இந்திய சுதந்திரத்துக்குப் பின்னும், சவாரி இன மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறது செகந்திராபாத்தில் வசிக்கும் மாலிக் குடும்பம். இரண்டாவது தலைமுறையாக சிகன்ஜா மாலிக் (மோகன் பாபு), மூன்றாவது தலைமுறையாக அவரது மகன் விக்ரம் மாலிக் (ராகவ் ஜியுல்) என அடுத்தடுத்து இந்த அடக்குமுறை தொடர்கிறது. அந்த சவாரி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறார் சமக்கா (சோனாலி குல்கர்னி), ஆனாலும் எதுவும் மாறவில்லை. சமக்காவின் மகன் ஜடல் (நானி) வன்முறையால் இந்தச் சூழலை மாற்ற முடியும் என தன் போராட்டத்தைத் துவங்குகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே ‘The Paradise’. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை, அதிகாரத்தின் அடக்குமுறை, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என சில முக்கியமான சமூக விஷயங்களும் படத்தில் அழுத்தமாகப் பேசப்படுகின்றன. படத்தின் மிகப்பெரிய பலம் நானியின் நடிப்பு. ஜடல் கதாபாத்திரத்திற்காக அவர் ஏற்றிருக்கும் ரெட்ட ஜடை தோற்றம், உடல் மொழி, வழக்கமான நானியிலிருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது. எமோஷன், கோபம் என இரண்டு உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். ஹீரோயின் கயாடு, அம்மா ரோலில் சோனாலி குல்கர்னி, வில்லன் மோகன் பாபு என பிரபலமான முகங்கள் முக்கியப் பாத்திரங்களில் முடிந்த அளவு நல்ல நடிப்பைக் கொடுக்கிறார்கள். ஆக்ஷன் திரைப்படம் என்பதால், சண்டைக் காட்சிகளில் நானி காட்டும் தீவிரமும் உடல் உழைப்பும் கவனம் பெறுகின்றன. ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியையும் பிரம்மாண்டமாக உருவாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். தொழில்நுட்ப ரீதியாக அனிருத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன. ஆனால் பின்னணி இசையில் அவரது வழக்கமான தாக்கத்தை எதிர்பார்க்கும் அளவுக்கு தனித்துவமான ஸ்கோர் அமையவில்லை; பல இடங்களில் Generic-ஆகவே கடந்து செல்கிறது. சாய் கேமரா மற்றும் அவினாஷ் கலை இயக்கம் படத்தின் உலகத்தை நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவுகின்றன. பிரம்மாண்டமான காட்சியமைப்பும் படத்தின் முக்கியப் பலமாக இருக்கிறது. இந்தப் படத்தின் குறைகள் என்றால், எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், மிக வழக்கமான விதத்தில் எடுக்கப்பட்டிருப்பதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் – கொடூரமான வில்லன் – அவர்களுக்காகப் போராடும் ஹீரோ என்ற பழக்கமான கதைக்களத்திலேயே படம் பயணிப்பது புதுமையைக் குறைக்கிறது. குறிப்பாக, எந்த ஒரு விஷயத்திலும் தெளிவோ, அழுத்தமோ இல்லாதது மிகப்பெரிய பலவீனம். படத்தில் வில்லன் தனக்குப் பின் தன்னுடைய மகனை வாரிசாக நியமிக்கிறார், ஆனால் அதற்கு அவர் சொல்லும் காரணம் மிக செயற்கையாக இருக்கிறது. நானி - அவரது அம்மா இடையேயான பிரச்னை படத்தின் மிகப் பிரதானமான ஒன்று. ஆனால் அதைக் கையாண்ட விதமும் நமக்கு எந்த உணர்வையும் வழங்காமல் செல்கிறது. கயாடுவை வைத்துப் பேசப்படும் ஒரு விஷயமும் மிக மேம்போக்காகவே இருக்கிறது. வில்லனின் வர்மக்கலை சண்டை, ஹீரோவின் அம்மா ஆடும் தீச்சட்டி டான்ஸ், நாயை வைத்து வரும் ஸ்டன்ட்ஸ் எனப் படத்தில் வரக்கூடிய பல காட்சிகள் மீம் மெட்டீரியல் ரேஞ்சில்தான் இருக்கிறது. முதல் பாதியில் ஓரளவுக்கு இருக்கும் வேகம், இரண்டாம் பாதியில் பெரிதாகக் குறைகிறது. இதனால் படம் சொல்ல வரும் விஷயத்தின் தாக்கமும் குறைகிறது. மோகன் பாபுவின் அதிகார ஆசை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கனவு, அம்மா–மகன் உறவு எனப் பல்வேறு கோணங்கள் கதையில் இருந்தாலும், அவற்றில் எதுவுமே முழுமையாகவும் அழுத்தமாகவும் திரையில் சொல்லப்படவில்லை. மேலும், தொடர்ந்து இடம்பெறும் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்துகின்றன. மொத்தத்தில் நானியின் அர்ப்பணிப்பான நடிப்பு, மாஸான ஆக்ஷன் காட்சிகள், அனிருத்தின் பாடல்கள், பிரம்மாண்டமான மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் போன்றவை சிறப்பு என்றாலும், பழக்கமான கதைக்களமும், தடுமாறும் இரண்டாம் பாதியும், பல்வேறு கதைக் கருக்களை முழுமையாகக் கையாளாத திரைக்கதையும் படத்தின் தாக்கத்தை குறைக்கின்றன. கதை மற்றும் இரண்டாம் பாதியை இன்னும் சிறப்பாகி இருந்தால், ‘The Paradise’ ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும்.
நானியின் அதிரடி நடிப்பு, பிரம்மாண்ட ஆக்ஷன்.. ஆனால் தடுமாறும் பாரடைஸ் | The Paradise Review
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk