செய்தியாளர் : ஐடா அருட்செல்வி கோவை பீளமேட்டில் உள்ள மகளிர் கல்லூரியில் முன்னாள் காவல் அதிகாரிகள் பொது நல அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, ஐ.பி.எஸ். அதிகாரி திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு முன்னதாக அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு நிறைவு கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ”காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கும் நடைமுறை இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை” என்று தெரிவித்தார். மேலும், தவெக அரசு அமைந்த பிறகு, காவல்துறையினர் ஒரு வாரம் பணியாற்றிய பின்னர் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டதாகவும், ஆனால் அது தற்போது வரை காகிதத்தில் மட்டுமே இருப்பதாக காவல்துறையினர் தன்னிடம் கூறுவதாகவும் கார்த்தி தெரிவித்தார். காவல்துறையில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததால், அதிகாரிகளால் விடுமுறை எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது 10,000 காவல்துறையினர் புதிதாக நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், சமூக வலைதளங்களால் காவல்துறைக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதாக கார்த்தி குறிப்பிட்டார். இணையத்தில் ஒரு வழக்கு தொடர்பான தகவல் வெளியானவுடன், உடனடியாக அதைத் தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால், போதிய ஆதாரங்களை சேகரிக்காமல் அவசரமாக வழக்குகளை முடிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கார்த்தி வலியுறுத்தினார். காவல் நிலையங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் இருந்தாலும், பணிச்சுமை காரணமாக அவற்றைப் பயன்படுத்தக்கூட நேரமில்லை என்று காவல்துறையினர் கூறுவதாக தெரிவித்தார். எனவே, காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பது அரசுக்கும் மக்களுக்கும் முக்கியமான பொறுப்பு என்றும் நடிகர் கார்த்தி கேட்டுக்கொண்டார்.
'உடனடியாக நடவடிக்கை எடுங்க..' - விஜய் அரசை விமர்சித்த நடிகர் கார்த்தி?
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk