில், ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்று மக்கள் நம்புகின்றனர் எனக் கூறும் இதய மருத்துவர் பாலமுருகன், அனைத்து திடீர் இருதய மரணங்களும் மாரடைப்பினால் ஏற்படுகின்றன என்று நினைப்பது தவறான நம்பிக்கை என்கிறார். மாரடைப்பு மற்றும் இருதய செயலிழப்பு ஆகிய இரண்டு நிலைக்கும் மாரடைப்பு என்னும் சொல்லே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை இரண்டும் ஒன்றல்ல என்கிறார் அவர். ''மாரடைப்பு என்பது, இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தின் தசைக்குச் சரியாக ரத்தம் சென்று சேராததால் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலும், அவர் சுயநினைவுடன் இருக்கலாம், பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்சுவலி போன்ற பல்வேறு அறிகுறிகளும் இருக்கும். அதுவே இதய செயலிழப்பு என்பது திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வாகும். இந்த நிலையில் இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடுகிறது. இதை ஒரு இறுதிநிலை நிகழ்வு என்று கூறலாம். இதயம் இயங்குவதற்கு மின் அமைப்பு போன்ற ஒரு செயல்பாடு இருக்கும். அந்த மின் அமைப்பில் திடீரென பிரச்னை ஏற்படும்போது இதயத்தின் செயல்பாடு முழுதாக நின்றுவிடுகிறது. இந்த நிலைதான் இதய செயலிழப்பு. அத்தகைய நிலையில், ஒரு சில நொடிகளிலேயே பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழந்துவிடுகிறார்.'' என்கிறார் பாலமுருகன் பட மூலாதாரம், Getty Images இந்தத் திடீர் இதய செயலிழப்புக்கு வயது வரம்பு கிடையாது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு திடீர் இருதய மரணத்துக்கான காரணம் இது பெரும்பாலும் மரபணு சார்ந்த காரணங்களால் ஏற்படுகிறது. மரபணு சார்ந்த இதயத் தசைப் பிரச்னைகளான ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனப்படும் இதயத் தசைப் பிரச்னை அல்லது ARVC (Arrhythmogenic Right Ventricular Dysplasia) எனப்படும் இதயத் தசை பிரச்னைகள் காரணங்களாக இருக்கலாம். அல்லது, இதயம் துடிப்பதற்குத் தேவையான மின் அமைப்பில் ஏதேனும் அசாதாரணங்கள் நிகழ்வதால் இருக்கலாம். இவை புருகடா சிண்ட்ரோம் (Brugada Syndrome), லாங் க்யூடி சிண்ட்ரோம் (Long QT Syndrome) என வகைப்படுத்தப்படுகின்றன என்கிறார் பாலமுருகன் இதைத் தவிர, பிறவியிலேயே இருதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் மாற்றுப் பாதைகள், அதாவது கொரோனரி அனாமலீஸ் (Coronary Anomalies) எனப்படும் பாதிப்புகளும் திடீர் மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் அவர் இதுபோன்ற திடீர் இதய மரணம் விளையாடும்போது சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு விளையாட்டோ அல்லது உடற்பயிற்சியோ காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படாலாம். ஆனால் உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டோ இதய நோயை உருவாக்காது என்கிறார் மருத்துவர் பாலமுருகன். "அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது விளையாடும்போது ஏற்கெனவே உடலுக்குள் மறைந்திருக்கும் இதய நோய் வெளிப்படுமே தவிர, அது இதய நோயை உருவாக்காது. நாம் உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது விளையாடும்போதோ நமது உடலில் அட்ரினலின் (Adrenaline) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நமது இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கிறது. இவ்வாறு இதயம் வேகமாகத் துடிக்கும்போது, இதயத் தசை அசாதாரணமாக இருந்தாலோ அல்லது இதயத்தின் மின் சுற்று அசாதாரணமாக இருந்தாலோ, அசாதாரண மின்சாரம் உருவாகி இருதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிட வாய்ப்புள்ளது", என்கிறார் மருத்துவர் பாலமுருகன். அதேபோல ஒருவருக்கு ரத்தக்குழாயில் அதிக அளவில் அடைப்புகள் இருந்தால், இதயம் வேகமாகத் துடிக்கும்போது இதயத்திற்குத் தேவையான அளவு ரத்தம் கிடைக்காமல், அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, திடீர் இருதய மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறுகிறார். அப்படியானால், அனைவரும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்போ அல்லது விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கு முன்போ இருதயத்தைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டுமா என்று கேட்டால், அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை தேவையில்லை என்கிறார் அவர். ''ஆனால், ஆபத்துக் காரணிகள் இருப்பவர்கள் பரிசோதிப்பது அவசியம். அதாவது இளம் வயதிலேயே குடும்பத்தில் திடீர் மரணம் ஏற்பட்ட வரலாறு இருப்பவர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு மரபணு சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்கள், அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது பேஸ்மேக்கர் (Pacemaker), ஐசிடி (ICD) எனப்படும் இருதய சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவர்கள் இதுபோன்ற தீவிரமான விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது'' என்கிறார் மருத்துவர். பட மூலாதாரம், Getty Images மிகவும் அடிப்படையான பரிசோதனைகளாக, இதயத்தின் அமைப்பு சார்ந்த நோய்களைக் கண்டறிவதற்குத் தேவையான ECG, எக்கோ கார்டியோகிராம் (Echocardiogram) மற்றும் அடிப்படை ரத்தப் பரிசோதனைகள், சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு ஆகியவற்றைச் பரிசோத்திப்பதால் முன்கூட்டியே இதய நோய் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் கண்டறியலாம் என்கிறார் மருத்துவர் பாலமுருகன். இதைத் தவிர, சில நபர்களுக்கு மட்டும் டிரெட்மில் பரிசோதனை (Treadmill Test) அல்லது இருதய MRI போன்ற மேம்பட்ட பரிசோதனைகள் தேவைப்படலாம் என்றும் அவர் கூறுகிறார். இந்தத் திடீர் மரணத்தைத் தடுப்பதற்காக கொரோனரி ஆஞ்சியோகிராம் (Coronary Angiogram) அனைவருக்கும் தேவை கிடையாது என்பதை மக்கள் தெரிந்துகொள்வது அவசியம் என்றும் மருத்துவர் பாலமுருகன் விளக்குகிறார். பட மூலாதாரம், Getty Images ''இதய நோய் இருப்பவர்களுக்கு இதுபோன்ற விளையாட்டுகளிலோ அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளும்போதோ சில அறிகுறிகள் தோன்றலாம். நெஞ்சு அழுத்தம், மூச்சுத்திணறல், மயக்கம் அல்லது தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்பட்டால், அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது. கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து, இதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்த பிறகே மீண்டும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் பாலமுருகன். உடற்பயிற்சி மேற்கொண்டுகொண்டிருக்கும்போது ஒருவருக்கு திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டும் பட்சத்தில் முதல் ஐந்து நிமிடங்கள் மிக முக்கியமானவை என்கிறார் மருத்துவர் பாலமுருகன். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், இதய செயலிழப்பு ஏற்பட்ட நபர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை 10 சதவீதம் குறைகிறது. உதாரணமாக, 10 நிமிடங்களுக்கு அந்த நபருக்கு எந்த முதலுதவியும் கிடைக்கவில்லை என்றால், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்கிறார் அவர். பட மூலாதாரம், Getty Images இதுபோன்று விளையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதோ ஒருவர் மயங்கி விழுந்துவிட்டால், அவரது முகத்தில் தண்ணீர் தெளிப்பதைவிட, அவர் பதிலளிக்கிறாரா என்பதை முதலில் பார்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் பாலமுருகன். "அவரது கன்னத்தில் தட்டி பார்க்க வேண்டும். அவரது பெயர் தெரிந்திருந்தால் பெயரைச் சொல்லியோ அல்லது ஏதாவது கூறியோ அழைத்துப் பார்க்க வேண்டும். அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை, மூச்சும் விடவில்லை என்றால், CPR எனப்படும் முதலுதவியை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதாவது, நெஞ்சின் நடுப்பகுதியில் ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல உடனடியாக அம்புலன்சுக்கு அழைத்து தகவல் கொடுக்க வேண்டும்", என்கிறார் அவர். இதுபோன்ற சம்பவம் ஒரு பொது இடத்தில் நடக்கிறது என்றால், அந்தப் பொது இடத்தில் AED எனப்படும் கருவி, அதாவது Automated External Defibrillator என்ற கருவி இருந்தால், அதைப் பயன்படுத்தலாம். அந்தக் கருவியைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் ஒரு மருத்துவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு சாதாரண மனிதரால் அந்தக் கருவியைப் பயன்படுத்த முடியும். எப்போது மின்னேற்றம் செய்ய வேண்டும், எப்போது அதிர்ச்சி மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை அந்தக் கருவியே வழங்கும். நெஞ்சின் மீது கருவியை வைத்து, அதிர்ச்சி மின்சாரம் வழங்குவதன் மூலம் இதயத்தின் செயல்பாட்டை மீண்டும் தொடங்கச் செய்ய முடியும். அதிர்ச்சி மின்சாரம் மூலம் சீராக்கக்கூடிய இதயத் துடிப்பு இருந்தால், அந்தக் கருவி நோயாளிக்கு உதவும்.அந்தக் கருவி கண்டறிந்து உங்களுக்கு வழிமுறைகளை வழங்கியவுடன், நீங்கள் அதிர்ச்சி மின்சாரத்தை வழங்கினால் மட்டும் போதும். அந்த நோயாளியின் உயிரைக் கண்டிப்பாகக் காப்பாற்ற முடியும்", என்கிறார் அவர். முதலில் மரபணு சார்ந்த இருதய நோய் இருக்கிறதா, இல்லையா என்பதையம் ஆபத்து காரணிகள் இருக்கின்றனவா என்பதையும் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் பாலமுருகன். இருதய நோய் ஏற்படுவதற்கான துணை நோய்களான நீரிழிவு நோய், சர்க்கரை நோய், அதிக ரத்தக் கொழுப்பு அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதய நோய்க்கான ஆபத்துக்கு காரணிகள் ஆகும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் இதய நோயை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான பழக்ககங்கள் என்கிறார் மருத்துவர் பாலமுருகன்.. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
விளையாடும்போது சிலர் ஏன் திடீரென உயிரிழக்கிறார்கள்? இதய மருத்துவர் பதிலளிக்கும் 8 கேள்வி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk