வாய்ப்புகள் என்பவை வெறும் பரம்பரைச் சொத்துகளிலிருந்து கிடைப்பதாக இல்லாமல், மக்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொள்ளும் விஷயங்களிலிருந்து கிடைக்க வேண்டும் என்று சபீர் பாட்டியா கூறியுள்ளார். செய்தியாளர் - M.மீரா ஹாட்மெயில் நிறுவனத்தின் இணை நிறுவனர் சபீர் பாட்டியா, இந்தியாவில் பரம்பரை சொத்துகள் தொடர்பாக புதிய விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். இந்தியா உலக அளவில் மேலும் போட்டித்திறன் கொண்ட நாடாக மாற வேண்டுமெனில், 55% பரம்பரை வரி (Inheritance Tax) குறித்து பரிசீலிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஒருவர் பிறந்த குடும்பத்தின் சொத்துகளை மட்டும் நம்பாமல், தனது சொந்த திறமை மற்றும் உழைப்பின் மூலம் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே தனது கருத்தின் அடிப்படை என சபீர் பாட்டியா கூறியுள்ளார். இந்தியாவில் இதுபோன்ற வரி ஏற்கெனவே நடைமுறையில் இருந்து, 1985ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரது கருத்து மீண்டும் Inheritance Tax குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது X தளத்தில், தனிமனிதனாக ஒருவர் தான் உருவாக்கும் சாதனைகளால் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அவரது வம்சாவளி சொத்தால் சாதனை செய்து வாய்ப்புகள் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்தியா 55% பரம்பரை வரியை பரிசீலிக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார். If India wants to become a truly competitive nation, it should consider a 55% inheritance tax. Opportunity should come from what you build-not simply from what you inherit. பரம்பரை வரி (Inheritance Tax ) என்றால் என்ன? ஒருவர் உயிரிழந்த பிறகு, அவரது சொத்துகள் வாரிசுகளுக்கு மாற்றப்படும் போது விதிக்கப்படும் வரியே பரம்பரை வரி. உதாரணமாக, 100 ரூபாய் மதிப்புள்ள சொத்து வாரிசுகளுக்கு கிடைத்தால், 55% வரி அமல்படுத்தப்பட்டால் 55 ரூபாய் அரசுக்கு வரியாகவும், மீதமுள்ள 45 ரூபாய் குடும்பத்திற்கும் செல்லும். இந்தியாவில் Estate Duty Act, 1953 என்ற சட்டத்தின் கீழ் பரம்பரை வரி நடைமுறையில் இருந்தது. சொத்தின் மதிப்பு குறிப்பிட்ட வரம்பை மீறினால் மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டது. அப்போது ரூ.1.5 லட்சம் மதிப்பைத் தாண்டிய சொத்துகளுக்கு 7.5% முதல் அதிகபட்சமாக 85% வரை வரி வசூலிக்கப்பட்டது. வருமான மற்றும் சொத்து சமத்துவமின்மையை குறைப்பதே அந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. வரி வசூல் குறைவாக இருந்தது, நிர்வாக சிக்கல்கள் அதிகமாக இருந்தன, மேலும் சொத்துகளின் உண்மையான மதிப்பீட்டில் சவால்கள் இருந்தன என்று காரணங்கள் கூறப்பட்டு 1985ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு Estate Duty சட்டத்தை ரத்து செய்தது. தற்போது இந்தியாவில் பரம்பரை வரி இல்லை. இருப்பினும், சபீர் பாட்டியாவின் இந்த 55% பரிந்துரை சமூக வலைதளங்களில் புதிய பொருளாதார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொத்தில் 55% அரசுக்கா? சபீர் பாட்டியாவின் அதிரடி யோசனை! Inheritance Tax என்றால் என்ன?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk