பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் அந்நாட்டு அரசால் உடைத்து மூழ்கடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகும், அவர்களின் படகுகளை விடுவிக்காமல், உடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்வதையும், அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் சிங்கள அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. கைது செய்யப்படும் மீனவர்கள் அங்குள்ள நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு, தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் கூட, அவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தருவதில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரையிலான 6 ஆண்டுகளில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 200 க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை, மயிலட்டி, மன்னார், வவுனியா உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த படகுகளைத் தான் தகர்த்து அழிக்கும் பணிகளில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த இரு நாட்களில் மட்டும் கணிசமானஎண்ணிக்கையிலான படகுகள் உடைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து படகுகள் உடைக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகளின் அடிப்படையில் இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் உடைக்கப்பட்ட படகுகளின் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை. தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வங்கக் கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படும் போது, அவர்களின் படகுகளையும் விடுவிப்பது தான் நியாயமாகும். மாறாக, மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்வதும், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அவற்றை அழிப்பதும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலாகும். மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதால் இலங்கைக்கு எந்தவித பொருளாதார லாபமும் இல்லை. அவை வீணாக இலங்கை துறைமுகங்களில் இடத்தை அடைத்துக் கொண்டு தான் இருக்கும். ஒரு காலத்தில் இலங்கை மீனவர்களின் படகுகளை நிறுத்த இடம் இல்லை என்று கூறி தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அழிக்கிறது. அதனாலும், இலங்கைக்கு பயன் ஏற்படாது. ஆனாலும், தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து அழிப்பதன் நோக்கம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிப்பது தான். தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அழிப்பது இது முதல் முறையல்ல. 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரை 174 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருந்தது. அவற்றை உடைத்து கடலில் மூழ்கடிப்பதன் மூலம் அவை மூழ்கும் இடங்களில் செயற்கை பவளப்பாறைகளை வளர்க்க முடியும் என்றும், அதனால் மீன்வளம் பெருகும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை அரசுக்கு அந்நாட்டின் மீன்வளம் மற்றும் கடல்வளத்துறை பரிந்துரை செய்திருந்தது. அப்போதே, இந்த சதியை சுட்டிக்காட்டி தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி மத்திய,மாநில அரசுகளை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. எனினும், மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 30 க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு அழிக்கப்பட்டன.ப்போதும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், எஞ்சியுள்ள மீன்பிடி படகுகளும் தகர்க்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. ஒவ்வொரு மீன்பிடி விசைப்படகிலும் குறைந்தது 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வர். அதனடிப்படையில் ஒவ்வொரு மீன்பிடி படகின் மூலம் 10 மீனவக் குடும்பங்கள் நேரடியாகவும், படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களை இறக்குதல், உள்ளூரில் விற்பனை செய்தல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், படகுகளுக்கான பராமரிப்புப் பணிகளை செய்தல், படகுகளுக்கு தேவையான ஐஸ்கட்டி தயாரித்தல், எரிபொருள் நிரப்புதல் என 25 குடும்பங்கள் மறைமுகமாகவும் பயனடையும். இத்தகைய வாழ்வாதாரங்களை அழித்து தமிழக மீனவர்களை வங்கக்கடலில் இருந்து அகற்றுவதே இலங்கையின் திட்டம். இதை மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, இலங்கை ஆட்சியாளர்களை மத்திய அரசு உடனடியாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களின் படகுகள் உடைத்து நொறுக்கப்படுவதை தடுக்கவும், அந்த படகுகள் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப் படுவதையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் மீனவர்கள் பாதிக்கப் படுவதைத் தடுக்க மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு முயல வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை: தயார்நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்! “விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?” – உதயநிதி ஸ்டாலின் “தவெக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்பில் நிர்வாகத் திறமையை இழந்து விட்டது!” – வானதி சீனிவாசன் நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk