பட மூலாதாரம், Getty Images நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், செயற்கை நுண்ணறிவு ஒரு வகையில் உங்களுக்கு நண்பனாகவும், மற்றொரு வகையில் எதிரியாகவும் மாறியுள்ளது. நேர்காணலுக்குத் தயாராகவும், குறிப்பிட்ட வேலைகளுக்கு ஏற்ப சுயவிவரக் குறிப்பைத் தயாரிக்கவும் ஏஐ உதவுகிறது. அதேவேளையில், மனிதவள அதிகாரிகள் உங்கள் திறன்களையும் சிறப்புத் தகுதிகளையும் மதிப்பிடுவதற்கு முன்பே, உங்கள் விண்ணப்பத்தை ஏஐ நிராகரிக்கவும் கூடும். செயற்கை நுண்ணறிவின் வருகை, வேலை தேடும் முறையையும் வேலைவாய்ப்பைப் பெறும் முறையையும் கணிசமாக மாற்றியுள்ளது என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஏஐ மாதிரிகள் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில், "அல்காரிதம் நமது விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமா?" என்பது கேள்வியல்ல. மாறாக, "அந்த அல்காரிதம் நமக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில் நம்மை எப்படித் தயார்படுத்திக் கொள்வது?" என்பதே முக்கியக் கேள்வியாக மாறியுள்ளது. கூகுள் மற்றும் லிங்க்ட்இன் போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு நிபுணராகப் பணியாற்றியவரும், தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்கி வருபவருமான அட்ரியானா கார்வஜால் பிபிசியிடம் பேசுகையில், "வேலைவாய்ப்புச் சந்தை இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான போட்டியாக மாறியுள்ளது" என்றார். "ஒரு வேலைக்கு சராசரியாக 250 பேர் விண்ணப்பிக்கின்றனர். அதுவே அந்த அறிவிப்பு லிங்க்ட்இனின் 'ஈஸி அப்ளை' (Easy Apply) வசதியுடன் வெளியிடப்பட்டால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சராசரியாக 800-க்கும் அதிகமாகிறது" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "இதனால் நிறுவனங்கள் ஒவ்வொரு சுயவிவரத்தையும் தனித்தனியாகப் பரிசீலிப்பது சாத்தியமற்றதாகிறது. 'ஈஸி அப்ளை' வசதி இருப்பதால், அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தூண்டப்படுகின்றனர். உண்மையில், லிங்க்ட்இன் நிமிடத்துக்கு சுமார் 11,000 விண்ணப்பங்களைச் செயல்முறைப்படுத்துகிறது. இது கடந்த ஆண்டைவிட 45% அதிகமாகும்." நீங்கள் புதிய வேலைக்கு மாற நினைப்பவராக இருந்தாலும் சரி, முதன்முறையாக வேலை தேடுபவராக இருந்தாலும் சரி, நிபுணர்கள் சுட்டிக்காட்டும் இந்த முக்கியமான மாற்றங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். பெருமளவிலான விண்ணப்பங்களை அதிவேகமாகவும் திறமையாகவும் மதிப்பீடு செய்ய நிறுவனங்களுக்கு உதவுவதன் மூலம், ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் தேர்வு முறையைச் செயற்கை நுண்ணறிவு மாற்றி வருகிறது. இதன் மூலம் மனிதவளத் துறைகள் திறமையான நபர்களை விரைவாகக் கண்டறிந்து, ஆட்சேர்ப்புக்கான கால அளவைக் கணிசமாகக் குறைக்க முடிகிறது. End of அதிகம் படிக்கப்பட்டது அதேவேளையில், இந்தத் தானியங்கி வடிகட்டல் முறையைக் கடப்பதற்காக, விண்ணப்பதாரர்களும் தங்கள் சுயவிவரக் குறிப்புகளில் பொருத்தமான வடிவமைப்பையும் முக்கிய வார்த்தைகளையும் சேர்க்க ஏஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட வடிகட்டலைக் கடந்து, நேர்காணல் வாய்ப்பைப் பெறுவதே இதன் முதன்மை நோக்கமாகும். விண்ணப்பப் படிவத்தில் உள்ள கேள்விகளை ஏஐ கருவியில் பதிவிட்டு, அது வழங்கும் பதில்களை நகலெடுத்துப் பயன்படுத்த முடிவதால், குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வேலைகளுக்கு விண்ணப்பிப்பதும் சாத்தியமாகியுள்ளது. பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு செயற்கை நுண்ணறிவைப் பற்றி நன்கு தெரிந்த விண்ணப்பதாரர்கள் 'ஏஜென்டிக் சிஸ்டம்ஸ்' (முகவர் அமைப்புகள்) எனப்படும் தன்னிச்சையாக இயங்கும் ஏஐ ஏஜென்ட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த வகையான ஏஐ தொழில் நுட்பம், வெறுமனே கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு நின்றுவிடாமல், நமது அமைப்புகளுக்கு அனுமதி வழங்கிவிட்டால் தன்னிச்சையாகவே முடிவெடுத்துச் செயல்படும் திறன் கொண்டது. இந்த ஏஐ ஏஜென்ட் அமைப்புகள், மனிதர்களின் நேரடி மேற்பார்வை எதுவுமின்றித் தாமே பொருத்தமான வேலைவாய்ப்புகளைத் தேடுகின்றன; படிவங்களை நிரப்புகின்றன; தானாகவே வேலைகளுக்கும் விண்ணப்பிக்கின்றன. ஆனால், இதனால் ஒரு எதிர்பாராத பின்னடைவு ஏற்படுவதாக முதலாளிகளும் நிறுவனங்களும் எச்சரிக்கின்றனர்: அதாவது, பெரும்பாலான விண்ணப்பங்கள் ஒரே மாதிரியான தோற்றத்தையும் தொனியையும் கொண்டுள்ளன. "இதன் விளைவாக, இந்த ஆட்சேர்ப்பு அமைப்பே சீர்குலைந்து போகிறது. போலி விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நிறுவனங்களின் வடிகட்டும் தேவையும் அதிகரிக்கிறது. எவ்வளவு அதிகமாக வடிகட்டப்படுகிறதோ, அவ்வளவு அதிகமான விண்ணப்பதாரர்கள் பாதியிலேயே நிராகரிக்கப்படுகிறார்கள்; இது விண்ணப்பதாரர்களிடையே விரக்தியையும் ஏமாற்றத்தையும் மேலும் கூட்டுகிறது" என்கிறார் கார்வஜால். "லட்சக்கணக்கான விண்ணப்பங்களுக்கு மத்தியில் தனித்து நிற்கும் ஒரு சுயவிவரக் குறிப்பு என்பது, முந்தைய வேலையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை வெறும் பட்டியலாக விவரிப்பதாக மட்டும் இருக்கக் கூடாது; அந்த வேலையை நீங்கள் எவ்வளவு திறம்படச் செய்தீர்கள் என்பதையும், உங்களின் சாதனைகளின் மதிப்பையும் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும்" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவர்கள் ஆரம்பநிலையில் செய்து வந்த தகவல்களைச் சேகரிப்பது, எக்செல் அட்டவணைகளில் உள்ள தரவுகளைச் சரிபார்ப்பது, தொடக்கநிலை அறிக்கைகளைத் தயாரிப்பது போன்ற பணிகளை இப்போது செயற்கை நுண்ணறிவால் செய்ய முடிகிறது. இதனால், புதிய பட்டதாரிகளுக்கு முதல் வேலை கிடைப்பது மிகவும் கடினமாகியுள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். "இங்குதான் பலர், 'அப்படியென்றால் நான் பல்கலைக்கழகத்தில் படித்தது எதற்காக?' என்று கேட்கிறார்கள். படிப்பு என்பது உங்களுக்கு ஒரு அடிப்படைக் கண்ணோட்டத்தை மட்டுமே தரும். தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கும் ஒருவர், தனது உண்மையான மதிப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று திறமையாளர் தேடல் நிபுணரும், திறன் மேலாண்மை ஆலோசனை நிறுவனமான 'டேலண்ட் 4 பிராசஸ்' நிறுவனத்தின் தலைவருமான கிளாடியா கார்டனாஸ் விளக்குகிறார். இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய சுயவிவரக் குறிப்பையோ அல்லது வெறும் பல்கலைக்கழகப் பட்டத்தையோ மட்டுமே வைத்துக்கொண்டு தங்களைத் தனித்துக் காட்ட முடியாது என்று அவர் கூறுகிறார். மாறாக, "தன்னார்வப் பணி, குடும்பத் தொழில் அல்லது விடுமுறையின்போது செய்த தற்காலிக வேலைகள் போன்ற தங்கள் கல்விக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்" என்கிறார். ஆட்சேர்ப்பின்போது செயற்கை நுண்ணறிவு கணக்கில் கொள்ளும் மற்றொரு முக்கிய அம்சமும் இதுதான். பட மூலாதாரம், Getty Images "ஒரு சாதாரணமான சுயவிவரக் குறிப்பை உருவாக்கத் தொடங்குவதற்கு முன் சிந்தியுங்கள்: 'எனது முந்தைய பணியில் நான் ஒரு சிறந்த ஊழியராக இருந்தேன் என்பதற்கு என்ன ஆதாரம்? அதை எண்களாலும் உதாரணங்களாலும் நான் எப்படி நிரூபிக்க முடியும்?'" என்று கார்வஜால் கூறுகிறார். "இதை நீங்கள் தெளிவுபடுத்திய பிறகு, உங்களின் சாதனைகளைத் தெளிவாக விளக்குவதற்கு பெரிய அளவிலான முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சூத்திரம் உள்ளது; எனக்கு மிகவும் பிடித்த அந்தச் சூத்திரம்: '[Z] செய்ததன் மூலம், [Y] அளவுகோலின் அடிப்படையில், [X] சாதனையை அடைந்தேன்' என்பதாகும்" என்று அவர் விளக்குகிறார். "'நான் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்தேன்' என்று சொல்வதற்குப் பதிலாக, 'புதிய மென்பொருள் வசதிகளை நிறுவனங்களின் வணிக இலக்குகளோடு இணைத்ததன் மூலம், 15 நிறுவனங்களின் வருவாயை ஒரு காலாண்டுக்கு 10% என்ற அளவில் உயர்த்தினேன்' என குறிப்பிடலாம்" என அவர் பரிந்துரைக்கிறார். பல நிறுவனங்கள் ஆரம்பகட்ட நேர்காணல்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாட்களைப் பயன்படுத்துகின்றன. இது விண்ணப்பதாரருக்குப் பாதகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால், கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், அந்த நேர்காணல் முறைக்கும் அவர் தயாராக இருக்க வேண்டும். அந்த நேர்காணல் ஒரு தொழில்நுட்பப் பிரச்னையைத் தீர்ப்பதாக இருக்குமா அல்லது ஒரு விளக்கக்காட்சியை அளிக்க வேண்டுமா என்பதை அறிந்து அந்தத் தருணத்தை அடைவது முக்கியம். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரையன் ஜபாரியன் மற்றும் நெதர்லாந்தின் ராட்டர்டாம் எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூகா ஹென்கெல் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்கள், வேலைகளுக்கு உண்மையாக விண்ணப்பிக்கும் 70,000 விண்ணப்பதாரர்களிடம் ஒரு கள ஆய்வை மேற்கொண்டனர். ஒவ்வொரு விண்ணப்பதாரரும், மனித ஆட்சேர்ப்பாளர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட குரல் முகவர்களால் நேர்காணல் செய்யப்படுவதற்காகச் சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், மனித நிபுணர்கள் அந்த நேர்காணல்களை ஆய்வு செய்து, பணி நியமன முடிவுகளை எடுத்தனர். பட மூலாதாரம், Getty Images இந்த ஆய்வில், செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்களால் நேர்காணல் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு சலுகை கிடைப்பதற்கான வாய்ப்பு 12% அதிகமாக இருந்தது என்பது தெரியவந்தது. நேர்காணல்களின் உரையாடல்களைப் பரிசீலித்தபோது, ஏஐ-யின் நேர்காணல் கேள்விகள் மிகவும் கட்டமைக்கப்பட்டதாகவும், சீரானதாகவும், அதே நேரத்தில் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன என்பது தெரியவந்தது. இது பணி நியமனத்திற்குத் தேவையான முக்கியத் தகவல்களை அதிகம் திரட்ட உதவியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். யார் நேர்காணல் செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டபோது, 78% விண்ணப்பதாரர்கள் ஏஐ பாட் மூலம் நேர்காணல் செய்யப்படுவதையே விரும்பினர். செயற்கை நுண்ணறிவு வடிகட்டிகளைக் கடந்து மற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து தனித்துத் தெரிய, நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் உங்களைப் பதவிக்குப் பரிந்துரைப்பது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். "நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரிபவர்களை லிங்க்ட்இனில் தேட நேரத்தைச் செலவிடுங்கள். அறிமுகமில்லாத நபர்களுக்கு நேரடியாகச் செய்தி அனுப்பி, உங்கள் சுயவிவரத்தையும் அந்தப் பணியில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் சுருக்கமாக விளக்கி, உங்களைப் பரிந்துரைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுங்கள்" என்கிறார் கார்வஜால். "இது சற்று சங்கடமாக இருப்பதால் பலர் இந்தக் கட்டத்தைத் தவிர்த்துவிடுகிறார்கள், ஆனால் உங்கள் சுயவிவரம் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய, உங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு ஊழியர் இருப்பதே சிறந்த வழியாகும். ஒரு வேலையைத் திறம்படச் செய்வதற்கு 'கடினத் திறன்கள்' எனப்படும் தொழில்நுட்ப அறிவும், நீங்கள் சார்ந்த துறை பற்றிய தேர்ச்சியும் தேவைப்படுகின்றன. ஆனால், தொடர்ந்து மாறிவரும் வேலைவாய்ப்புச் சந்தையில், அதிகம் வெளிப்படையாகப் பேசப்படாத 'மென்திறன்கள்' அதற்கு இணையான அல்லது அதைவிடக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறக்கூடும். உதாரணத்திற்கு, ஒரு திறமையான தலைவரையோ ஒரு நல்ல குழு உறுப்பினரையோ உருவாக்கும் தனிப்பட்ட குணாதிசயங்களும் நடத்தைகளுமே இந்த மென்திறன்கள் ஆகும். பன்முகத்தன்மையும் வெற்றியும் நிறைந்த குழுக்களை உருவாக்கும் போது, கண்ணுக்குத் தெரியாத இந்தத் திறன்களின் முக்கியத்துவத்தை நிறுவனங்கள் உணரத் தொடங்கியுள்ளன. ஏஐ வடிகட்டலிலும் இத்திறன்களை மதிப்பிடும் அம்சங்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ள போதிலும், தற்போதைக்கு மனிதவள அதிகாரிகளே இத்திறன்களைப் பெருமளவில் மதிப்பீடு செய்கின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய அறிக்கை ஒன்று, தொழில்நுட்பத் திறன்களுக்கு இணையாக மென்திறன்களும், பன்முகத் திறன்களும் சமமாக மதிக்கப்படுவதாகவும், பணியாளர் தேர்வில் அவை முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கிறது. சக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் திறம்படத் தொடர்புகொள்வதற்குத் திறமையும் உணர்ச்சிசார் நுண்ணறிவும் தேவைப்படுகின்றன. பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன், குழுப்பணி மற்றும் கருணை ஆகியவையும் இதே வரையறைக்குள் அடங்கும் திறன்களாகும். பாம்பியூ ஃபாப்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான கிம்பர்லி சியுங் கூலார்ட், ஜார்ஜ் ரோட்ரிக்ஸ்-மெனெஸ் மற்றும் ஜோசப் மரியா கரோஸ் அர்மையோனஸ் ஆகியோர் ஆள்சேர்ப்பு மற்றும் திறமையாளர்களை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள 14 மனிதவளத் துறை நிபுணர்களை நேர்காணல் செய்தனர். பட மூலாதாரம், Getty Images "பெரும்பாலும், சான்றிதழ்கள் அல்லது நிரலாக்கப் தேர்வில் பெறும் நல்ல மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, தொழில்நுட்பத் திறன்களின் கீழ் விண்ணப்பதாரர்களின் முதற்கட்டத் தேர்வு நடத்தப்படுகிறது" என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. "அதன்பிறகு, நேர்காணலின் போது வெளிப்படும் மென்திறன்கள் மற்றும் ஆளுமைப் பண்புகளின் அடிப்படையில், இந்தத் தகுதியான குழுவிலிருந்து மிகவும் பொருத்தமான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்." வேலை விவரம், சம்பளம் அல்லது வேலை நேரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நிறுவனத்தின் கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விண்ணப்பதாரர்களையும் கண்டறிய நிறுவனங்கள் அதிகம் முயற்சிக்கின்றன. ஆட்சேர்ப்புச் செயல்பாட்டின்போது இத்தகைய மதிப்புகளைக் கொண்டவர்களை அடையாளம் கண்டு வடிகட்ட செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதன் காரணமாகவே, ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், ஒரே மாதிரியான பணிக்கு முற்றிலும் வேறுபட்ட முறைகளில் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய முடியும். பல நிறுவனங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் அல்லது செயலிகள் மூலம் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். "நாம் ஒரு வேலைவாய்ப்புத் தளத்திற்குச் சென்றால், அங்கு 5 கோடி வேலை விளம்பரங்கள் இருக்கும்; ஒவ்வொன்றிற்கும் 300 பேர் விண்ணப்பிப்பார்கள். ஆனால், அவர்களில் பலர் அந்த வேலைக்குப் பொருத்தமில்லாதவர்களாகவே இருக்கக்கூடும். இதனால் இது அனைவருக்கும் மிகப்பெரிய நேர விரயமாக முடிகிறது" என்று பார்சிலோனாவைச் சேர்ந்த திறமையாளர்கள் ஈர்ப்புத் துறை ஆலோசகரும் பயிற்சியாளருமான டோனி கிமேனோ சோலன்ஸ் பிபிசியிடம் விளக்கினார். பட மூலாதாரம், Getty Images கிமேனோவைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பு, அந்த நிறுவனம் தங்களை ஏன் பணியமர்த்த வேண்டும், அல்லது தாங்கள் ஏன் அங்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது முக்கியம். அதேபோல், தாங்கள் நிறுவனத்துக்கு வழங்கக்கூடிய மதிப்பு என்ன என்பதையும் அவர்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். சுருக்கமாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிபுணர்களின் கூற்றுப்படி, பணியாளர் தேர்வில் செயற்கை நுண்ணறிவின் அதிகரித்து வரும் பங்கு, வேலை தேடுபவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, புதிய சவால்களை ஏற்படுத்துகிறது. எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியும் ஆதரவும் முக்கியமானதாகின்றன. "செயற்கை நுண்ணறிவைச் சுற்றி எப்போதும் பெரும் சத்தமும் குழப்பமும் நிலவுகிறது" என்று ஐ.நா.வின் வேலைவாய்ப்பு, திறன்கள் மற்றும் நிலையான நிறுவனங்கள் துறையின் இயக்குநர் சுக்தி தாஸ்குப்தா பிபிசியிடம் தெரிவித்தார். "இளைஞர்கள் மாற்றத்திற்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் வகையில், திறன் மேம்பாடு, வாழ்நாள் கற்றல் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் நாம் முதலீட்டை இரட்டிப்பாக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், இளைஞர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல், அவர்களுக்குப் பயனளிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
ஆள் சேர்ப்பில் ஏஐ தாக்கம்: வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk