பட மூலாதாரம், X/karthiksubbaraj இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் நடித்துள்ள டோரதி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 10வது திரைப்படமாக டோரதி அமைந்துள்ளது. சுப்பு என்கிற கதாபாத்திரத்தில் சனந்த்தும், கார்த்தி என்கிற கதாபாத்திரத்தில் ரிஷிகாந்தும் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் 'டோரதி' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்பட வெளியீட்டுக்கு முன்னதாகவே வெளியான 'கல்யாண விருந்து' மற்றும் 'முத்துமணி' பாடல்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றிருந்தன. டோரதி திரைப்படம் எப்படி உள்ளது? ஊடகங்களில் வந்துள்ள விமர்சனங்களைத் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 1980களில் செவப்பட்டி என்கிற ஊரில் கதை தொடங்குகிறது. சுப்பு மற்றும் கார்த்தி சிறு வயதில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். பெண்களே இல்லாத ஒரு குடும்பத்தில், ஆணாதிக்கம் கொண்ட ஆண்களுக்கு மத்தியில் சுப்பு வளர்ந்தார். அந்தக் குடும்பத்தை அவரது தந்தையான 'விசில்' வீரய்யா வழிநடத்துகிறார். வீரய்யா கதாபாத்திரத்தில் நடிகர் முத்துக்குமார் நடித்துள்ளார். மறுபுறம், தந்தை இல்லாத நிலையில் ஆணாதிக்கச் சமூகத்திடமிருந்து தன்னையும் தன் தாயையும் பாதுகாக்க, பயந்த சுபாவம் கொண்ட ஒரு சிறுவனாகக் கார்த்தி அறிமுகமாகிறார். நண்பர்களான இருவரும் ஒரு கட்டத்தில் பிரியவே சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் சூழல் அமைகிறது. கார்த்தி ஆத்திர குணம் கொண்ட ஒருவராகவும் சுப்பு அமைதியை விரும்பும் நபராகவும் பரிணமித்து நிற்கின்றனர். சுப்புவின் சகோதரர் மனைவியாக ஒரு மலையாளப் பெண்ணாக டோரதி (கீர்த்தி சுரேஷ்) அறிமுகமாகிறார். சுப்புவும் கார்த்தியும் மீண்டும் சந்தித்துக் கொண்டபோது என்ன நடந்தது? மாறுபட்ட வாழ்க்கைச் சூழலில் இருவரின் பயணங்களும் ஓரிடத்தில் சங்கமித்தபிறகு இறுதியில் என்ன ஆனது என்பதே மீதமுள்ள கதையாக உள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், X/Dhammamfilms பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு டோரதி திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இளையராஜாவின் இசை அதிகம் பேசப்படுகிறது. 'டோரதி' திரைப்படம் இதுவரை வெளியான கார்த்திக் சுப்பராஜின் படங்களிலேயே மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் தெரிவிக்கிறது. "திரைப்பட உருவாக்கத் தொழில்நுட்பத்தில் அவர் எப்போதும் சிறந்து விளங்கியிருந்தாலும், இதில் கதாசிரியராக அவர் வெளிப்படுத்தியுள்ள கட்டுப்பாடு இதற்கு முன் நாம் காணாத ஒன்றாகும்," என்றும் அந்த விமர்சனம் தெரிவிக்கிறது. டோரதியில், கார்த்திக் சுப்பராஜ் ஆணாதிக்க வன்முறை பற்றிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையை, ஒடுக்குமுறை, சாதி மற்றும் அடையாளம் குறித்த உருக்கமான மற்றும் தீவிரமான ஆய்வாக மாற்றியுள்ளதாக, தி இந்து விமர்சனம் கூறுகிறது. மேலும் அந்த விமர்சனத்தில், "ஒரு விதத்தில், 'டோரதி' திரைப்படம், வெளியாவதற்கு முன்பே நவீன தமிழ் சமூகத்தில் பால் புதுமையினர் மீதான வெறுப்பை அம்பலப்படுத்தியுள்ளது. கார்த்திக்கின் திரைக்கதைகளிலேயே மிகவும் செறிவாகவும் ஒருங்கிணைந்தும் எழுதப்பட்ட படைப்பு 'டோரதி'. சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகியவை எவ்வாறு ஒன்றோடொன்று பிணைந்துள்ளன என்பது குறித்த அவரது மிகவும் முற்போக்கான பார்வையும் இதில் வெளிப்படுகிறது." "கதாபாத்திரங்களை படிப்படியாக உருவாக்குவதன் மூலம், அதீத ஆண்மை நிறைந்த, பாலின அடையாளமும் பாலினப் பாகுபாடும் இயல்பானதாகக் கருதப்படும் ஒரு உலகில் ஒரு பெண்ணாக இருப்பதன் அனுபவத்தை கார்த்திக் சுப்பராஜின் திரைக்கதை வழங்குகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தினமணியில் வெளியான விமர்சனம், திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இப்படத்தை விவாத தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கிறது. "முதல்பாதி வித்தியாசமான கதைக்களத்தைக் காட்டிவிட்டு, இரண்டாம்பாதியில் முழுக்கவே வேறு ஒரு திசையை நோக்கி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அழைத்துச் செல்கிறார். ஊகமாக சில விஷயங்களை முன்பே கணித்தாலும் இறுதிக்காட்சியில் அதிர்ச்சியைத் தரும்படியான காட்சியை வைத்து விவாதமாக மாறியிருக்க வேண்டிய கதைக்கருவைச் சிக்கலானதாகவும் மாற்றிவிட்டார். ஆனால், டோரதி அந்த 'ஊர் வாயை' உடைக்க முற்பட்டாலும் திடீரென முளைக்கும் அந்தக் காதல் உணர்வு சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டதாக எஞ்சுகிறது," என்றும் தினமணி விமர்சனம் கூறுகிறது. பட மூலாதாரம், X/KarthikSubbaraj 2016-ஆம் ஆண்டில் வெளியான தனது 'இறைவி' திரைப்படத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படக்கூடிய இந்தப் படத்தில், கார்த்திக் சுப்பராஜ் மிகவும் முதிர்ச்சியான ஒரு படைப்பாளியாகத் தெரிவதாக 'தி இந்து' விமர்சனம் கூறுகிறது. "அவர் தனது கதாபாத்திரங்களை அவற்றின் இயல்பிலேயே இருக்கவும், தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கிறார். பெண்களாலும் புரூஸ் லீயைப் போலப் போராட முடியும் என்பதையும், ஆனால் ஒரு சண்டையிலிருந்து விலகிச் செல்வதிலும்கூட துணிச்சலும் அறிவும் இருக்கிறது என்பதையும் அவர் காட்டுகிறார்," என்று அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும் காட்சியமைப்பாகவும் டோரதியில் தனக்கென உரித்தான கோணத்தில் கார்த்திக் சுப்பராஜ் கதையைச் சொல்லியிருப்பதாக தினமணி விமர்சனம் கூறூகிறது. "திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ரிஷியும் சனந்தும் பேசிக்கொள்ளும் காட்சி, சாதிய மனநிலையை வெளிப்படையாகக் காட்டும் இடம் என வழக்கமான வணிக சினிமாவில் இருந்து கதைக்கு முக்கியத்துவமான இடங்களையும் கார்த்திக் சுப்பராஜ் நன்றாக எழுதியிருக்கிறார். அதேநேரம், போதாமைகள் கொண்டதாகவும் அவை இருக்கின்றன," என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி இந்து விமர்சனத்தில், "சாதி பற்றிக் கேட்கப்படும்போது ஒரு குழந்தை அளிக்கும் பதில் முதல், காவல்துறையினர் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களிடம் காட்டும் மென்மையான அணுகுமுறை வரை, இக்கதையின் உலகில் ஆணாதிக்கமும் சாதியமும் ஒன்றோடொன்று இயல்பாகவே இணைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. கார்த்தியை விட டோரதியிடம் ஏன் சுப்பு நெருக்கமாக இருக்க முடிகிறது என்பதற்கான காரணத்தையும் சாதியக் கண்ணோட்டமே விளக்குகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முடிவு பார்வையாளர்களின் வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடுப்பதாக அமையலாம் எனக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், "இருப்பினும், பாதுகாப்பான பாதையைத் தேர்ந்தெடுக்காமல், கதையை அதன் தர்க்கரீதியான மற்றும் சமரசமற்ற முடிவை நோக்கித் திறம்படக் கொண்டு சென்றதற்காகக் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டுக்குரியவர்." என்றும் தெரிவிக்கிறது. பட மூலாதாரம், X/DhammamFilms "நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களாக சாத்தியம் கொண்டவர்கள். எல்லா உணர்வுகளையும் நடிப்பால் கடத்திவிடுகிறார்கள். வசனங்களும் உடல்மொழியும்கூட கைகொடுப்பதால் காத்திரமான நாயகர்கள் என்கிற எண்ணத்தையும் தருகின்றன. நடிகை கீர்த்தி சுரேஷ் சிறிது நேரமே வந்தாலும் முக்கியமான திருப்புமுனையாக அமைகிறார். சிங்கிள் ஷாட் காட்சியொன்று அந்தப் பதற்றத்தைக் கடத்துகிறது," என்று தினமணி விமர்சனம் தெரிவிக்கிறது. நடிகர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் தெரிவிக்கிறது. "ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களின் அக மற்றும் புறப் போராட்டங்களை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தி, தங்கள் சினிமா வாழ்க்கையில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். முத்துக்குமாரின் நடிப்பு அமைதியாக அச்சுறுத்தும் விதத்தில் உள்ளது. பரபரப்பு நிறைந்த உலகில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜீவா சுப்பிரமணியன் ஆகியோரின் நெகிழ்ச்சியான நடிப்பு உணர்வுபூர்வமான அடித்தளத்தை வழங்குகின்றன," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், X/KarthikSubbaraj "இளையராஜாவின் அற்புதமான இசை, படத்தின் முதல் பாதியில் இடி முழக்கம் போலவும், பிற்பகுதியில் மென்மையான வருடல் போலவும் அமைந்து, கதைக்கும், பால்புதுமையினரின் (குயர்) வாழ்வு மற்றும் உறவுகள் குறித்த அதன் நுட்பமான அணுகுமுறைக்கும் கனத்தையும் உணர்வுப்பூர்வமான ஆழத்தையும் சேர்க்கிறது," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் தெரிவிக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒவ்வொரு பின்னணி இசையும் உணர்வுகளுக்குப் பெரிய பலத்தைக் கொடுப்பதாக தினமணி விமர்சனம் கூறுகிறது. "கல்யாண விருந்து, முத்துமணி பாடல்களைத் திரையில் கேட்கும்போது அதன் ஒலி துல்லியம் சிறப்பாக இருக்கிறது. வன்முறைக்கு, நட்புக்கு, காதலுக்கு என தனித்துவமான இசையைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். முக்கியமான இடத்தில் ராஜாவே பாடிய குரல் வருகிறது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடுக்கிறதா கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி'? - ஊடக விமர்சனம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk