செய்தியாளர் - கார்த்திகேயன் ’மாரிதாஸ் Answers’ என்ற பெயரில் Youtube சேனல் நடத்தி வருபவர்தான் மாரிதாஸ். தீவிர வலதுசாரி ஆதரவாளரான இவர், அவ்வப்போது பெரும் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். கடந்த 2021-ஆம் ஆண்டில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது, ’அடுத்த காஷ்மீராக தமிழகம் மாறுகிறதா’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்டிருந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அப்போதைய திமுக அரசு, மாரிதாஸை கைது செய்திருந்தனர். தற்போதுள்ள, தமிழக வெற்றிக் கழக அரசு மீது அவ்வப்போது பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான, குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார். இப்படியான சூழ்நிலையில், Youtuber மாரிதாஸ்-க்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான நடவடிக்கையை, அமைச்சர் பிரபு எடுத்துள்ளார். அதாவது, காரைக்குடி தொகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.பிரபு, தமிழக அமைச்சரவையில், கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர், Youtuber மாரிதாஸ்-க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தன்னை குறித்து அவதூறு பரப்பு வகையிலான கருத்துகளையும், ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களையும், மாரிதாஸ் பரப்பி வருகிறார். எனவே, அவர் 1 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் டி.கே.பிரபு குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து, விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில், மாரிதாஸ் மட்டுமின்றி, அமெரிக்காவைச் சேர்ந்த X நிறுவனமும், கூகுள் நிறுவனமும், Youtube நிறுவனமும், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்புகள் தொடர்பாக, இந்த நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Youtuber மாரிதாஸ்-க்கு சிக்கல்.. தவெக அமைச்சரின் அதிரடி.. நடந்தது என்ன?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk