பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வரும் டிடிபி என்ற பாகிஸ்தான் தாலிபான் அமைப்புக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு உதவி வருவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இதற்கு பதிலடி தரும் வகையில், இரு மாதங்களுக்கு முன்னர் டிடிபி அமைப்பின் கட்டமைப்புகளை தாக்குவதாக கூறி ஆப்கானிஸ்தானுக்கு உள்ளே சென்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் நிலைகள் மீது தாலிபான் அமைப்பும் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போர் தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து காபூல், கந்தகார் ஆகிய முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் விமானதாக்குதல் நடத்த, பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து தாலிபான்களும் தாக்குதல் நடத்தினர். இப்படி இந்த போர் சிறிய அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 20-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளான குனார் (Kunar) மற்றும் பக்திகா (Paktika) மாகாணங்கள் மீது திடீர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் 3 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு தலிபான் அரசின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் தங்கள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் தோல்விகளை மறைக்கவும் மக்களின் கவனத்தைத் திருப்பவும் ஆப்கானின் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்கு தகுந்த மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும், அதனை பாகிஸ்தானால் தாங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்கள் பதிலடியை பாகிஸ்தான் தாங்காது : தாலிபான் பகிரங்க எச்சரிக்கை.. மோதிக்கொள்ளும் பாக். - ஆப்கான்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk